Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

36 மாதம்... 45 நாடுகள்... மோடியின் பயணத்தால் என்னவெல்லாம் நடந்தது?


மோடி வெளிநாடு பயணம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, 'மன்மோகன் சிங் அதிகம் வெளிநாடு செல்கிறார். இந்தியாவிலேயே இருப்பது இல்லை' என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பி.ஜே.பி குற்றம்சாட்டியது. ஆனால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்போதே பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடு செல்கிறார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பியதற்கு, "மன்மோகன் சிங்கைக் காட்டிலும் குறைவாகத்தான் மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்" என்று பதில் சொல்லியிருக்கிறார் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா. 

மோடி பிரதமராகப் பதவி ஏற்று 36 மாதங்கள் ஆன நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என 45 நாடுகளுக்குப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவற்றில், அமெரிக்காவுக்கு நான்கு முறையும், ஆப்கானிஸ்தான், சீனா, பிரான்ஸ், ஜப்பான், நேபாளம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு தலா இரண்டு முறையும் பயணித்திருக்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 36 நாடுகளுக்கு ஒருமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். 2017 மே மாதம் வரையிலான காலத்தில், மொத்தம் 56 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். கடைசியாக, 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மோடி, ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அதுவரை மொத்தம் ஆறு கண்டங்கள், 45 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

இலங்கையில் மோடி

'மோடி அதிக அளவில் வெளிநாடு சுற்றுலா செல்கிறார். அங்குள்ள மூத்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டுகிறார். இந்தியாவின் பிரச்னைகளைக் கவனிக்கத் தவறிவிட்டார். அயல்நாட்டுக்குச் செல்ல முடிந்த மோடியால், பஞ்சாப்பில் உள்ள விவசாயிகளைச் சந்திக்க முடியவில்லை. மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் எந்த நன்மையும் இல்லை. பொதுவாக வெளிநாட்டுப் பயணம், பேச்சுவார்த்தை என்றால் வெளியுறவுத் துறை அமைச்சர் கட்டாயம் இடம்பெறுவார். ஆனால், அமெரிக்கா போன்ற முக்கியப் பயணத்தின்போதுகூட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இடம் பெறுவது இல்லை' என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, "மன்மோகன் சிங் வெளிநாடு செல்வதையோ, இந்தியா திரும்புவதையோ யாரும் பெரிதாகக் கண்டுகொண்டது இல்லை. மன்மோகன் சிங்கைக் காட்டிலும் மோடி மிகக் குறைவான பயணங்களையே மேற்கொண்டிருக்கிறார். ஆனால், மன்மோகன் சிங் பயணத்தைக் காட்டிலும், மோடியின் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கு ஏராளமான சாதகங்களை உருவாக்கியிருக்கிறது" என்றார்.

சீனாவில் மோடி

மோடி ஆதரவாளர்களோ, "உலக அளவில் பொருளாதார மற்றும் அரசியல் பலம் மிக்க நாடாக இந்தியாவைக் காட்ட மோடியின் பயணம் உதவியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அணு எரிபொருள் விநியோக குழு நாடுகளில் இணையும் இந்தியாவின் முயற்சிக்கு மோடியின் வெளிநாட்டுப் பயணம் பெரிதும் உதவியிருக்கிறது. இந்த அமைப்புதான் அணுத் தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகிறது" என்கின்றனர்.

மன்மோகன் சிங்

உண்மையில், மன்மோகன் சிங் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் 35 நாடுகளுக்குத்தான் சென்றார். ஐந்து ஆண்டில், 144 நாட்கள் மட்டுமே வெளிநாட்டுப் பயணத்தில் இருந்திருக்கிறார். இரண்டாவது ஐந்தாண்டில் 38 நாடுகளுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், மோடியோ, முதல் மூன்று ஆண்டுகளில் 45 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

மோடி

கடந்த ஆண்டு நவம்பருக்குப் பிறகு மோடி வெளிநாடு எங்கும் செல்லவில்லை. தற்போது, ஐந்து மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு இந்த மாதம் முதல் மீண்டும் தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்க உள்ளார். முதலில், இலங்கைக்கும், பின்னர் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார். எல்லாப் பயணங்களையும் விட, இஸ்ரேல் பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நவீன ராணுவ கருவிகள் உற்பத்தி, ஏற்றுமதியில் இஸ்ரேல் முக்கியப் பங்கு வகிக்கிறது. மோடியின் இஸ்ரேல் பயணம், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் முயற்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close