Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ! #ISRO

ந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, தெற்கு ஆசிய செயற்கைக்கோள் என அழைக்கப்படும் ஜி-சாட் (GSAT-9) செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது இஸ்ரோ. இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று மதியம் 12.57-க்கு தொடங்கியது. ஜி.எஸ்.எல்.வி ரக எஃப்-09 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 50 மீட்டர் உயரமும், 2,230 கிலோ எடையும் கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுள்காலம் மொத்தம் 12 ஆண்டுகள் ஆகும்.

ஜி.எஸ்.எல்.வி

தகவல்தொடர்பு தொழில்நுட்பம், டி.டி.எச் சேவை, பேரிடர் கால மேலாண்மை, கல்வி, அண்டை நாடுகளுடனான தொடர்புகளை வளர்த்துக்கொள்ள இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. சார்க் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள மொத்த எட்டு நாடுகளில், பாகிஸ்தான் தவிர்த்து ஏனைய நாடுகள் இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்த உள்ளன. 235 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மூன்று ஆண்டு காலத்தில் தயாரித்துள்ளது. 450 கோடி ரூபாய் மதிப்பிலான சேவைகளை வழங்க உள்ள இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் சார்பாக சார்க் நாடுகளுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி, பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட் மூலம், 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஒரே ராக்கெட்டின் மூலம் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பிய நாடு என இதன் மூலம் இஸ்ரோ சாதனை படைத்தது. அந்த வகையில், இந்த 'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' விண்ணில் செலுத்தப்பட்டதும், இஸ்ரோவின் சாதனைகளில் ஒன்றாக இடம்பெறுகிறது.

தெற்கு ஆசிய செயற்கைக்கோள் - இஸ்ரோவில் பணிகள்

2014-ம் ஆண்டு நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் தான், தெற்காசிய நாடுகள் இணைந்து செயற்கைக்கோள் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் பேசிய மோடி, "சார்க் நாடுகள் இணைந்து சார்க் செயற்கைக்கோளை ஏவ வேண்டும். அண்டை நாடுகள் இடையே நட்புறவை வலுப்படுத்துவதே எங்கள் நாட்டின் கனவு. அதற்கு இந்த சார்க் செயற்கைக்கோள் உதவும். இந்த செயற்கைக்கோளை இந்தியாவின் சார்பாக சார்க் நாடுகளுக்குப் பரிசளிக்க விரும்புகிறோம்" எனப் பேசினார்.

சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டான் ஆகிய எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சார்க் நாடுகள் அனைத்தும் இணைந்து இந்த செயற்கைக்கோளை அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்ததால், முதலில் 'சார்க் செயற்கைக்கோள்' என இது அழைக்கப்பட்டது. ஆனால், 'இந்தியாவின் பரிசு எங்களுக்குத் தேவையில்லை' என பாகிஸ்தான் அறிவித்தது. மேலும், தங்களுக்கான செயற்கைக்கோள் திட்டத்தை தாங்களே பார்த்துக்கொள்வதாக பாகிஸ்தான் தெரிவித்துவிட்டது. அதன்பின், சார்க் செயற்கைக்கோளின் பெயர் 'தெற்கு ஆசிய செயற்கைக்கோள்' என மாற்றப்பட்டது. பூடான் மற்றும் மாலத்தீவுகள் நாடுகள் இதுவரை விண்வெளி ஆய்வுத் திட்டத்தை மேற்கொண்டதில்லை. எனவே, இந்த தெற்கு ஆசிய செயற்கைக்கோள் மூலமாக இந்த நாடுகள் மிகுந்த பயன் பெறும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கி பாத்' வானொலி உரையில் இதுகுறித்து, "அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவைப் பேணி வருகிறது. அவற்றின் வளர்ச்சியிலும் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது. சார்க் நாடுகளின் வளர்ச்சிக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘தெற்கு ஆசிய செயற்கைக்கோள்’ விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது சார்க் நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் விலைமதிப்பற்ற பரிசு" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close