Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டித்த வீரரின் மகளை தத்தெடுத்த ஐ.ஏ.எஸ் தம்பதி!

பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர் பரம்ஜீத் சிங்கின் மகளை, ஹிமாச்சல்பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதி தத்தெடுத்துள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் குடும்பம்

காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது, பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தக்க பதிலடியும் கொடுத்துவருகின்றனர். கடந்த மே 1-ம் தேதி காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணகாதி என்ற இடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர். தாக்குதல் முடிந்த பிறகு பலியான இந்திய வீரர்களின் உடலை மீட்டபோது, அவர்களது தலை துண்டிக்கப்பட்டிருந்தது; உடல் சிதைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு நமது ராணுவ வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இந்தச் சம்பவம் நாட்டு மக்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியிருந்தது. தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு, பல தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். அந்த வகையில், ஹிமாச்சல்பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதி, பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டிக்கப்பட்ட வீரர் பரம்ஜீத் சிங்கின் 12 வயது மகளைத் தத்தெடுத்துள்ளனர்.

ஹிமாச்சலில் குல்லு நகர துணை கமிஷனராக இருப்பவர் யூனிஸ்கான். இவரது மனைவி ஆன்ஜும் ஆரா. இவர் சோலன் மாவட்ட எஸ்.பி-யாக இருக்கிறார். இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறான். அத்துடன் பரம்ஜீத் சிங்கின் மகள் கவுஸ்தீப் கவுரையும் மூத்த மகளாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தலை துண்டிக்கப்பட்ட ராணுவ வீரர் மகளை தத்தெடுத்த தம்பதி

இதுகுறித்து ஆன்ஜும் ஆரா கூறுகையில், “கவுஸ்தீப் கவுர் அவள் வீட்டிலேயே இருப்பாள். நாங்கள் அடிக்கடி சென்று பார்த்துக்கொள்வோம். அவளது ஒவ்வொரு தேவையையும் தந்தை பரம்ஜீத் சிங் சார்பில் நாங்கள் நிறைவேற்றுவோம். அடிக்கடி அவளைப் போய்ச் சந்தித்து, பிரச்னைகளைக் கண்டறித்து தீர்க்க முடிவுசெய்துள்ளோம். கவுஸ்தீப் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டுமென்றாலும் சரி, ஐ.பி.எஸ்-ஆக ஆசைப்பட்டாலும் சரி, அவளது தந்தை ஸ்தானத்தில் இருந்து அதை நாங்கள் நிறைவேற்றுவோம்'' எனத் தெரிவித்துள்ளார். 

யூனிஸ்கான் கூறுகையில்,'' நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினரின் வலி எங்களுக்குத் தெரியும். நாம் பொறுப்புமிக்கக் குடிமக்களாக இருந்து இதுபோன்ற விஷயங்களை அணுகவேண்டும். தற்போது அவளது சொந்த ஊரில் கவுஸ்தீப் படித்து வருகிறாள். வேறு பள்ளியில் படிக்க ஆசைப்பட்டாலும் உடனே நாங்கள் ஏற்பாடு செய்வோம். அவளது வாழ்க்கை முழுவதும் அவள் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நாங்கள் உதவிகரமாக இருப்போம்'' என்றார்.

கவுஸ்தீப் கவுரின் படிப்பு முதல் திருமணம் வரை அனைத்து செலவுகளும் தாங்களே செய்யப்போவதாக இந்த ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தம்பதி தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் தார்ன் மாவட்டத்தில் உள்ள வென்பூய்ன் என்ற கிராமம்தான் பரம்ஜீத் சிங்கின் சொந்த கிராமம். கிராமத்தில் வீடு கட்டி வந்தார். விரைவில் குடிபுகவும் திட்டமிட்டிருந்தார். அதற்குள் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுவிட்டார். 'பரம்ஜீத் சிங்கின் இளைய மகன் ராணுவத்தில் சேர்ந்து தந்தையின் மரணத்துக்குப் பழி வாங்குவான்' என  பரம்ஜீத் சிங்கின் மனைவி பிரேம்ஜித் கவுர் சபதமேற்றுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close