Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுவையை அலற வைக்கும் தொடர் கொலைகள்: எஸ்.பி அதிரடி சஸ்பெண்ட்..!!

புதுச்சேரியில் நடக்கும் தொடர் கொலைகள், கொள்ளைகளைத் தடுக்கத் தவறியதாகவும், குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததற்காகவும் காவல்துறை எஸ்.பி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

deivasigamani

புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக ரவுடிகள், கூலிப்படைகளின் அட்டகாசம் அதிகரித்திருக்கின்றது. பொது இடங்களில் மக்கள் முன்னிலையிலேயே வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு சர்வசாதாரணமாக ரவுடிகள் தப்பிச்செல்வது தொடர்கதையாகி வருகின்றது. அதேபோல நகரப் பகுதிகள் மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளிலும் வழிப்பறி, செயின்பறிப்பு போன்ற சம்பவங்கள் வரிசையாக அரங்கேற ஆரம்பித்தது. குறிப்பாக அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் வீரப்பன், காங்கிரஸ் பிரமுகர் மாயவன், தொழிலதிபர் வேலழகன் போன்றவர்கள் கிராமப்புறங்களில் வரிசையாக கொலை செய்யப்பட்டனர்.

ஆனால் இது தொடர்பாக பெரியதாக எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. “போலீஸ் அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகளுடன் நெருங்கியத் தொடர்பில் இருக்கிறார்கள். கொலைக் குற்றவாளிகளைக் கூட லட்சக் கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு காப்பாற்றுகிறார்கள்” என்று மக்கள் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர். குறிப்பாக திருபுவனையைச் சேர்ந்த தொழிலதிபர் வேலழகன் படுகொலையில், கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் தலையீடு இருக்கிறது என்று அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தெரிவித்தனர். அதேபோல இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி கிராமப் பகுதியான பாகூரைச் சேர்ந்த சுவேதன் என்பவரைக் கொலை செய்ததோடு, அவரது தலையைத் துண்டித்து காவல் நிலையத்திலேயே வீசிச் சென்றது புதுச்சேரி காவல்துறையின் நிலையைத் தோலுரித்துக் காட்டியது.

இந்நிலையில் கிராமப் புறங்களில் நடந்த தொடர் கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்டவைகளைத் தடுக்கத் தவறியதாக புதுச்சேரி மேற்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.தெய்வசிகாமணியை சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி சுனில்குமார் கௌதம் உத்தரவிட்டிருக்கிறார். தொடர் கொலைகள் எதிரொலியாக காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபற்றி பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, ''புதுச்சேரியில் அதிகரித்துவரும் குற்ற சம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி ரவுடிகளையும், குண்டர்களையும் ஒடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றவர்களுக்கும் முன் உதாரணமாக அமையும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.⁠⁠⁠⁠

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close