Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்குப் பதிவு நம்பகத்தன்மையை உறுதிசெய்யுமா தேர்தல் ஆணையம்?

Najim Jaithi

ஈ.வி.எம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுபோன்ற எந்தவித முறைகேடுகளுக்கும் வாய்ப்பே இல்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

ஈ.வி.எம் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து அரசியல்கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டறிவதற்காகவும் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பி.ஜே.பி, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் இக்கூட்டத்தில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. அ.தி.முக-வின் இரு அணிகளும் இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றன. 

கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளும், ஈ.வி.எம்-களுக்குப் பதிலாக, இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், அதனை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, இந்தியாவில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் உள்பட இனிவரும் காலங்களில் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் வகையில், ஈ வி எம்-களுடன் வி.வி.பி.ஏ.டி (Voter Verified Paper Audit Trial) கருவிகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வி.வி.பி.ஏ.டி மெஷின்களை வாங்குவதற்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகக் கூறினார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்முறை விளக்கக் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், அரசியல் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, முறைகேடுகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கான வாய்ப்பு அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் என்றார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், நம்பகத்தன்மை கொண்டவை என்பதை தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், ஒரு சில அரசியல் கட்சிகள், அந்த எந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது என்று தொடர்ந்து கூறி வருகின்றன.

தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள் மின்னணு எந்திரங்களை நம்புவதும், தோல்யிடையும் கட்சிகள் அந்த எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதும் வாடிக்கையாகவே உள்ளது. என்றாலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட தற்போதும் வாக்குப்பதிவு எந்திரங்களுக்குப் பதிலாக, வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஜனநாயக ரீதியில், அரசியல் கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களை தீர்க்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், வாக்குச்சீட்டு முறைக்குப் பதிலாக, வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையைக் கொண்டுவர இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வி.வி.பி.ஏ.டி கருவிகள் மூலம், வாக்காளர்கள், தாங்கள் விரும்பிய கட்சிகளின் வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்தோமா என்பதை அறிந்து கொள்ள முடியும். எனவே, வி.வி.பி.ஏ.டி கருவிகளுடன் எதிர்காலத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

எப்படியோ அரசியல் கட்சிகளின் சந்தேகம் தீர்ந்து, ஈ.வி.எம்.கள் மீது மக்களுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் நம்பிக்கை உருவானால் சரி!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close