Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நோய்வாய்ப்பட்ட மனைவி... மகனைச் சுமந்தபடி ஆட்டோ ஓட்டிய மும்பை டிரைவர்!

ஆட்டோ டிரைவர்மும்பை, வெர்சோவா பகுதியைச் சேர்ந்தவர் முகமது சயீத். வயது 26. அவர் மனைவி யாசீமுக்கு 24 வயது. முகமது சயீத் ஆட்டோ டிரைவர். இந்தத் தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகனும், மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளனர். அளவான, அழகான குடும்பம். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் போயிக்கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இளம் வயதுடைய யாசீமை பக்கவாதம் தாக்கியது. நடக்க முடியாமல்  படுத்த படுக்கையானார். முகமது சயீத்தின் வாழ்க்கை அப்படியே தலைகீழானது. மகிழ்ச்சியும் குதூகலமுமாகவும் போயிக்கொண்டிருந்த வாழ்க்கை, துயரம் நிறைந்த நரகமாயிற்று.

இந்தத் தம்பதிக்கு உறவினர்களும் கிடையாது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் மனைவியைப் பார்த்துக்கொள்வதா, தாய்ப்பாலுக்காக அழும் மூன்று மாத கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்வதா, அம்மாவுக்கு என்னவாயிற்று என்ற பயத்துடன் இருக்கும் இரண்டு வயது மகனுக்கு விளக்கம் சொல்வதா... எனத் தவித்துபோனார் சயீத். எவ்வளவு நாள்தான் வேலைக்குப் போகாமல் மனைவியைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்க முடியும்? ஆட்டோ ஓட்டினால்தான் அரை வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும். மீண்டும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம். மூன்று மாதக் குழந்தையைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துக்கொள்ள, மகனை என்ன செய்வது எனத் தெரியவில்லை. 

`சரி... நம்முடனே இருக்கட்டும்' என வைத்துக்கொண்டார். வாடிக்கையாளர்கள் வந்தால், மகனை முன் இருக்கையில் தன்னுடன் வைத்துக்கொள்வார். சிறுவன் என்பதால் அடிக்கடி உறங்கிவிடுவான். அப்போது முன் இருக்கையில் மகனை மடியில் கிடத்தியவாறே ஆட்டோ ஓட்டுவதை முகமது சயீத் வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன், வினோத் கப்ரி என்பவர் முகமது சயீத்தின் ஆட்டோவில் பயணித்துள்ளார். மடியில் சிறுவன் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து, என்ன... ஏதுவென விசாரித்துள்ளார். 'ஏன் சார், என்னோட வேதனை என்னோடவே போகட்டும். நீங்க எங்கே போகணும்னு சொல்லுங்க இறக்கிவிடுறேன்'  என்று அவரிடம் முகமது சயீத் சொல்லியிருக்கிறார். வினோத் அவரை விடவில்லை. வற்புறுத்திக் கேட்ட பிறகு முகமது சயீத், தனது குடும்ப நிலைமையைக் கூறியிருக்கிறார். 

முகமது சயீத்தின் மடியில் மகன் கிடப்பது போன்ற புகைப்படத்தை எடுத்துக்கொண்ட வினோத் கப்ரி, அவரது வங்கிக்கணக்கு, போன் நம்பர் போன்றவற்றையும் கேட்டு வாங்கியுள்ளார். `இதையெல்லாம் இவர் ஏன் கேட்கிறார்?' என முகமது சயீத்துக்கு அப்போது புரியவில்லை. முகமது சயீத்தின் நிலைமையை, புகைப்படத்துடன் வினோத்  ட்வீட்  செய்ய,  பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் ரீட்வீட் செய்திருக்கிறார். இதையடுத்து,  முகமது சயீத்துக்கு உதவிகள் குவியத் தொடங்கின. முகமது சயீத் கேட்காமலேயே அவரது வங்கிக்கணக்கில் பலரும் பணம் செலுத்திவருகின்றனர். சயீத்தின் மனைவி யாசிமுக்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகள் முன்வந்துள்ளன.

இதுகுறித்து சயீத் கூறுகையில், ''மகன் என்னுடன் இருப்பதால் பல கஸ்டமர்கள் எனது ஆட்டோவைத் தவிர்த்திருக்கின்றனர். எங்கள் நிலை அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல நாள்கள் வெறும் வயிற்றுடன் உறங்கியிருக்கிறோம். இப்போது எனக்கு எதிர்பாராத இடத்தில் இருந்தெல்லாம் அழைப்பு வருகிறது. மும்பை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.  அறிமுகமே இல்லாத வினோத் கப்ரியால் கிடைத்த உதவி இது. எனக்கு உதவி செய்வதற்காகவே இறைவன் அவரை அனுப்பிவைத்ததாக நினைக்கிறேன்'' என்கிறார் சற்று நிம்மதி அடைந்தவராக. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close