Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரீமா லாகு... அன்பான அம்மாவை இழந்தது பாலிவுட்!

சினிமாவில் 'அம்மா' கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஒவ்வொரு மொழி சினிமாவுக்கும் ஒரு ஃபேவரைட் அம்மா நடிகை இருப்பார். தமிழ் சினிமாவுக்கு மனோரமா போல, பாலிவுட்டில் அம்மா வேடத்தில் நடித்து முத்திரை பதித்த ரீமா லாகு, நேற்றிரவு மரணமடைந்தார். 

பாலிவுட் அம்மா நடிகை ரீமா லாகு மரணம்

மும்பையில் வசித்து வந்த ரீமா லாகுவுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து, உடல் நிலையைக் கண்காணித்து வந்தனர். அதிகாலை 3.15 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

ரீமா மரணம் குறித்து அவரது மருமகன் வினய் வைகுல் PTIக்கு கூறுகையில், '' அத்தைக்கு உடலில் எந்தவிதப் பிரச்னையும் இருந்ததில்லை. திடீரென்று இரவு 1 மணியளவில் நெஞ்சுவலி என்றார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தோம். சிகிச்சையளித்தும் பலனளிக்கவில்லை. இப்போது அவர் உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை'' என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அமீர்கான் நடித்த 'Qayamat Se Qayamat Tak' படத்தில் ஜுகி சாவ்லாவின் அம்மாவாக ரீமா நடித்ததைத் தொடர்ந்து பல பிரமாண்ட இந்திப் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. ரீமாவின் சாந்தமான முகம், கதைக்கு ஏற்ற வகையில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் காரணமாக விரைவிலேயே பாலிவுட்டின் ஆஸ்தான அம்மா நடிகை ஆனார். 

பாலிவுட்டைப் பொறுத்தவரை வருடக்கணக்கில் ஓடிய படங்களில் எல்லாம் ரீமா லாகுதான் அம்மா வேடத்தில் நடித்திருப்பார். சல்மான் கானுடன் 'மைனே பியார் கியா', சாஜன் படத்தில் சஞ்சய் தத், சல்மானுக்குத் தாய். ஜெய் கிஷானில் அக்ஷய் குமார்,  ஷாருக்குடன் 'கல் ஹோ நா ஹோ'  'குச்சு குச்சு ஹோதா ஹே'  படத்தில் கஜோலுக்கு அம்மா வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். மாதுரி தீக்ஷித்துக்கு ரீமா அம்மாவாக நடித்த 'ஹம் ஆப்கே ஹைன் ஹோன்' படம் இந்தியா முழுவதும் அவரை பாப்புலராக்கியது. தமிழகத்தில்கூட, இந்த படம் 100 நாள்களைக் கடந்து ஓடியது. சல்மான் கானுக்கு மட்டும் 6 படங்களில் ரீமா அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பாலிவுட் அம்மா நடிகை ரீமா லாகு மரணம்

கடந்த 1958-ம் ஆண்டு புனேவில் பிறந்த ரீமா பள்ளிப் படிப்பு முடிந்தவுடனே மராத்தி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அப்போது, விவேக் லாகு என்ற மராத்தி நடிகருடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். மராத்திப் படங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர், 1980-ம் ஆண்டு வாக்கில் 'கலியூக் ' படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். ரீமாவுக்கு ரன்மேயி என்ற ஒரே மகள் இருக்கிறார். இவரும் சினிமா நடிகைதான். 

கடந்த 2015-ம் ஆண்டு ரீமா லாகு 'கத்யார் கல்ஜத் குசாலி' என்ற மராத்தி படத்தில் நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசிப் படம். அதற்குப் பிறகு, படங்களில் நடிப்பதைக் குறைத்த நிலையில் ரீமா மரணம் அடைந்திருப்பது, பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 'அன்னையர் தினம் முடிந்த நான்கு நாள்களில் பாலிவுட்டின் அன்பான அம்மா மரணம் அடைந்திருப்பது வேதனையைத் தருகிறது' எனவும் 'பாலிவுட் தனது லவ்லி மம்மியை இழந்து விட்டது' என்றும் ரசிகர்கள் ட்வீட் செய்து விருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close