Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய ஓம்பிரகாஷ் சவுதாலா, +2 தேர்ச்சி பெற்ற அதிசயம்!

`ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலா, ப்ளஸ் டூ  வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்' என்ற செய்தியை, அவரது குடும்பத்தினர் சந்தோஷத்துடன் வெளியிட்டிருந்தனர். ஹரியானா மாநிலத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் வழக்கில் பத்து ஆண்டுகள் தண்டனை பெற்று, தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 82. சிறைவாசியாக இருந்தாலும் இந்த வயதிலும் படித்துத் தேர்ச்சிபெற வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டதே ஆச்சர்யம். அதிலும் ப்ளஸ் டூ  தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றுள்ளார் என்ற தகவல் வேறு, புருவத்தை உயர வைத்தது. 

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா

ஆனால், இப்பொது ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளிவந்துள்ள செய்திதான் காமெடியோ காமெடி! திகார் சிறையில் ஏழாம் எண் அறையில் சவுதாலா இருக்கிறார். இவரது மூத்த மகன் அஜே சவுதாலாவும் இதே வழக்கில் தந்தையுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் கல்வி வாரியங்களில் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ தவிர National Institute of Open Schooling (NIOS) என்று அழைக்கப்படும் தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம்தான்,  கல்வி கற்கும் வாய்ப்பை கைதிகளுக்கு வழங்குகிறது. 

 National Institute of Open Schooling  நடத்தும் 10ஆம் வகுப்புக்கான தேர்வைத்தான் திகார் சிறையில் இருந்தபடி ஓம்பிரகாஷ் சவுதாலா எழுதியுள்ளார். சமூக அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இந்தியக் கலாசாரம், பிசினஸ் போன்ற பாடங்களுக்கான தேர்வை இந்தி மொழியில் அவர் எழுதியிருக்கிறார். தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்காகக் காத்திருக்கிறார். இதற்கிடையேதான் இவரின் இளைய மகன் அபே சவுதாலா, தனது தந்தை ப்ளஸ் டூ-வில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றுள்ள அறிவிப்பை வெளியிட்டார். 

அபே சிங் சவுதாலா கூறுகையில் ''பேரனின் திருமணத்துக்காக  பரோலில் வீட்டுக்கு வந்திருந்த தந்தை, ப்ளஸ் டூ தேர்வு எழுதுவதற்காக மீண்டும் திகார் சிறைக்குச் சென்றார்.  ப்ளஸ் டூ தேர்வில் அவர் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருக்கிறார் '' எனக் கூறினார். அபே சிங் சொன்ன தகவலை நம்பி, மீடியாக்களும் `ஓம்பிரகாஷ் சவுதாலா ப்ளஸ் டூ பாஸ்' எனச் செய்தி வெளியிட்டது. ஆனால், எந்தெந்தப் பாடங்களில் என்ன மதிப்பெண் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

`ஓம்பிரகாஷ் சவுதாலா, தற்போது ப்ளஸ் டூ தேர்வு எழுதவில்லை' என்று National Institute of Open Schooling மறுப்பு தெரிவித்துள்ளது. `ஓம் பிரகாஷ் சவுதாலா, 10 ஆம் வகுப்பு தேர்வுதான் எழுதியுள்ளார். முடிவுகள்கூட ஜூன் மாதம்தான் வெளியிடப்படும்.  10 ஆம் வகுப்புக்கான தேர்வு எழுதிவிட்டு எப்படி  ப்ளஸ் டூ  முதல் வகுப்பில் பாஸ் செய்வார்?' என தேசிய திறந்தவெளி கல்வி நிறுவன அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதுகுறித்து அபே சவுதாலா, '' எனது தந்தை ப்ளஸ் டூ தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றிருப்பதாக, தனது அண்ணனின் மகன் (தந்தையுடன் சிறையில் இருக்கும் அஜே சவுதாலா மகன் திக்விஜய் சவுதாலா) சொன்னார் ''  எனக் கூறுகிறார். 

சிறை அதிகாரிகளோ, ''ஓம்பிரகாஷ் சவுதாலா பாஸ் ஆன எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது. ஒருவேளை அவரது வீட்டுக்கு எதுவும் தகவல் வந்ததா என்றும் எங்களுக்குத் தெரியவில்லை'' என்கின்றனர். 

'ஆசிரியர் பணி நியமனத்திலிருந்து தேர்வு முடிவு  வரை பித்தலாட்டம்தான்' என ஹரியானா மக்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close