Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை... காப்பாற்றிய வனத்துறை மற்றும் பொதுமக்கள்!

யானை தண்ணீர்

இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் யானை என்ற சொல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. யானை தாக்கியதில் மூன்று பேர் பலி, ஊருக்குள் நுழைந்த யானைகள், தோட்டத்தை நாசம் செய்த யானைகள், யானை மர்ம மரணம் என்று அவ்வப்போது யானைகள் பற்றிய செய்திகளும் வந்து கொண்டேயிருக்கின்றன. தினம் தினம் யானைகளின் வாழ்விடம் குறித்த விவாதங்களும்  கேள்விகளும் எழுகின்றன. இந்தச் சூழ்நிலையில், காடு தாண்டி வந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஐந்து மாத குட்டி யானையை மீட்ட சம்பவம் ஒன்று கோவை மாவட்டத்தில் நடந்திருக்கிறது. 

பெரியநாயக்கன்பாளையம் ராயரூத்துபதி ரோஸ் கார்டன் பகுதியில் வனத்துறை, விலங்குகளுக்காக பத்தடி ஆழ குடிநீர் தொட்டியை அமைத்திருக்கிறது. தண்ணீர் தேடி வரும் விலங்குகள் இந்தத் தொட்டியில்தான் தண்ணீர் அருந்துகின்றன. நேற்று காலை இந்தப் பகுதிக்குத் தண்ணீர் அருந்த தாய் யானையோடு, ஐந்து மாத  குட்டி யானையும் வந்திருக்கிறது. தண்ணீர் அருந்திய தாய் யானை, குட்டி யானை  வந்துவிடும் என்ற நம்பிக்கையில் மீண்டும் வனப்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. தண்ணீரைப் பார்த்த ஐந்து மாத குட்டி யானை நீரில் விளையாட ஆரம்பிக்கிறது. எதிர்பாராத நேரத்தில் பத்தடி ஆழ தொட்டியில்,  ஐந்தடி அளவே இருக்கும் குட்டி யானை விழுந்து விடுகிறது. தும்பிக்கையை மட்டும் நீருக்கு வெளியே நீட்டி உதவிக்காகக் காத்திருக்கிறது. இதைப் பார்க்கிற ஊர் மக்கள் தண்ணீர் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பிக்கிறார்கள். வனத்துறைக்கும் தகவல் கொடுக்கப்படுகிறது. 

 

 

அதன் பின் நடந்த நிகழ்வுகளை விளக்குகிறார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிக்குமார்.

 "நேத்து காலைல ஒன்பது மணி இருக்கும். தோட்டத்துல புகுந்த ஒன்பது யானைகளை விரட்டுகிற வேலையில் இருந்தோம். அப்போதான் குட்டி யானை தொட்டியில விழுந்த தகவலைச் சொன்னாங்க. நாங்க போகும் போது தும்பிக்கை மட்டும்தான் வெளிய இருந்துச்சு. எப்படி வெளிய எடுக்குறதுனு யோசிச்சு தும்பிக்கைல ஒரு கயிறைக் கட்டி மெதுவா இழுத்தோம். யானைக்கு ஒரு பிடிப்பு கிடைக்கவும் மெதுவா மேல தூக்க முயற்சி பண்ணுனோம். தண்ணிக்குள்ள இருக்க யானையை மேல ஈஸியா கொண்டு வரலாம். ஆனா தொட்டிக்கு வெளிய தூக்கி கொண்டு வருவது ரொம்பக் கஷ்டம். குட்டி யானை சத்தம் போட்டு தாய் யானை வந்துருச்சுனா இன்னும் பெரிய பிரச்னை ஆயிரும். கடைசியா குட்டி யானைக்குக் கழுத்துல ஒரு கயிறைப் போட்டு இழுத்தோம். யானையும்  தொட்டியோட விளிம்புல ரெண்டு காலையும் வச்சு வெளிய வந்துடுச்சு. வெளியே வந்த குட்டி யானை சத்தம் போட்டுட்டே வனப்பகுதிக்குள்ள போய்டுச்சு. சரியான நேரத்துல தகவலும் சொல்லி உதவியும் செய்த  ஊர் மக்களுக்கு நன்றி சொல்லியே ஆகணும்" என்கிறார். 

வனப்பகுதிகளின் சுருக்கம், காடு அழிப்பு, மின்சார வேலிகள், யானைகளின் வலசைப்பாதைகள் அடைப்பு என யானைகளுக்கு எதிராக ஒரு மறைமுக வன்முறை தினம் தினம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் எதிர்வினைதான் கடந்த வாரம் கோவையில் யானை தாக்கி பலியான நான்கு உயிர்கள். எந்த ஒரு விலங்கும் காடு தாண்டும்போது வன்முறைக்குப் பலியாகிவிடுகிறது. அல்லது வன்முறையை நிகழ்த்திவிட்டுச் சென்று விடுகிறது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close