Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுவையில் பற்றி எரியும் மருத்துவ சீட் விவகாரம்... உச்சகட்ட மோதலில் கிரண்பேடி, நாராயணசாமி!

'புதுச்சேரிக்கான எந்த நிதியை நான் தடுத்தேன் என்று எந்த அமைச்சராவது தைரியமாகக் கூற முடியுமா? அந்த ஃபைலை காண்பிக்க முடியுமா?', என்று கிரண்பேடியும், 'ஒன்றும் இல்லாத பிரச்னையை ஆளுநர் ஊதிப் பெரிதாக்கி வருகிறார். மாநில அரசின்மீது நம்பிக்கை இல்லா விட்டால் அவர் புதுவையை விட்டுச் சென்று விடலாம்', என்று முதல்வர் நாராயணசாமியும் மோதிக் கொள்வது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

kiran

மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்திருக்கிறது. சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது ஏற்பட்ட கடும் அமளியால் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான இடங்களில் 50% புதுச்சேரி அரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதை நிரப்பியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கவர்னர் கிரண்பேடி பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் சுயநிதிக் கல்லூரிக்கு 62 மாணவர்களும் நிகர்நிலைப் பல்கலைக் கழகக் கல்லூரிக்கு 58 மாணவர்களும் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தைச் சுயநிதிக் கல்லூரிகள் ஏற்றுக் கொண்ட நிலையில் நிகர்நிலைப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் ஏற்காமல் மாணவர்களைச் சேர்க்க மறுத்தன. இது தொடர்பாக வழக்கறிஞர் மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்திருந்தார். அதில் ஆளுநர் செயலாளர் தேவநீதிதாசும் வாதியாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தரம் கொண்ட அமர்வு, 'நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைத் தற்காலிகமாக ரூ.10 லட்சம் கட்டணம் பெற்றுக் கொண்டு வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்க்க வேண்டும். 20-ம் தேதி அவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்க வேண்டும்', என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

narayanasa

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கவர்னர் கிரண்பேடி, 'புதுச்சேரியில் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டும் கல்லூரிகள் சேர்க்க மறுத்ததால் மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். தற்போது, உயர்நீதிமன்றம் மூலம் அவர்களுக்குத் தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக தலைமை நீதிபதி அமர்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்னையில் அரசே தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் நிலை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியதால்தான் ஆளுநர் மாளிகையே நேரடியாகத் தலையிட வேண்டியிருந்தது. என்னுடைய உத்தரவின்படிதான் ஆளுநர் செயலர் தேவநீதிதாஸ் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வாதியாக இணைந்து கொண்டார். அரசின் செயல்பாடுகளில் வேறுபாடு எழுந்ததால்தான் நான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். சென்டாக் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை ஏற்பட தற்போதுள்ள அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும். தற்போதுள்ள குழுவை நீக்க வேண்டும். நான் பணி விதிகளின்படி தான் செயல்படுகிறேன். எனது அதிகாரத்தைக் குறைக்க வேண்டும் என மாநில அரசு விரும்பினால் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இதைச் செய்ய வேண்டியது மத்திய அரசுதான். சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்றாலும் அதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்யும். அனைத்து அதிகாரங்களுமே சட்டத்துக்கு உட்பட்டதுதான். விதிகளில் திருத்தம் செய்தால் அதற்கேற்றவாறு செயல்படுவேன். மத்திய அரசின் நிதி எதையும் புதுச்சேரிக்கு வருவதை நான் தடுக்கவில்லை. நான் எந்த நிதியைத் தடுத்தேன் என்று எந்த அமைச்சராவது தைரியமாகக் கூற முடியுமா? அதற்கான ஃபைலை காண்பிக்க முடியுமா ? இதை சவாலாக விடுக்கிறேன்', என்றார் ஆவேசமாக.

தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, 'இந்தத் தீர்ப்பில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, யுஜிசி ஆகியவைதான் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்டாக் முறையாக செயல்படவில்லை என அதில் எங்கும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் சென்டாக் கமிட்டியை மாற்ற வேணடும் என ஆளுநர் கூறுவதற்கு என்ன காரணம்? 21 மாணவர்களை ரூ.5.5 லட்சம் கட்டணத்தில் சேர்ப்பதாக நிகர்நிலைப் பல்கலைகழங்களுக்கு ஆளுநர் அழைத்துச் சென்றார். ஆனால் பின்னர் நீதிமன்றத்தைதான் நாடினார். தற்போது, இடைக்கால கட்டணம் ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்டாக் சேர்க்கையில் அரசு முறைகேடு புரிந்ததாக ஆளுநர் நிரூபிக்க முடியுமா? துணைநிலை ஆளுநர் சுய விளம்பரத்துக்காகவும், அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார். இந்த வழக்கில் நீதிபதிகளைத் தூண்டும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது.

ஆளுநர் பதவி புனிதமான பதவியாகும். தொண்டு நிறுவன நிர்வாகி போல் செயல்படுகிறார். ஒன்றுமில்லாத பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி வருகிறார். மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லா விட்டால் ஆளுநர் புதுவையை விட்டுச் சென்று விடலாம்', என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close