Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”படிப்பறிவு இல்லைனா ஏமாத்துவீங்களா?” - அனல்மின் நிலைய திட்ட அவதியில் செய்யூர் மக்கள்

செய்யூர்

தொழில்மயமாக்கலுக்குக் கிராமங்களின் இயற்கை வளங்கள் தொடர்ந்து இரையாகிக்கொண்டிருக்கும் காலம் இது. நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டத்திலிருந்து தப்பிக்கத் தொடர்ந்து போராடி வருகிறது. மீத்தேன் திட்டத்தால், குடிதண்ணீர்கூட உபயோகிக்க முடியாத சூழலில் தஞ்சாவூர் மாவட்டக் கதிராமங்கலம் கிராமம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. கடலோர மீனவப் பகுதிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. எண்ணூர் எண்ணெய்க் கசிவுகள் மற்றும் ஏற்கெனவே அந்தப் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் தொழிற்சாலைகள், நடப்பில் இருக்கும் இனையம் சரக்கு துறைமுகத் திட்டம் என மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கும் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், 2011-இல் தொடங்கப்பட்ட செய்யூர் அனல்மின் நிலையத் திட்டம் கிடப்பில் இருந்த நிலையில், மீண்டும் அதற்கான ஆயத்தங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

செய்யூர், விளாம்பூர், பனையூர். இவை, செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று கிராமங்கள். குறிப்பாக மா, பலா, வாழை என முக்கனிகளின் விளைநிலம், விளாம்பூர் பகுதி. செய்யூர், பனையூர் இரண்டும் மீனவ மக்களின் வசிப்பிடம். தங்களது கிராமத்தில் வரவிருக்கும் அனல்மின் நிலையத்துக்கு எதிராகப் பல காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த மூன்று கிராமத்து மக்களும். 

விளாம்பூர் மக்கள் போராட்டம்

இந்த அனல்மின் நிலையத்துக்குத் தேவையான கரி இறக்குமதிக்காகவே... பனையூரில் சரக்குத் துறைமுகம் ஒன்று கட்டுமானத்தில் இருக்கிறது. இந்த ஊரில், இறக்குமதி செய்யப்படும் கரியைக் கரித்தூக்கி இயந்திரம் வழியாகச் செய்யூருக்கு எடுத்துவருவதுதான் திட்டம். கரித்தூக்கி இயந்திரம், பசுமை சூழ்ந்த விளாம்பூர் கிராம வயல்வெளிகள் வழியாகவே வந்தாக வேண்டும்.

மூன்று திட்டங்கள்... மூன்று பாதிப்புகள்... மூச்சுத்திணறும் கிராமங்கள்!

விளாம்பூர் மக்கள் போராட்டம்

''கரித்தூக்கி இயந்திரம் விளாம்பூர் வழியாக வருவதால் கரியிலிருந்து வெளியேறும் அத்தனை மாசும் அந்தப் பகுதியின் வளமான நிலங்களையும், அங்கே வாழும் மக்களையும் பாதிக்கும். இது மட்டுமில்லாமல், செய்யூரில் அனல்மின் நிலையம் கட்டப்படும் நிலையில்... அதன் அத்தனைக் கழிவுகளும் கடல் நீரில்தான் கலக்கும். அந்தக் கடல்தான் எங்கள் வாழ்க்கையே. அதை விட்டுவிட்டு நாங்கள் எங்கே போக முடியும்” என்கிறார், அந்தப் பகுதி மீனவர் சதீஷ். தொடர்ந்து அவர், ''இதுபோக பனையூரில், ஆறும்கடலும் சேரும் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் ஒன்று அமைத்துத் தரத்தான் நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தோம். ஆனால், அரசாங்கத்தின் ஆதாயத்துக்காக இத்தனை திட்டங்களையும், இயற்கை மாறாமல் இருக்கிற எங்கள் கிராமங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று வருத்தமுற்றுப் பேசியவரிடம், ''உங்கள் பகுதியில் இத்தனை திட்டங்களும் வந்தால், உங்களுடைய பொருளாதாரம்தானே வளரும்'' என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், ''இப்படித்தான் மகாபலிபுரம் பக்கத்தில் இருக்கும் சூலேரிகாட்டுக் குப்பம் பகுதியில், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கொண்டுவந்தனர். அந்தப் பகுதி மக்களுக்கு வேலைதருவதாகவும் சொன்னார்கள். வேலையும் கிடைக்கவில்லை. அந்தப் பகுதியில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் உப்புத்தன்மை இன்னும் அதிகமாகி மீன்கள் வரத்தும் குறைந்தது. அதனால், அந்தப் பகுதி மீனவர்களும் மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டார்கள். உயிர்வாழச் சுற்றுச்சூழல் முக்கியம். அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்களால் மக்கள் உயிர் பாதிக்கப்படும். அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும். அந்த நிலையில், பொருளாதாரம் யாருக்கு எப்படிப் பயன்படும்? இந்தப் பகுதியில் சுமார் மூன்று லட்சம் பேர் வசிக்கிறார்கள். அதில், 5,000 மீனவக் குடும்பங்கள் அடக்கம். அந்தக் குடும்பங்களில், அதிகபட்சம் 100 பேருக்கு மேல் படிப்பறிவு கிடையாது. இதுபோன்ற பிரச்னைகள் உருவாகும் என்று முன்னாடியே எங்கள் அறிவுக்கும் எட்டவில்லை. படிப்பறிவு இல்லாத காரணத்துக்காகவே அரசாங்கமும் எங்களை ஏமாற்றுகிறது” என்றார், மிகவும் வேதனையுடன். 

எப்படியாவது தங்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுவிடாதா என்னும் ஏக்கம் அந்தக் குரலில் தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close