Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேசிய விருதை ஏன் திருப்பிக் கொடுத்தார் ஷப்னம் ஹஸ்மி?

ஷப்னம் ஹஸ்மி

'ஒருவருக்கு உரிமை பெரியதா... சமூக அடையாளம் பெரியதா... விருது பெரியதா...' என்றால், அவர் தரும் பதில் பட்டியலில் நிச்சயம் விருது இடம் பெறாது. எந்த விஷயத்துக்காக விருது வழங்கப்பட்டதோ அந்த விஷயம் நிறைவேறவில்லை என்று சமூக  ஆர்வலர் ஷப்னம் ஹஸ்மி, தனக்குக் கிடைத்த 'தேசிய சிறுபான்மை உரிமைகள் விருதை' திரும்ப அளித்துள்ளார். 

ஷப்னம் ஹஸ்மி, நேற்று (27.06.2017) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தான் பெற்ற தேசிய விருதைத் திரும்ப வழங்குவதாகக் கூறியுள்ளார்.  சமீபத்தில், நாட்டில் நடைபெற்றுவரும் அத்துமீறல்களே விருதை திருப்பி வழங்குவதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தேசிய சிறுபான்மை ஆணையம், ஒவ்வோர் ஆண்டும் சிறுபான்மை உரிமை தினமான டிசம்பர் 18-ம் தேதி, 'தேசிய சிறுபான்மை உரிமைகள் விருது' வழங்கிவருகிறது. இந்த விருது சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இவ்விருது தனி நபருக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ வழங்கப்படும். கடந்த 2008-ம் ஆண்டு ஷப்னம் ஹஸ்மிக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அவர் அந்த விருதை, தேசிய சிறுபான்மை ஆணைய இயக்குநரிடமே திருப்பி வழங்கிவிட்டார். இதுகுறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "தற்போது நாட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பார்க்கும்போது, விருதைத் திரும்ப அளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். சிறுபான்மை ஆணையமும் தற்போது இருக்கும் அரசாங்கமும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்தில் எந்த ஓர் அக்கறையும் காட்டவில்லை. அவர்களுக்குத் தேவையான அடிப்படைப் பாதுகாப்பைக் கூட வழங்கவில்லை. இது மட்டுமல்லாமல், ஆணையத்தின் தலைவரைச் சந்தித்து இதுகுறித்துப் பேச கடந்த 2 நாள்களாக முயற்சி செய்தேன். ஆனால், ஒருமுறைகூட சந்திக்க முடியவில்லை" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'இந்த வருதை நான் திரும்பத் தரக் காரணம், அதன் மீது இருந்த நம்பகத்தன்மை குறைந்துவிட்டதுதான். சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல், கொலைகள் அதிகரித்துவிட்டன. இதைத் தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. கொலையானவர்கள் மீது அக்கறை காட்டப்படவில்லை. ஆனால், இந்தப் பிரச்னைகளுக்கு காரணமான நபர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. 

டெல்லியில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஒரு மனிதரை அடித்துக் கொன்றது. கூடவே, 'கொல்லப்பட்ட மனிதரின் வீட்டில், இறந்த நிலையில் பசு மாடு ஒன்று இருந்ததாக' வதந்தியும் பரப்பப்பட்டது. இதையடுத்து ஒட்டுமொத்த மாநிலமும், மனிதரைக் கொன்ற குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல், இறந்துபோன மாட்டைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியது. இதுதவிர, 16 வயது இளைஞர் ஒருவரை முஸ்ஸிம் என்ற காரணத்துக்காகவும், மற்றொருவரைத் தாடி வைத்திருந்த காரணத்துக்காகவும் கொன்றுள்ளனர். மேலும், ஜார்கண்டில், சிறுவன் ஒருவனை மரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டனர்' என்று அந்தக் கடிதத்தில் ஷப்னம் ஹஸ்மி தெரிவித்திருந்தார். 

மேற்கண்ட ஒவ்வொரு குற்றத்துக்கும் ஆணையம்  நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் ஷப்னம். மேலும் அவரே தொடர்ந்து பேசும்போது,

"இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையில், முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தனர். அது இப்போதுதோல்வியுற்றது துரதிர்ஷ்டம். இதுவரை அமைதியாக இருந்துவரும் முஸ்லிம் சமூகம், இனி தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் அனைத்தும் மக்களுக்குப் பிடிக்காதவைதான். யாரும் அதை விரும்புவதில்லை. ஆனால், அவர்கள் யாரும் எதிர்ப்புக் குரல் கொடுக்காமல், அமைதியாக இருக்கிறார்கள். மதச்சார்பற்றுத் திகழும் மக்களை ஒன்று சேர்க்க முயற்சி செய்வேன். அதில் பலரும் அவர்கள் வாங்கிய விருதைத் திரும்பக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில், ஷப்னம் ஹஸ்மி, அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதன் தலைமைப் பொறுப்பையும் அவரே வகித்துவந்தார். இந்நிலையில், இளைய தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கில், ஷப்னம் ஹஸ்மி தனது தலைமைப் பொறுப்பு பதவியில் இருந்து விலகியுள்ளார். 

ஷப்னம் ஹஸ்மி எதிர்பார்ப்பது போலவே, நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறைய அரசாங்கம் முழு மூச்சுடன் செயல்படும் என்று நம்புவோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close