Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல்: எடுபடுமா எதிர்க்கட்சிகள் வியூகம்?

குடியரசுத்தலைவர் மாளிகை

குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளரை அறிவிக்கும் முன், ராம்நாத் கோவிந்தை அறிவித்தது பி.ஜே.பி. அதிலும், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட தலித் வேட்பாளரை நிறுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு செக் வைத்தது. அண்மைக்காலமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தலித்துகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்கள் மற்றும் பி.ஜே.பி தலித் மக்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தை மாற்றும் வகையில், இந்த யுக்தியை அக்கட்சி கையாண்டது. இதையடுத்து மீரா குமாரை வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தின. எனவே, இந்த இரு வேட்பாளர்களுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் போன்று இல்லாமல், துணைத்தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களு மட்டுமே வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். அதன்படி, 790 எம்.பி.க்கள் வாக்களித்து குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்வு செய்வார்கள். மாநிலங்களவை செயலர், குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாகச் செயல்படுவார்.

குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுபவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆதாயம் தரும் தொழில் செய்பவராக இருத்தல் கூடாது. மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி உடையவராகவும் இருத்தல் அவசியம். மேலும் வேட்பாளராகப் போட்டியிடுபவர் சார்பில், ரிசர்வ் வங்கியில் 15 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவரை 20 எம்.பி.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும்.

ஜூலை 18-ஆம் தேதிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். மனுக்கள் பரிசீலனை ஜூலை 19-ஆம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ்பெற ஜூலை 21-ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனே வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமைத்தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.

பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, இப்போது வரை மாநிலங்களவையில் அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவைப் பெற்றே மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றன. மக்களவையில் அறுதிப்பெரும்பான்மையுடன் இருந்தபோதிலும், மாநிலங்களவையில் இன்னமும் பி.ஜே.பி-க்குப் போதிய பெரும்பான்மை இல்லை. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் பி.ஜே.பி அறிவிக்கும் வேட்பாளரையே அ.தி.மு.க ஆதரிக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. என்றாலும், ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பி.ஜே.பி முதலில் அறிவித்ததைப்போன்று, குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலிலாவது தங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில், ஒருமித்த கருத்துடன் கூடிய வேட்பாளரை காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளும் விரைந்து அறிவிக்க வேண்டும். அப்போதுதான், மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் செக் வைத்ததுபோன்ற சூழல் உருவாகும். ஆனால், பி.ஜே.பி-யோ குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலிலும் தங்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் வகையிலான வேட்பாளர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் என நம்பலாம்.

குடியரசுத் துணைத்தலைவரையாவது, ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிகள் கூட்டணி ஒன்று சேர்ந்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பார்களா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close