Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பை ஐ.ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை விரும்பும் மாணவர்கள்!

கடந்த வாரம் JEE (Joint Entrance Examination) அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி-க்கள், 31 தேசிய தொழில்நுட்பக் கல்லூரிகள், முப்பதுக்கும் மேற்பட்ட மத்திய அரசின் நிதியுதவியோடு நடத்தப்படும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் முதல்கட்ட மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

ஐஐடி

ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களைப் பெற்றவர்களில் பெரும்பாலானோர் மும்பை ஐ.ஐ.டி-யையும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதில் தரவரிசைப்பட்டியலில் முதல் 62 இடங்களைப் பெற்ற மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் 50 மாணவர்கள் மும்பை ஐ.ஐ.டி-யை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மும்பை ஐ.ஐ.டி-க்கு அடுத்து டெல்லி ஐ.ஐ.டி, மூன்றாவதாகச் சென்னை ஐ.ஐ.டி, நான்காவதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை படித்த கரக்பூர் ஐஐடியையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 

ஐஐடி முகப்பு

ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வில் 366 மதிப்பெண்ணில் 318 மதிப்பெண் வாங்கி 26-வது ரேங்க்கை பெற்றிருக்கும் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன் பரத், சென்னை ஐ.ஐ.டி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர் ''பழமையான ஐந்து ஐ.ஐ.டி-க்களும் ஒன்றிரண்டு விஷயங்களில் வேறுபட்டு இருக்கின்றன. இதுவே மாணவர்களின் விருப்பத்தை முடிவு செய்கின்றன. நான் சென்னையைச் சேர்ந்தவன் என்பதால் சென்னை ஐ.ஐ.டி-யை முதன்மையாகத் தேர்வு செய்திருக்கிறேன்" என்கிறார். ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வில் 136 ரேங்க்கை பெற்றிருக்கும் பிரணவ் ராமகிருஷ்ணனும் சென்னை ஐ.ஐ.டி-யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தைத் தேர்வு செய்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசின் மனிதவளத்துறை வெளியிடும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால் மாணவர்களின் விரும்பிச் சேரும் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு ஐ.ஐ.டி அட்வான்ஸ் தேர்வில் ஒன்றரை லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதில் 36,114 பேர் முதல் நிலையில் தேர்வாகியுள்ளனர். இவர்களில் 11,000 பேர் ஐ.ஐ.டி-க்களிலும், மீதமுள்ள மாணவர்கள் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களிலும், மத்திய அரசின் உதவியோடு நடத்தப்படும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் சேர்கிறார்கள். ஐ.ஐ.டி-யில் சேர்ந்துள்ள 11,000 மாணவர்களில் 994 பேர் மாணவிகள். 

இந்த ஆண்டு ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வில் கேள்விகளின் குளறுபடிகளால் 18 போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டு 50,455 மாணவர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள். ஆனால், கடந்த ஆண்டு 36,500 மாணவர்கள் தகுதிபெற்ற மாணவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்தனர். 

ஐஐடி மாணவர்கள்

தவறான கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சி செய்த மாணவர்களுக்கு மட்டுமே போனஸ் மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள். இதனால் நிறையப் பேர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள். பலரின் வாய்ப்பு பறிபோகி இருக்கிறது. இதனால் ஐஐடியின் சேர்க்கையை நிறுத்தி மீண்டும் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் வேலூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர். 

சேர்க்கையை நிறுத்த முடியாது. ஆனால், இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று ஐஐடி-க்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 7-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை மாணவர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close