Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாலையின் இருபுறமும் 100 கி.மீ.க்கு புதிய மரங்கள்... இது அஸ்ஸாம் அரசின் சாதனை!

அஸ்ஸாம்

சாலையை அகலமாக்கும் பணிக்காகவும், புதிய கட்டடங்கள் கட்டுவதற்காகவும் இருக்கும் மரங்களை வெட்டும் பணிதான் இந்தியா முழுவதும் அதிகம் நடக்கின்றன. ஆனால், அஸ்ஸாம் மாநிலம் இதில் தனித்து நிற்கிறது. 

அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்பானந்த் சோனுவால் தலைமையில் இன்று வன மகோத்சவ விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற காஜிரங்கா தேசியப் பூங்காவிற்கு அருகில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 100 கிலோ மீட்டருக்கு மரங்கள் நடப்பட்டன. இவ்வளவு பெரிய பரப்பளவில் மரம் நடுவது இதுவே முதல் முறை. இது தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தின் வடக்கு மண்டல வனப்பாதுகாவலர் சிவக்குமாரிடம் போனில் பேசினோம்.

``மகிழ்ச்சியாக இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலம் சுற்றுச்சூழல் விஷயங்களில் அதிக அக்கறை கொண்ட மாநிலங்களில் ஒன்று. கடந்த காலங்களில் பல சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தியிருக்கிறது. அந்த வகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் தலைமையில், வனத்துறை அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர் மேலும் 3 அமைச்சர்கள் மற்றும் நான்கு சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகார்கள் கலந்துகொண்டார்கள். விழாவில் சுமார் 3 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மிக முக்கிய, சுற்றுலாப்பயணிகள் அதிகம் பயணிக்கும் காஜிரங்கா தேசியப்பூங்கா இருக்கும் தேசிய நெடுஞ்சாலை 715 இல் இந்த மரம் நடுதல் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவற்றில் பெரும்பாலும் அழகான பூக்களைக் கொடுக்கக்கூடிய மரங்கள். அதனால் சில வருடங்களில் அந்த தேசிய நெடுஞ்சாலையே வண்ணமயமாக காட்சியளிக்கும்`` என்றார்.அஸ்ஸாம்

வன மகோத்சவம்: 

வருடம் ஒருமுறை, இந்தியா முழுவதும் நடைபெறும் மரம் நடும் விழாவிற்கு வன மகோத்சவம் என்று பெயர். 1950ம் ஆண்டு அப்போதைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த கே.என்,முன்சிதான் இந்த விழாவை தொடங்கிவைக்கிறார். வெறும் மரம் நடுதல் மட்டுமல்லாமல், வனம் மற்றும் வன விலங்குகளைக் காப்பது குறித்து விழிப்புஉணர்வு செய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல விஷயங்கள் காலப்போக்கில் வன மகோத்சவத்திற்குள் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு தினங்களில் வன மகோத்சவ கொண்டாட்டம் நடைபெற்றாலும், பெரும்பாலும் ஜூலை 1 முதல் 7ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். 2016ம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவின் 23.81% பரப்பளவில் மரங்கள் இருக்கின்றன. அதனை 2020 ஆண்டில் 33% ஆக அதிகரிக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதற்கு வன மகோத்சவ கொண்டாட்டம் உதவும். இந்தியாவில் பருவமழை துவங்கும் ஜூன், ஜூலை மாதங்களில் வன மகோத்சவம் கொண்டாட்டப்படுவது அதன் சிறப்புகளில் ஒன்று.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close