Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2200-ம் ஆண்டு உலக மக்கள்தொகை எவ்வளவு இருக்கும் தெரியுமா? #WorldPopulationDay

உலக மக்கள்தொகை நாள் (World Population Day) ஜூலை 11. இந்த நாளில் மக்கள்தொகைக்கான விழிப்புஉணர்வை உலகளாவியரீதியில் எடுத்துக்கூறும் முயற்சியாக, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. கி.பி 1650-ம் ஆண்டுக்குப் பிறகு, மக்கள்தொகை சரசரவென உயர்ந்துகொண்டே சென்றது. இதுதான் உலக மக்கள்தொகை அதிகரிப்பதன் முதல் கட்டமாகப் பார்க்கப்படுகிறது. 1840-ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 100 கோடியாகவும், 1927-ம் ஆண்டில் 200 கோடியாகவும் உயர்ந்து, 1960-ம் ஆண்டில் 300 கோடி மக்கள்தொகையை சுமார் 39 ஆண்டுகளில் எட்டியிருந்ததுடன், 1999-ம் ஆண்டில் மக்கள்தொகை 600 கோடியை அடைந்திருந்தது. 

1987-ம் ஆண்டு இதே நாளில் உலக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெளியிட்டபோது, அது ஐந்து பில்லியனைத் தாண்டியிருந்தது. மனிதன் தோன்றிய காலத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் இது மிக நீண்டகாலம். அதன்பிறகு மக்கள்தொகை விஸ்வரூபம் எடுத்து, இன்று 750 கோடியாக (7.5 பில்லியன்) அதிகரித்திருக்கிறது. 2024-ம் ஆண்டில் மக்கள்தொகை 800 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WorldPopulationDay

‘மக்கள்தொகை வளர்ச்சிவீதமானது ஆண்டுதோறும் 1.31 விகிதத்தில் அதிகரித்துவருகிறது. ஒரு விநாடிக்கு 2,582 விகிதமாகவும், ஒரு நாளுக்கு 2,23,098 விகிதமாகவும், இரு வருடங்களுக்கு 8,14,30,910 என்ற தொகையாகவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும், மக்கள்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா மற்றும் வங்கதேசம் உள்ளன' என, மக்கள்தொகை தொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மக்கள்தொகை பெருக்கத்துக்கு முக்கியக் காரணம், மருத்துவத்தில் நிகழ்ந்த பல்வேறு புரட்சிகளும் வியத்தகு வளர்ச்சியும்தான். மனித இனம் கூட்டம் கூட்டமாக அழிந்ததற்கு எப்படி போர் காரணங்களாக அமைந்தன்னவோ, அதேபோல் பரவும் நோய்களும் காரணங்களாக அமைந்தன. காலரா, ப்ளேக் மற்றும் மலேரியா போன்ற நோய்களாலும் மனித இனம் வெகுவாக வீழ்ந்தது. இதைத் தடுக்கும்வண்ணம் ஏற்பட்ட 20-ம் நூற்றாண்டின் மருத்துவப் புரட்சி, பல மாற்றங்களை நிகழ்த்தி நோய்களின் வீரியத்தைக் குறைத்து மனிதனின் ஆயுளை நீடித்தது. 

1950-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்களின் சராசரி ஆயுள் 48 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுள் 38 வயதாகவும் இருந்தது. 2001-ம் ஆண்டில் ஆண்களுக்கு 63 வயதாகவும், பெண்களுக்கு 65 வயதாகவும் உயர்ந்தது. இதையடுத்து, 2010-ம் ஆண்டில் ஆண்-பெண் இருவரின் சராசரி ஆயுள்காலம் 75 ஆக உயர்ந்துள்ளது. 

`இதே வேகத்தில் சென்றால், 2050-ம் ஆண்டில் 1,000 கோடியாக மக்கள்தொகை உயரும்' என, குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் ஓர் உச்சம் இருப்பதுபோல மக்கள்தொகை உயர்வுக்கும் இருக்கும் உச்சபட்சத்தொகை 1,200 கோடி எனச் சொல்லப்படுகிறது. இந்த மக்கள்தொகையைத்தான் பூமி தாக்குப்பிடிக்க இயலும். இதன் பிறகு மக்கள்தொகை அதிகரித்தால், அழிவுப் படிநிலையின் இறுதிநிலையை எட்டுவோம் எனக் கூறப்படுகிறது. அதாவது, மக்கள்தொகை அதிகரிப்பில் தொடங்கி உலக வெப்பமயமாதல் வரை மனித இனம் பல்வேறு அழிவுகளைச் சந்திக்கும். `இன்னும் ஆறு டிகிரி வெப்பம் பூமியில் அதிகரித்தால், மனித இனம் பூண்டோடு அழிந்துபோகும் நிலையும் ஏற்படும்' என, சமூக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

WorldPopulationDay

இந்தப் பூமி தாங்கக்கூடிய அதிகபட்ச கார்பனின் அளவு ஒரு லட்சம் டன். ஆனால், இப்போதே கார்பனின் அளவு அரை லட்சம் டன்னைத் தாண்டிவிட்டது. எனவே, 2200-ம் ஆண்டில் உலக அழிவு நிச்சயம் எனப் பதறுகின்றனர்  ஆராய்ச்சியாளர்கள். அது கார்பன் வெளியேற்றத்தினாலா அல்லது மக்கள்தொகையினாலா என்பதுதான் கேள்விக்குறி. 

எதிர்பாராதவிதமாக மற்றோர் அபாயமும் இந்தியாவுக்குக் காத்திருக்கிறது!

குளிர் பிரதேசங்களில் வாழும் குழந்தை இல்லாத தம்பதிக்கு, மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளுள் ஒன்று, `இந்தியாவுக்கு டூர் போயிட்டு வாருங்கள் என்பதுதான். வரும்போது நிச்சயமாக நல்ல செய்தி காதில் விழும்' என்பதுதான். அது வேறொன்றுமில்லை, தம்பதி ஹனிமூனுக்காக இந்தியா வந்தால், குழந்தைப்பேறு உண்டாகும் என்பதுதான். இது வெறும் நம்பிக்கையோ, பழக்கமோ அல்ல; மருத்துவரீதியில் உண்மையும்கூட. இந்திய நாட்டின் வெப்பநிலை, வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் அனைத்துமே வாழ்வதற்கு மிகவும் ஏற்றது. இதன் காரணமாக, கருத்தரிப்பு இங்கு விரைவில் ஏற்படுகிறது. 

உலகமே மக்கள்தொகை அதிகரிப்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது என நினைத்தால், அது தவறு. அமெரிக்காவிலும் கனடாவிலும் இப்போது இருக்கும் மக்கள்தொகையே 2050 வரையிலும் நீடிக்கும். பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷியாவில் 12 சதவிகித மக்கள்தொகை குறையும். உலகத்தின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா வெறும் 2.6 சதவிகிதத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. ஆனால், உலக மக்கள்தொகையில் 16 சதவிகிதத்தைத் தன்னுள்கொண்டுள்ளது. மக்கள் அடர்த்தியும் இங்குதான் அதிகம். இந்தியாவில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 387 பேரும், தமிழ்நாட்டில் 555 பேரும், அதுவே சென்னையில் என்றால் 27,000 பேரும் வசிக்கின்றனர். 

WorldPopulationDay

இப்போதே மருத்துவம், சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றின் பற்றாக்குறைக்கான பதிலை இந்திய அரசால் கொடுக்க இயலவில்லை. சர்வதேச வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 45.6 கோடி. அதாவது இவர்களின் ஒருநாள் சராசரி வருமானம் சுமார் 1.25 அமெரிக்க டாலர்கூட இல்லை. கிட்டத்தட்ட உலகில் 33 சதவிகித ஏழைகள் இந்தியாவில்தான் உள்ளனர். உலகின் மூன்று ஏழைகளில் ஒருவர் இந்தியர். 18-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதகுருவான டி.ஆர் மால்தஸ் என்பவர் `அதிகரிக்கும் மக்கள்தொகையால், உணவின்றி அவதிப்படும் நிலை விரைவில் ஏற்படும்' எனச் சொன்னது, இன்று உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள நாடுகள் பலவற்றால் நினைவுகூரப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close