Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒ.என்.ஜி.சி அளித்த விளக்கமும்... தொடரும் சில சந்தேகங்களும்!

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி பணிகள்

''ரத்தத்தைக் கூடத் தருவோம், எண்ணெயை அல்ல”. 1980-களில் அனைத்து அசாம் மாணவர் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராகவும் தங்களது மாநில எண்ணெய் வளம் சுரண்டப்படுவதற்கு எதிராகவும் பெரும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தில் தனது மார்பைக் கீறிக்கொண்ட துலால் ஷர்மா என்னும் மாணவர், அதிலிருந்து வந்த ரத்தத்தால் சாலையில் மேலே சொன்னவாறு எழுதினார். 80-களின் காலகட்டத்தில் அசாமில் ஏற்பட்ட எண்ணெய் வளப் பிரச்னையால் அங்கே தனி தேசியவாதச் சூழல் உருவானது.

கிட்டத்தட்ட இதே 80-களில்தான் தமிழகத்தில் நாகை மாவட்டம் நரிமணத்திலும் நிலங்களில் இருந்து எண்ணெய் எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் ஆழ்துளாய்ப் போடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. லீஸுக்கு எடுக்கப்பட்ட நிலங்களுடைய சொந்தக்காரர்களுக்கு வேலை தருவதாகவும் கூறப்பட்டது. நரிமணம் எண்ணெய்க் கிணறுபோலத் தமிழகத்தின் காவிரிக் கரையோரம் மொத்தம் 700 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. அப்படித் தோண்டப்பட்டவற்றில் 183 கிணறுகள் தற்போது இயங்கு நிலையில் இருக்கின்றன. அதில், அண்மையில் பாதிப்பு ஏற்பட்ட கதிராமங்கலம் பகுதி எண்ணெய்க் கிணறும் அடக்கம். 

“ஆனால், எங்களைத் தகுந்த நேரத்தில் சம்பவ இடத்துக்குள் அனுமதித்து இருந்தால்... பாதிப்பினைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்'' என்கிறது ஓ.என்.ஜி.சி தரப்பு. கதிராமங்கலம் சம்பவத்தை ஒட்டியும், காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவது தொடர்பாகவும் எழுந்துவரும் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக ஓ.என்.ஜி.சி தரப்பினரால் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஓ.என்.ஜி.சி

டெல்டா எண்ணெய்க் கிணறுகளும்... ஓ.என்.ஜி.சி விளக்கமும்!

தாங்கள் எண்ணெய் எடுப்பதால் நிலத்தடிநீரும் நிலமும் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதையே ஓ.என்.ஜி.சி தரப்பு ஒட்டுமொத்தமாக நிரூபிக்க முயன்றது. அதனை இன்னும் தெளிவாக விவரிக்கும் வகையில், நிலத்தடிநீர் மட்டத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய் எப்படி எடுக்கப்படுகிறது என்பது விளக்கப்பட்டது. இதனை விளக்கிய ஓ.என்.ஜி.சி-யின் மின்னியல் துறை பொதுமேலாளர் தங்கராஜ், ''நிலத்தடிநீர் 100 மீட்டர் ஆழத்திலிருந்து எடுக்கப்படுவது. ஆனால், நாங்கள் எண்ணெய் எடுப்பது 1,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் வரையிலான நிலத்தடி மட்டத்திலிருந்துதான். அப்படி எடுக்கும்போதுகூட, அது தண்ணீரைப் பாதிக்காத வகையில் வலுவான குழாய்கள் உள்ளே செலுத்தப்பட்டு எடுக்கப்படும். நிலத்தடி ஆழத்தில் எண்ணெய் இல்லாத நிலையில், 'அந்த நிலங்கள் மீண்டும் விளைச்சலுக்கு ஏற்றவாறு பக்குவப்படுத்தித் தரப்படும்' என்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலார் கிராமத்தில் மீண்டும் விளைச்சலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்ட நிலம், மாதிரியாகக் காண்பிக்கப்பட்டது. நிற்க, இவ்வளவு கணக்கச்சிதமான திட்டமும் செயல்பாடும் இருந்தும் நரிமணம், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடிநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கான காரணம் என்ன? அதற்குக் காரணம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ''தாங்கள் அல்ல'' என்று கைவிரிக்கிறார் அந்த நிறுவனத்தின் நிலப்பகுதிச் செயல்பாட்டு இயக்குநர் வி.பி.மகாவார்.

''எண்ணெய் எடுப்பதற்காக நாளொன்றுக்கு ஒரு கிணற்றுக்கு 25,000 லிட்டர் வரையிலான நீர் உபயோகிக்கப்படுகிறது. அப்படி உபயோகிக்கப்படும் நீர், கழிவுநீராக வெளியேற்றப்பட்டுத் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு நிலத்தடிக்குள் அதே 1,000 மீட்டர் ஆழத்துக்குள் செலுத்தப்படுகிறது. இதுவும் முறையாகவே செய்யப்படுவதால், நிலத்தையும் நீரையும் எவ்வகையிலும் பாதிக்காது. இருபது வருடங்களாக நான் இதேபோன்ற சூழலில்தான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் பாருங்கள்” என்றார் மகாவார். 

கதிராமங்கலம் குடிநீர்

ஓ.என்.ஜி.சி-யின் விளக்கங்களும்... அதன்மீதான சில கேள்விகளும்!

நல்லது. கழிவுகள் முறைப்படி சுத்திகரிக்கப்படுவதாகவே இருக்கட்டும்; அந்தப் பகுதி நிலத்தடிநீரின் நிறம் மாறியிருப்பதற்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; அந்தப் பகுதி மக்கள் அந்தக் குடிநீரைக் குடித்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். தினசரி ஒவ்வோர் எண்ணெய்க் கிணறுகளில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா..? 700 க்யூபிக் மீட்டர் அளவு. ஆனால், தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் உபயோகிக்கும் 11 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களின் தனிப்பட்ட கொள்ளளவு 300 முதல் 500 க்யூபிக் மீட்டர்வரை மட்டுமே. இது, ஓ.என்.ஜி.சி இயக்குநரே குறிப்பிட்ட தரவு. 500 க்யூபிக் மீட்டர் அளவு கழிவுநீரை மட்டுமே தாங்கக்கூடிய சுத்திகரிப்பு இயந்திரத்தில், 700 க்யூபிக் மீட்டர் வரையிலான கழிவுகளைச் சுத்தப்படுத்துவது எப்படிச் சாத்தியமானது? இல்லை, நாங்கள் 500 க்யூபிக் மீட்டர் வரையிலான நீரை மட்டுமே சுத்திகரிப்பு செய்கிறோம் என்னும் நிலையில்... மீதமிருக்கும் 200 க்யூபிக் மீட்டர் அளவிலான நீரை என்ன செய்கிறார்கள்? நரிமணத்தின் குடிநீர் முற்றிலும் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கும், கதிராமங்கலத்தின் நீர் மஞ்சள் நிறமாக மாறிக்கொண்டிருப்பதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று ஓ.என்.ஜி.சி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளதை மீண்டும் இங்கு நினைவூட்டுகிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close