Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓட்டு போட்ட பாவத்துக்கு செருப்பால் அடித்துக்கொண்டு டெல்லியில் கதறும் விவசாயிகள்!

போராட்டத்தில் விவசாயிகள்

'தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்' எனக்கோரி கடந்த மார்ச் மாதம் 'தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு' தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 41 நாட்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பல வடிவங்களில் போராட்டம் செய்தும், அவர்களை நேரில் சந்தித்துப் பேசவோ அல்லது அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவோ பிரதமர் மோடி பிடிவாதமாக மறுத்துவிட்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டக்காரர்களை நேரில் சந்தித்ததோடு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அனைவரும் தமிழகம் திரும்பினர். ஆனால், முதல்வர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, மீண்டும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

சாப்பாடு, இடவசதி இல்லாத சூழலிலும் கொட்டும் மழையில் கடந்த 5 நாட்களாக வெவ்வேறு வடிவங்களில் போராடிவருகிறார்கள் விவசாயிகள். ஆனாலும் இதுவரை ஓர் அரசியல்வாதிகூட போராட்டக்காரர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கடந்த 16-ம் பிரகாஷ்தேதியிலிருந்து போராடிவரும் விவசாயிகள் சந்தித்துவரும் பிரச்னைகள் என்னென்ன? போராட்டத்தின் வடிவம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயிகளுடன் போராடிவரும் பிரகாஷ் என்ற இளைஞர் நம்மிடம் கூறுகிறார். (ஏற்கெனவே ஜந்தர் மந்தர் பகுதியில் 41 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

''கடந்த முறை 41 நாட்கள் போராட்டம் செய்தபோது, விவசாயிகளின் நலனுக்காக சில வாக்குறுதிகளைக் கொடுத்தார் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி. அதனால் தமிழ்நாடு திரும்பினோம். அங்கு வந்து பல முறை அரசியல்வாதிகளுடன் பேசிப்பார்த்துவிட்டோம். தங்களின் பதவிக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் அடித்துக்கொள்ளும் அவர்களுக்கு விவசாயிகளின் நலன் பற்றி யோசிக்க நேரம் இல்லை. அதனால் மீண்டும் தலைநகர் டெல்லியில் வந்து  போராடலாம் என்று முடிவெடுத்தோம். அதன்படி கடந்த 14-ம் தேதி இரவு டெல்லி வருவதற்காக சென்னை எழும்பூர் வந்தடைந்தோம். நாங்கள் வரும் விஷயம் காவலர்களுக்கு முன்னரே தெரிந்திருந்ததால், சுமார் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு வந்து எங்களைத் தடுத்தார்கள். அதன்பின் தீவிரமான வாக்குவாதத்துக்குப் பிறகு அன்றிரவே டெல்லிக்கு புறப்பட்டுவிட்டோம். 16- ம் தேதி காலை, டெல்லி ரயில் நிலையம் வந்தடைந்ததும் பிரதமரைப் பார்க்க அனுமதி கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் பிரதமர் வீட்டை முற்றுகைப் போராட்டம் செய்யலாம் என அங்குள்ள சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தோம். அங்கு வந்த காவலர்கள் எங்களை கைது செய்தனர். காலை 9 மணிக்கு கைது செய்யப்பட்ட எங்களை மாலை 5 மணி வரை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இடைப்பட்ட அந்த நேரத்தில் எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர், சாப்பாடு எதுவுமே தரவில்லை. நாங்கள் மொத்தம் 102 பேர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைத் தாண்டியவர்கள். சாப்பிடாததால், பலருக்கும் தலைவலி மற்றும் மயக்கம் வந்துவிட்டது. காவலர்களிடத்தில் சொன்னோம். அப்போதும்கூட அவர்கள் தண்ணீர் தரவில்லை. 'சாப்பாடு வேண்டாம்... உடம்பு முடியாதவர்களுக்கு மருந்தாவது கொடுங்கள்' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு சாப்பாடு, தண்ணீர், மருந்து வாங்கி தருவதற்காகவா நாங்கள் இருக்கிறோம்? உங்களுக்கு வாங்கித் தருவதற்காக எங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து தனியாக எந்தப் பணமும் ஒதுக்கவில்லை. அதனால் அப்படியே கிடங்க...' என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். 5 மணிக்கு மேல், விவசாயிகள் அனைவரும் பசியையும் பொருட்படுத்தாமல் கோஷமிட்டோம். அதனால் அங்கு வந்த காவல்துறை உயரதிகாரிகள் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின் அருகில் உள்ள சீக்கியர்களின் கோவிலில் இருந்து உணவு வாங்கி வந்து கொடுத்து, 'இங்கெல்லாம் வந்து போராட்டம் நடத்தக்கூடாது' என்று சொல்லி மிரட்டி வெளியே விட்டார்கள். 

போராட்டத்தில் விவசாயிகள்

தற்போது நாங்கள் அனைவருமே ஜந்தர் மந்தர் பகுதியில், கடுமையான மழையிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்துப் போராடி வருகிறோம். மனிதர்களை ஏரில் பூட்டிப் போராட்டம், எலும்பு மண்டை ஓடுகளை கையில் ஏந்திப் போராட்டம் செய்தோம். ஆனால், எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரை எங்களை வந்து பார்க்கவும் இல்லை. பிரச்னை பற்றி கேட்கவும் இல்லை. மக்களின் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகளுக்கு சம்பள உயர்வு ஒரு கேடா? இவர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பாவத்துக்காக எங்களை நாங்களே செருப்பால் அடித்துக்கொள்ளும் போராட்டம் தற்போது நடந்து வருகிறது. இதைத்தானே அரசியல்வாதிகள் எதிர்பார்த்தனர். கடைசியாக விவசாயிகளின் உயிரையும் அரசியல்வாதிகள் கேட்பார்கள்; இல்லை குடிப்பார்கள். அப்போது ஒரு விவசாயிகூட நம் நாட்டில் இருக்கமாட்டார்கள்'' என்றவர், ''விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காதவரை எத்தனை நாட்களானாலும் நாங்கள் ஊர் திரும்பமாட்டோம்'' என்றார் தீரமாக.

ஓட்டு போட்ட பாவத்துக்காக செருப்பால் அடித்துக்கொள்கிறான் விவசாயி. அதை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் வேலையை மட்டும் செய்யும் அரசியல்வாதிகளுக்கு சம்பள உயர்வு அவசியமான ஒன்றுதான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close