Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆல் ரவுண்டர்' பிரணாப்பிடம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள்!

பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் 13 வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் நிறைவடைந்துவிட்டது. 'இந்தியா என்பது வெறும் புவியியல் சார்ந்த அமைப்பு கிடையாது. பல்வேறு சித்தாந்தங்கள், அறிவுக்கூர்மை, அனுபவம் உள்ளிட்ட வரலாறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது' என வரலாற்று சிறப்பு வாய்ந்த உரையை நிகழ்த்துவிட்டு, புதிய இல்லத்தில் குடியேறச் சென்றுவிட்டார். 

நாட்டின் முதல் குடிமகன் என்ற பெருமையையும் தாண்டி, நமக்கான பாடங்களையும் சொல்லிவிட்டுதான் சென்றிருக்கிறார் பிரணாப். 

1. நம்பிக்கைக்கு உரியவரா நீங்கள்? 

ஒருவரின் நம்பிக்கைக்குரியவராக இருப்பது என்பது கடும் சவால் நிறைந்த பணியே. அதிலும் குழுவாக இணைந்து செயல்படும் இடங்களில் தலைவனாகவோ தொண்டனாகவோ இருந்தாலும் நம்பிக்கை என்பது மிக அவசியம். அந்த நம்பிக்கையைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் விதைத்தவர் பிரணாப். 'தன்னுடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்க்கையில் நம்பிக்கையை எளிதில் சம்பாதித்துவிடவில்லை' என்கிறார் அவர். ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை அன்னா ஹசாரே முன்னெடுத்தபோது, அப்போதைய காங்கிரஸ் ஆட்சியின் நம்பிக்கைத் தூணாக இருந்து, ஹசாரேவை பேச்சுவார்த்தைக்குத் திருப்பியவர் பிரணாப். 

2. தைரியமே துணை..!

'தைரியமாக இருந்தால் போதும். இந்த உலகமே எதிர்த்தாலும் துணிந்து நின்று வென்றுவிடலாம்' என்ற விவேகானந்தரின் பொன்மொழி வழியைத்தான் பிரணாப் கடைப்பிடித்து வந்தார். கட்சிக்குள் உருவான பல இன்னல்களிலிருந்து தைரியத்தால் கரையேறிவர் பிரணாப். இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர், ராஜீவ் காந்தியிடம் நேரடியாகச் சென்று, 'தன்னை பிரதமராக்க வேண்டும்' எனக் கூறியவர். ராஜீவ் மறுத்தபோது கட்சியிலிருந்து வெளியேறும் முடிவையும் எடுக்கத் துணிந்தார். 'தைரியத்துடன் செயல்படுகிறேன் என பிரச்னைகளை மேலும் சிக்கல் ஆக்குவதைத் தவிர்த்து, சுமுகமாக அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் திறமை நிறைந்தவர் பிரணாப்' என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். 

3. துணிச்சல் முடிவுக்காரர்

'துணிந்து முடிவெடுங்கள், முளைத்தால் விருட்சம், வீழ்ந்தால் விதை’ எனத் தங்களுடைய துணிச்சலால் முன்னேறிய தலைவர்களுள் பிரணாப்பும் ஒருவர். 'ஓர் அரசாங்கத்தை வழிநடத்த பல வித்தைகளைக் கையாள வேண்டும்' என்பார். 'உலகின் தலைசிறந்த நிதியமைச்சர்'  என அவரை வர்ணித்தன ஆங்கில நாளிதழ்கள். 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைதானபோது, காங்கிரஸில் வெளியேறத் தயாரானது தி.மு.க. அந்த சமயங்களில் சற்றும் தாமதிக்காமல் சென்னை, டெல்லி என மாறி மாறி சில பேச்சுவார்த்தைக் கூட்டங்களை நடத்தியவர் பிரணாப். 

4. நிதானமே பிரதானம்..! 

நெருக்கடி நிலை காலகட்டத்தின்போது, மிஸ்டர் கூலாக இருந்து கட்சியை வழிநடத்தியவர் பிரணாப். தலைமை முன்னெடுக்கும் அனைத்து பேச்சுவார்த்தையிலும் பிரணாப் முன்னிறுத்தப்பட்டார். இந்திராவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். இந்திரா மறைவுக்குப் பின்னர், சொந்தக் கட்சியிலேயே பல இன்னல்களைச் சந்தித்தாலும், நிதியமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர், திட்டக்கமிஷன் தலைவர் எனத் தவிர்க்க முடியாத நபராக வளர்ந்தவர் பிரணாப். ஒரு கட்டத்தில் நரசிம்ம ராவே பிரணாப்பின் தெளிவான முடிவுகளைக் கண்டு வியப்பைத் தெரிவித்திருக்கிறார். 

5.  'ஆல் ரவுண்டர்' பிரணாப்! 

கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தன்னை பொருத்திக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வந்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் ஆட்சியில் இதுவரையில் பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, நிதி, பொருளாதாரம், தகவல் தொடர்பு, வணிகம், தொழில், கப்பல் போக்குவரத்துத் துறை எனப் பல துறைகளிலும் ஒரு ‘ஆல்-ரவுண்டராக’ வலம் வந்தவர் பிரணாப். எந்தத் துறையிலும் தன்னை ஒரு புதுமுகமாக வெளிப்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் கற்றுத் தேர்ந்தவராகவே தன்னை வெளிப்படுத்தி, நாட்டின் முதல் குடிமகன் பதவியை எட்டிப் பிடித்தவர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close