Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.டி. துறையை அரசியல் ஆயுதமாக்கும் பி.ஜே.பி: பெங்களூரு ரிசார்ட் ரெய்டு பின்னணி?

ரிசார்ட்

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள பெங்களூரு ரிசார்ட் மற்றும் அந்த விடுதியின் உரிமையாளரும், கர்நாடக எரிசக்தித்துறை அமைச்சருமான ஷிவகுமார் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். ஷிவகுமாரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரின் உறவினர்கள் வீடு உள்பட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 39 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறியதை அடுத்து, அனைத்து 41 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெங்களூருக்கு அழைத்து வந்து, அங்குள்ள ஒரு ஆடம்பர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குதிரை பேரத்தில் ஈடுபட்டு, பி.ஜே.பி. தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. கடந்த வெள்ளியன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து, மொத்தம் ஆறு எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறியதால், அவர்களை பெங்களூருவில் அடைத்து வைத்திருப்பதாக பி.ஜே.பி. குற்றம்சாட்டியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில், அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல் போட்டியிடுகிறார். அவர், மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் உரிய எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ-க்கள் தேவை. குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு லஞ்சம் கொடுக்க பி.ஜே.பி. முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த் சிங் ராஜ்புத், பி.ஜே.பி-யில் இணைந்தார். இதையடுத்து, அவர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே மாநிலத்தில் இருந்து, பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், அண்மையில் முடிவடைந்த குடியரசுத்தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் 11 எம்.எல்.ஏ-க்கள், அணி மாறி வாக்களித்திருப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும், காங்கிரஸ் கட்சியின் அகமது படேலைப் பொறுத்தவரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமல்லாது தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர், மற்றுமொரு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் கோருவார் என்று தெரிகிறது.

ரிசார்ட் ஐ.டி, ரெய்டுகுஜராத்தில் மொத்தம் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 8-ம் தேதி நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இதனால், கட்சியில் இருந்து விலகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களைத் தவிர்த்து, எஞ்சியுள்ள 44 எம்.எல்.ஏ-க்கள் பெங்களூரு ரிசார்ட்டில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ரிசார்ட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருப்பதன் மூலம் மத்திய அரசுத் துறைகளை அரசியல்ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் பி.ஜே.பி. அரசின் நோக்கம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அணிமாறி பி.ஜே.பி-க்கு வாக்களிக்க வேண்டும் என்றும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கு தலா 12 கோடி ரூபாய்வரை பேரம் பேசப்பட்டது என்றும் புகார் எழுந்த நிலையில், பெங்களூரு ரிசார்ட் உள்ளிட்ட கர்நாடக மாநில அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு ரிசார்ட்டில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருப்பது, கூவத்தூர் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக, கடந்த பிப்ரவரி மாதம், அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்தபோது, அவர் பக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் செல்வதைத் தடுக்கும் வகையில், சென்னையை அடுத்த கூவத்தூரில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு பல கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாகவும் பி.ஜே.பி. குற்றம்சாட்டியது.

தற்போது, பி.ஜே.பி-யும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க, பல கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. லஞ்ச, ஊழலுக்கு எதிராக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது என்று கூறிக்கொள்ளும் பி.ஜே.பி. தற்போது குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் குதிரைபேரத்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் சசிகலா ஆதரவு அமைச்சர்கள், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களைத் தங்கவைத்திருப்பதாக கூச்சலிட்ட தமிழக பி.ஜே.பி., தற்போது குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பி.ஜே.பி பணம் கொடுத்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்லப்போகிறது?

தவிர, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக்கூறி வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானதும், வருமான வரித்துறையினர் ரெய்டு குறித்த தகவல்கள் அடங்கிப்போயின.

இதேபோன்று, பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணியில் பிளவை ஏற்படுத்துவதற்காக, மத்திய அரசின் துறைகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினரை ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரின் மகன், மகளுக்கு எதிராக மத்திய பி.ஜே.பி அரசு ஏவிவிட்டது. அந்தக் கூட்டணி உடைந்து, பி.ஜே.பி. ஆதரவுடன் அங்கு நிதிஷ்குமார் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது.

தற்போது, அகமது படேலை மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற விடாமல் தடுப்பதுடன், தங்களுக்குத் தேவைப்படும் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதற்காக, பெங்களூரில் காங்கிரஸ் அமைச்சரின் வீடு, அவரின் ரிசார்ட் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினரை ஏவி சோதனை நடத்தியுள்ளது மத்திய அரசு. வரி ஏய்ப்பு, கள்ளநோட்டுகளைத் தடுத்தல், போலியான கணக்குகளைச் சமர்ப்பித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து, அவர்களிடம் அபராதம் வசூலித்தல், தண்டனை பெற்றுத்தருதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டிய வருமான வரித்துறை அதிகாரிகளை, அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் மத்திய அரசின் போக்கு, அண்மைக்காலமாக அதிகரித்து விட்டது.

"மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழல் இல்லாத அரசு என்பதுதான் எங்களின் பலம்" என்று கூறிக்கொண்டிருக்கும் பி.ஜே.பி, குஜராத்தில் எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது, பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படச்செய்தது போன்றவற்றில் நடத்திய பேரம் என்ன?

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் என்ன சொல்லப்போகிறது பி.ஜே.பி.?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close