Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு ஆண்டுகளுக்குள் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள்... மத்திய அரசு புதிய முடிவு

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிக்குக் குறைவாக 11 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றிவருகிறார்கள். இவர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெறுவதற்கான கால அளவை, 2019-ம் ஆண்டு வரை நீட்டித்து சட்டத் திருத்தத்தை மேற்கொண்டிருக்கிறது மத்திய அரசு. 

ஆசிரியர்கள் தகுதி நிலை பிரகாஷ் ஜவடேகர்

கட்டாய மற்றும் இலவசக் கல்விச் சட்டம், 2010, ஏப்ரல் 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தில் ஆசிரியர்கள் குறைந்தபட்ச தகுதியை ஏற்படுத்திக்கொள்ள ஐந்து ஆண்டுகள் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகால அளவானது 2015, மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பிறகு, ஆசிரியர்கள் தகுந்த தகுதிபெற இரண்டு ஆண்டுகள் என 2017-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  

இதன் மூலம் போதுமான தகுதியை ஏற்படுத்திக்கொள்ளாத ஆசிரியர்களுக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. புதிதாக பள்ளியைத் தொடங்குபவர்கள் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றாலும், பட்டப்படிப்பை முடித்தவர்களையே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இனி, பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும்போது பட்டப்படிப்புடன், ஆசிரியர் பட்டயப்படிப்பையும் முடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. 

இந்தச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற, ராஜ்ய சபாவில் ஓட்டெடுப்புக்குக் கொண்டு வந்தபோது மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசினார். ``மத்திய அரசு, அனைத்து தனியார் பள்ளிகளிடமும் ஆசிரியர்களின் தகுதி குறித்து விவரம் கேட்டறிந்தது. இதில் தனியார் பள்ளிகள் மட்டும் ஏழு லட்சம் ஆசிரியர்கள் அடிப்படைத் தகுதி நிலைக்குக் குறைவாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் 2.5 லட்சம் ஆசிரியர்கள் குறைந்த தகுதி நிலையிலும், 1.5 லட்சம் ஆசிரியர்கள் ஒரு வருடப் பயிற்சியை மட்டும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இரண்டு வருட பி.எட் டிகிரியை முடிக்கவேண்டியது அவசியம். 

ஆசிரியர்கள் தங்களுடைய கற்பித்தல் திறனை எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் மேம்படுத்திக்கொள்ள, `ஸ்வயம் பிளாட்ஃபார்ம்' (Swayam platform) என்ற திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி தொடங்க இருக்கிறோம். இந்தத் திட்டத்தில் சேர ஆசிரியர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை பதிவுசெய்துகொள்ளலாம். மேலும், `ஸ்வயம் பிரபா' (Swayam Prabha) என்ற திட்டத்தில் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தும் இணையத்தின் வழியாகவும் டி.டி.ஹெச் வழியாகவும் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தத் திட்டத்தில் பதிவுசெய்வதற்கு குறைந்த கட்டணமும் உண்டு. பாடங்கள் சிடி வடிவில் வழங்கப்படும். மேலும், ஆண்டுக்கு 12 நாள்கள் நேரிடையாக வகுப்பில் கலந்துகொள்ளும் வகையிலும் இருக்கும். இதைத் தவிர, நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பையும் விரைவில் தொடங்கவிருக்கிறோம். 

பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது குறித்தும், தகுதியான ஆசிரியர்களை நியமிப்பது குறித்தும் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறது. இதற்காக, விரைவில் ஐந்து அம்சத் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு தயாராக உள்ளது. மேலும், பள்ளியில் கற்றல் விளைவை அளவிடுவதற்கான முறைகளைக் குறித்து கையேடுகளைத் தயாரித்துவருகிறோம். இதை விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். பெற்றோர்களும் பள்ளிகளுக்குச் சென்று எவ்வாறு கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களிடம் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இதுவரை, ஐந்தாம் வகுப்புக்கும் எட்டாம் வகுப்புக்கும் தகுந்த முறையான மதிப்பீடு இல்லை. இதற்காக புதிய தேர்வு முறைகள் கொண்டுவரவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு எந்தக் காரணத்தைக்கொண்டும் குறைக்கப்படாது. அதே சமயத்தில், பள்ளி கல்வித் துறை தகுந்த இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படுத்தவேண்டியது அவசியம். பள்ளி வேலைநாள்கள் வாரத்தில் ஐந்து நாள்களா அல்லது ஆறு நாள்களா என்பது குறித்து மாநில அரசு முடிவெடுத்துக்கொள்ளலாம்" என்று அறிவித்துள்ள பிரகாஷ் ஜவடேகர் ``இனி, ஆசிரியர்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேர்தலின்போது பணி ஒதுக்குவது தவிர, இதர பணிகள் ஒதுக்கப்படாது'' என்றும் உறுதியளித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close