Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பி.ஜே.பி-க்கு திருப்புமுனை தருமா அமித் ஷா-வின் தமிழகப் பயணம்?

அமித் ஷா

பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, பல்வேறு மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் ஜம்முவில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய அவர், பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, பி.ஜே.பி-க்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அவர் தனது பயணத்தின்போது, அந்தந்த மாநிலங்களின் பி.ஜே.பி நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், தங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, "பிரதமர் மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி-யை ஆட்சியில் அமர்த்தும் வகையில் செயல்படுங்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

செல்லும் இடங்களில் எல்லாம் பி.ஜே.பி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று உரையாற்றி வருகிறார். சில மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரையும் அவர் சந்தித்துப் பேசி வருகிறார்.

இந்நிலையில், வரும் 22-ம் தேதி அமித் ஷா தமிழகம் வரவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அவரின் தமிழக வருகை, மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமித் ஷா வருகையை தமிழக மக்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும், அவர் வந்து சென்றபின் பி.ஜே.பி மிகப்பெரிய எழுச்சியைப் பெறும் என்று தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் பலரும் இப்போதே தெரிவித்தவண்ணம் உள்ளனர். தமிழகத்தில் பி.ஜே.பி. கிராமப்புறங்களிலும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் வகையில் அமித் ஷா-வின் சுற்றுப்பயணம் அமையும் என்று மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அவர் பங்குக்கு தெரிவித்துள்ளார்.

அமித் ஷா தமிழகத்துக்கு வரும்போது அவருக்கு மிகப்பிரமாண்டமான வரவேற்பு அளிக்கவும் மாநில பி.ஜே.பி இப்போதே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த மே மாதத்திலேயே அமித் ஷா, தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க அம்மா அணியினர் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமித் ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது. இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அப்போது தள்ளி வைத்துவிட்டது.

இந்நிலையில், அமித் ஷாவின் தற்போதைய தமிழக சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பி.ஜே.பி நிர்வாகிகளைச் சந்திக்கும் அவர், அ.தி.மு.க-வில் தற்போது நடைபெறும் குழப்பங்கள் குறித்து அவர்களிடம் கேட்டறிவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள், எம்.எல்.ஏ-க்கள் கட்சித்தாவல், ஆட்சி மாற்றம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் அமித் ஷாவே சூத்திரதாரியாக இருந்து செயல்படுகிறார் என்று பேசப்படும் நிலையில், அவரின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஒன்றிணைந்த அ.தி.மு.க-வை நம்பி பி.ஜே.பி-யை வளர்க்கும் திட்டமும் தள்ளிப்போவதாகவே அக்கட்சியினர் தரப்பில் கருதப்படுகிறது.

எனவே, தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமித் ஷாவின் பயணம் அமையுமா என்பதை, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்குப் பின்னரே தெரிந்துகொள்ள முடியும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close