Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேலையில்லா பட்டதாரிகளுக்காகவே வருகிறது `இன்டர்வியூ டெஸ்க்'!

தனுஷ் நடித்த ‛வேலையில்லா பட்டதாரி பாகம் 2' ரிலீஸாகிவிட்டது. இன்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சலிங் நடந்துகொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள், எதிர்காலக் கனவுகளோடு தங்களின் கல்லூரிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். படித்து முடித்த எத்தனையோ இளைஞர்கள் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். 

வேலை

ஒரு காலத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், தங்களுக்கான வேலையில் பெரும்பாலான இளைஞர்கள் இல்லை. இதை வேறு வகையில் சொன்னால், சரியான வேலையில் சரியான நபர் இல்லை. இதுதான் இப்போதைய வேலைவாய்ப்பு நியமனங்களில் உள்ள பெரும் பிரச்னை. இதற்குக் காரணம், ஒரு வேலைக்கு ஓராயிரம் விண்ணப்பங்கள் வருவதும், அந்த ஒரு வேலைக்கான சரியான நபரை அந்த ஆயிரம் விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுப்பதும் கடினமான விஷயம். கடினமானது என்பதைவிட அதற்கு ஆகும் காலம் என்பது மிகவும் அதிகம். 

ஒரு வேலைக்கு, ஒருவர் தனது ரெஸ்யூமை கொடுத்துவிட்டு சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்து முதல் ரவுண்டை முடித்துவிட்டு சில வாரங்கள் காத்திருக்க வேண்டும். மறுபக்கம் ஆயிரம் விண்ணப்பங்களையும் அலசி ஆராய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அளவுக்கு நிறுவனங்களுக்கு அழுத்தம். அவர்கள் ஆள்களை எடுக்க பல நாள்களைச் செலவுசெய்வார்களா அல்லது தங்களது பிசினஸைப் பார்ப்பார்களா? 

இப்படி வேலை தேடி அலைபவர்களுக்கும், வேலைக்குச் சரியான ஆள்களைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கும் அவர்கள் நினைத்ததைச் செயல்படுத்த முடியாத நிலைதான் நீடிக்கிறது. இதற்கான தீர்வாகவே வேலைக்கு ஆள்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் கன்சல்டன்சி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு கட்டத்துக்குமேல் அவற்றின் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட நிறுவனங்கள் சந்தித்த அதே பிரச்னைகளைச் சந்திக்க ஆரம்பித்தன. ஏனெனில், பெரும்பாலான கன்சல்டன்சி நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தைக் காப்பாற்றிக்கொள்வதில்தான் கவனம் செலுத்தவேண்டிய நிலையில் இருக்கின்றன. இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தைப் பயன்படுத்தி, பணம் பார்க்கும் கன்சல்டன்சி நிறுவனங்களும் உள்ளன. அவற்றில் சில, போலி நிறுவனங்கள்.

இந்தச் சூழலில்தான் `இன்டர்வியூ டெஸ்க்' என்ற நிறுவனமும் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனம், ஏற்கெனவே சந்தையில் உள்ள கன்சல்டன்சி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் களைந்து, வேலைவாய்ப்பு என்பதில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் ஐடியாக்களுடன் களம் இறங்கியிருக்கிறது. இதன் நிறுவனர் பிச்சுமணி துரைராஜ். இவர் அமேஸான், KLA Tencor போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் மனிதவளப் பிரிவில் பல ஆண்டுகளாக தான் பெற்ற அனுபவத்தைக்கொண்டு `human resources' என்ற துறையில் உள்ள பிரச்னைகளையும் இடைவெளிகளையும் அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளைக் காணும் முயற்சியுடன் இன்டர்வியூ டெஸ்க்கைத் தொடங்கியிருக்கிறார்.

அவரிடம் பேசினோம். 

``ஒரு நிறுவனத்தின் மிகப்பெரிய சொத்து, அதன் ஊழியர்கள்தான். வெற்றிபெற்ற மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும் ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் இது. சரியான குழு அமைந்தால், எதையும் சாதிக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட குழுவை உருவாக்குவதுதான் சவால். அதனால்தான் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சரியான ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க எண்ணற்ற நேரத்தைச் செலவுசெய்கிறார்கள். நேரமும் பெரும் பணச்செலவும் சரியான ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க ஆகிறது என்பதனாலேயே, ஏதோ ஒரு நபரை இங்கி பிங்கி பாங்கி விளையாட்டில் தேர்ந்தெடுப்பதுபோல் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள். தவறான ஒரு நபர், ஒரு குழுவையே சிதைத்துவிடுவார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சரிசெய்ய, நிறுவனங்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டிவரும். 

வேலைக்கு ஆள்களை எடுப்பது என்பது, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அவ்வளவு முக்கியமானது. அது கடினமானதும்கூட. அதைச் செயல்படுத்தும் திட்டத்தில் இன்டர்வியூ டெஸ்க் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. வேலைக்கான விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை ஃபில்டர் செய்து, அவர்களுக்குத் தேவையான தேர்வுகளை வைத்து இன்டர்வியூ செய்து அனுப்புவதில், பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. ஏனெனில், இதற்காகப் பெரும்பணமும் நேரமும் செலவாகின்றன. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, ஒரு புராசஸ் மாடலை உருவாக்க நினைத்தேன். ஒவ்வொரு துறையிலும் தேர்ந்த அனுபவமிக்க நபர்கள் மூலம் விண்ணப்பங்களை ஃபில்டர் செய்து, அவர்களை இன்டர்வியூ செய்து சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து நிறுவனங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்" என்றார் 

இவருடைய யோசனைகள் நடைமுறையில் வெற்றியடையுமாயின், வேலையில்லா பட்டதாரிகளின் ஆபத்பாந்தவனாக `இன்டர்வியூ டெஸ்க்' மாறும் எனச் சொல்லலாம். அதே சமயம் நிறுவனங்களுக்குத் தேவையான சரியான நபர்களை அளித்து, நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close