Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேட்ஜெட்கள்தான் இனி க்ளூ... துப்பறிவாளன்கள் அப்டேட் ஆக வேண்டிய நேரம்!

Chennai: 

துப்பறிவாளன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தடயங்களை தேடி விஷால் ஒரு வீட்டிற்கு செல்வார். அந்த வீட்டின் மேசையில் படர்ந்திருக்கிற தூசிகளை வைத்து அங்கே ஒரு புத்தகம் இருந்ததாக கண்டுபிடிப்பார். அதுவே அவர் எடுத்துக் கொண்ட அசைன்மென்டின் மிக முக்கிய க்ளூ. அதை வைத்தே அடுத்தடுத்த காட்சிகள் நகரும். இது போன்ற க்ளூக்கள் கிடைப்பது சிரமம். ஆனால், அதையும் எளிதாக்குக்கின்றன கேட்ஜெட்ஸ். இனிவரும் காலங்களில் டிஜிட்டல் பொருட்கள், கேட்ஜெட்ஸ்கள் எல்லாம் பல முடிச்சுகளை அவிழ்க்கும். நம் கைகளில் இருக்கிற ஒவ்வொரு பொருளுமே நம்மைப் பற்றிய தடயங்கள்தான். நம்பவில்லையா?

டிஜிட்டல்  கேட்ஜெட்

அமெரிக்காவின் எளிங்க்டன் மகாணத்தில் இருக்கிற காவல் கட்டுப்பாட்டு அறை 911 அவசர எண்ணிற்கு ஒரு அழைப்பு வருகிறது. பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைகிறார்கள். திறந்து கிடந்த வீட்டின் வரவேற்பறையில் ஒரு பெண் இறந்து கிடக்கிறாள். வீட்டின் சமையலறையில் 40 வயதுடைய ஒரு ஆண் நாற்காலியில் கட்டப்பட்டு இருக்கிறார். கயிற்றில் கட்டப்பட்டு இருந்தவர் பெயர் ரிச்சர்ட். இறந்துப் போன பெண்ணின் கணவர்.  கயிறுகளை அவிழ்த்து அவரை மீட்கிற போலீசார் தங்களின் விசாரணையை தொடங்குகிறார்கள். 

கணவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஹாலிவுட் நடிகர் வின் டீசலை போல இருக்கிற ஒருவன் வீட்டிற்குள் புகுந்து விட்டதாகவும், தன்னை சமையலறையில்  கட்டி வைத்து விட்டு,  பிறகு மனைவியை கொன்றுவிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கிறார். போலீசார் வீடு முழுவதும் சோதனை செய்கிறார்கள். வீட்டில் இருந்த cctv  காட்சிகள், வீட்டின் மற்ற பொருட்களையும் ஆராய்கிறார்கள். வீட்டிற்குள் வேறு ஒருவர் வந்து போனதிற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. போலீசாரின் பார்வை ரிச்சர்ட் மீது திரும்புகிறது. ரிச்சர்டை தீவிர விசாரணை வளையத்திற்குள்  கொண்டு வருகிறார்கள்.

கணவர்தான் குற்றவாளி என்பதை யூகிக்கிற போலீசார் அதற்கான ஆதாரம் இல்லாமல் குழம்புகிறார்கள். வீட்டில் இருக்கிற ஒவ்வொரு பொருளாய் சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். போலீசாரின் கைகளில் ஃபிட்பிட் கிடைக்கிறது. ஃபிட்பிட் என்பது நமது உடலியக்க செயல்பாடுகளை அளவிடும், கைகளில் கட்டிக்கொள்ளும் டிஜிட்டல் கருவி. அது கொலை செய்யப்பட்ட பெண் பயன்படுத்திய ஃபிட்பிட். கொலை செய்யப்பட்டதாக கணவர் கூறிய நேரத்தை வைத்து பிட்பிட் வரலாறை ஆராய்கிறது போலீஸ். கொலை செய்யப்பட்டதாக சொன்ன நேரத்தில் அந்த பெண் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை பிட்பிட் காட்டிக் கொடுக்கிறது. போலீஸ் ரிச்சர்டை விசாரிக்கிற விதத்தில் விசாரிக்க, மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொள்கிறார். அவரது மொபைல் போனை ஆராய்ந்ததில் ஒரு வருடதிற்கு முன்பு விவாகரத்து வேண்டுமென கேட்டு தன் மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பியிறுக்கிறார். அன்றைய தினத்திலிருந்து மனைவியை கொல்ல நேரம் பார்த்து வந்திருக்கிறார் ரிச்சர்ட். ஃபிட்பிட் காட்டிக் கொடுக்க, இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட் .

digital

அமெரிக்காவின் ஓஹையோ மாகாணம் மிடில்டவ்ன் நகரத்தை சார்ந்தவர் ரோஷ்காம்ப்டன். இவரது வீடு 2016 ஆம் ஆண்டு 19  தேதி தீ பிடித்து எரிந்து விடுகிறது. ஜன்னல் கம்பிகள் வழியாக காம்ப்டன் தப்பித்து விடுகிறார். 40000 டாலர் அளவிற்கு பொருட்கள் நாசமாகி விடுகின்றன. காம்ப்டன் காப்பீடு மூலம் நிவாரணம் பெற விண்ணப்பிக்கிறார். காப்பீடு நிறுவனம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்குகிறது. விபத்தின்போது வீட்டின் உரிமையாளர் காம்ப்டன் தூக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கிறார். தீ பிடித்ததன் உண்மை நிலையை அறிய வழக்கு நீதிமன்றம் செல்கிறது.

நீதிமன்றத்தில் காம்ப்டன் அவர்களுடைய உடலுக்குள் இருக்கிற பேஸ் மேக்கரை  சோதனை செய்ய வேண்டுமென காப்பீடு நிறுவனத்தார் கேட்கிறார்கள். பேஸ் மேக்கர் என்பது இதய ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பயன்படுத்தப்படும் சிறிய கருவி. பேஸ் மேக்கரின் பதிவுகள் ஆராயப்படுகின்றன. தீப்பிடித்த நாளில் காம்ப்டன் தூங்குவதாய் சொன்ன நேரத்தையும் பேஸ்மேக்கர் கருவியின் செயல்பாடுகளையும் ஆராய்ந்ததில் காம்ப்டன் தூங்கவில்லை என்பது உறுதிபடுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் காம்ப்டன் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என பேஸ்மேக்கர் பதிவுகள் தெரிவித்திருகின்றன. இப்போது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்ட காம்ப்டன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கபடுகிறார்.

இனி வரும் காலங்களில் வீட்டு உபயோக பொருட்கள் எல்லாமே குற்ற வழக்குகளின் மிக முக்கிய சாட்சிகளாக இருக்கும் என்கிறார்கள் அமெரிக்க காவல்துறை அதிகாரிகள். டிஜிட்டலில் இருக்கிற எல்லா பொருட்களுமே நம்முடைய செயல்களை வேவு பார்த்து பாதுகாத்து வைத்திருக்கின்றன. அவைதான் நீங்கள் தொலைந்து போனாலோ கொலை செய்யப்பட்டாலோ தவறான காரியங்களில் ஈடுபட்டாலோ காட்டிக் கொடுக்கிற டிஜிட்டல் சாட்சிகள். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்களின் தகவல்கள் உங்களுக்கே தெரியாமல் எங்கோ ஒரு கணினியில் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close