Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பலமும் பலவீனமும் அதன் தொழில்நுட்பம்தான்..! குர்ஸ்க் நீர்மூழ்கி கப்பலின் கண்ணீர்க்கதை #Kursk

குர்ஸ்க்

வல்லரசு நாடுகள் எல்லாமே நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றன. அவை தொழில்நுட்ப வசதிகளில் கில்லி.  தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலவ விடப்பட்ட பல நீர்மூழ்கிக் கப்பல்களை அதே தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தேடவும் வைத்திருக்கின்றன. சிலவற்றைக் கண்டுபிடித்தார்கள். சிலவற்றை குற்றுயிரும் கொலையுயிருமாக மீட்டார்கள். தேடியது போதுமென சில கப்பல்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அப்படி தொலைந்து போய், பிறகு தேடிக் கண்டுபிடித்து கடலுக்குள் அப்படியே விட்டுவிட்டு வந்த ஒரு கப்பல்தான் "இன்விசிபிள் குர்ஸ்க்" 

குர்ஸ்க், நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்யாவுக்குச் சொந்தமானது. அணுசக்தியால் இயங்கக் கூடிய குர்ஸ்க் கப்பலின் மொத்த எடை13600 டன். அதி நவீன போர்கப்பல். கப்பலில் ஏவுகணைகள் செலுத்தக் கூடிய நான்கு வழி குழாய்கள் இருக்கின்றன. கப்பல் முழுவதும் போர் ஆயுதங்கள்தான். டார்பிடோ (ஏவுகணை) அறை முழுவதும் ‘பேட்  கேர்ள்’ என அழைக்கக் கூடிய பெராக்ஸைடு டார்பிடோக்கள்.  உலக  நாடுகளில் போர் ஆயுதங்களைச் சுமந்துசெல்லும் மிகப் பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் குர்ஸ்க் கப்பல் முக்கியமானது. இந்தக் கப்பலின் கேப்டன் டிமிட்ரி கலஷ்னிகோவ். 

2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் சம்மர் எக்ஸ் என்கிற மிகப் பெரிய போர்ப்பயிற்சியை ரஷ்யா மேற்கொள்கிறது. போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், ஹெலிககாப்டர்கள் என பயிற்சித் தொடங்குகிறது. அதில் குர்ஸ்க் நீர்மூழ்கி கப்பலும் ஒன்று. பயிற்சியை மேற்கொள்ள குர்ஸ்க் கடலுக்குள் பயணிக்கிறது. 118 வீரர்களுடன் பயிற்சியைத் தொடங்குகிறது. மூர்மன்ஸ்க் என்கிற இடத்தில் பயிற்சிக்காக நார்வேயிலிருந்து 160 கடல் மைல்கள் தூரத்தில் நிறுத்தப்படுகிறது. காலை 8:51 மணிக்கு இரண்டு டார்பிடோக்களை செலுத்துவதற்கு அனுமதி கேட்டு வடக்குக் கடற்படையின் போர்க்கப்பலுக்கு தகவல் அனுப்புகிறார்கள். 

அந்த போர்க்கப்பலின் பெயர் ப்யூட்ர் வெள்க்கி. ரஷ்யாவின் மிகப் பெரிய போர்க்கப்பல். அனுமதி கிடைக்கவே, டார்பிடோ அறையில் இருப்பவர்கள் குழாயில் டார்பிடோவை செலுத்துகிறார்கள். பயிற்சியில் பயன்படுத்துகிற எல்லா டார்பிடோக்களும் டம்மியானவை. ஆகஸ்ட் 12  11:29:34 நேரப்படி முதல் டார்பிடோவை செலுத்துகிறார்கள். முதல் முயற்சி வெற்றி பெற, இரண்டாவது டார்பிடோவை  11:31:48ல் செலுத்த தீர்மானிக்கிறார்கள். வெற்றியின் மிதப்பில் இரண்டாவது டார்பிடோவை  முதலில் செலுத்தியதைவிட 250 மடங்கு அதிக வேகத்துடன் செலுத்துகிறார்கள். குழாயில் இருந்து டார்பிடோ வெளியேறுகிறது. வெளியேறிய டார்பிடோ வெடிப்பதை கேப்டன் உணர்கிறார். பயிற்சின் ஓர் அங்கம் என வீரர்கள் நினைக்கிறார்கள். இரண்டாவது டார்பிடோவை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக கடற்படை தளத்துக்கு தகவல் அனுப்புகிறார்கள். 

நேரம் மதியம் 13:30. குர்ஸ்க் பற்றிய எந்தத் தகவலும் கடலில் இருக்கிற போர் கப்பலுக்கு வராமல் இருக்க, சந்தேகத்தின் பேரில்  போர்க்கப்பலில் இருக்கிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு ஒரு ஹெலிகாப்ட்டரை அனுப்புகிறார்கள்.14:00 மணிக்கு குர்ஸ்க் எங்கும் தென்படவில்லை என ஹெலிகாப்டர் தகவல் அனுப்புகிறது. ரேடியோ, ரேடார், சோனார்  என எல்லா தொழில்நுட்பங்களுக்கும் டாட்டா காட்டிவிட்டு 118 பேருடன் ஒரு மணி நேர இடைவெளியில் நீர்மூழ்கிக் கப்பல் மறைந்துவிடுகிறது. 

அடுத்த ஒருமணி நேரத்தில் ரஷ்யாவின் போர் விமானங்கள் கப்பல்கள் என குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பலைத் தேட ஆரம்பிக்கிறார்கள். உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் சுற்றுலாவில் இருக்கிறார். குர்ஸ்க் காணாமல் போனதை ரகசியமாக வைக்கிறார்கள். தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்படுகிறது. ரஷ்ய கடற்படைத் தளபதி அலெக்சேவிச் போபோவ் கப்பல் குறித்த தகவல்களை துணை அதிபருக்கு தெரியப்படுத்துகிறார். ராணுவ மந்திருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. இருபது கப்பல்கள், 3000 வீரர்கள் என தேடல் தொடர்கிறது.  குர்ஸ்க் கப்பலில் இருந்து எந்த சிக்னலும்  வரவில்லை.

நீர்முழ்கி

ரஷ்யாவின் டோஸிலென்கோ மீட்புக் கப்பல் குர்ஸ்க் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபடுகிறது. இக்கப்பலில் ஆழ்கடலில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிற AS 32, AS 34 என அதிநவீன இரண்டு சல்பர் மீட்பு  வாகனங்களைக் கொண்டது. குர்ஸ்க் காணாமல் போன அன்றைய மாலை 18:00 மணி வரை தொடர்ந்த தேடுதலில் குர்ஸ்க் கப்பல் பற்றிய எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை. 18:30 மணிக்கு அதி தீவிர ரோந்து விமானம் மூலம் கப்பலைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. அன்றைய இரவு 22:30 மணிக்கு ரஷ்யாவின் வடக்குக் கடற்படை அவசர நிலையை அறிவிக்கிறது. போர்ப்பயிற்சி நிறுத்தப்படுகிறது. பயிற்சியில் ஈடுபட்ட எல்லா வீரர்களும் குர்ஸ்க் கப்பலைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 

குர்ஸ்க் நீர்மூழ்கி கப்பல் எங்கே இருக்கிறது என்கிற எந்த விவரமும் அறிய முடியாமல் ஒட்டுமொத்த ரஷ்யப் படையும் திண்டாடிக் கொண்டிருக்கிறது. கப்பல் காணாமல் போன ஒன்பது மணி நேரம் கழித்து நிலைமையின் தீவிரத்தை உணர்கிற கடற்படைத் தளபதி, கப்பல் காணாமல் போனதை உறுதிசெய்கிறார்.

அடுத்த நாள் ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை காலை. ரஷ்யா எங்கும் குர்ஸ்க் கப்பல் பற்றிய வதந்திகள் பரவ ஆரம்பிக்கின்றன. நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கிற வீரர்களின் உறவினர்கள் பதறுகிறார்கள். அரசு, கப்பல் பற்றிய எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் இருக்கிறது. எல்லோரும் கப்பல் மீண்டும் வரும் என நம்புகிறார்கள். பிரார்த்தனைகள் நாடெங்கும் நடக்கிறது. 

கப்பல் காணாமல் போனதை அறிந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, நாடுகள் கப்பலைத் தேடும் பணிக்கு உதவிக்கு வருவதாக சொல்கின்றன. அமெரிக்கா, தன்னுடைய இரண்டு ஆழ்கடல்  நீர்மூழ்கிக் மீட்புக் கப்பலை அனுப்புவதாக அறிவிக்கிறது. ஆனால், “கப்பலைத் தேடும் பணி  தீவிரமாக நடைபெறுகிறது. உலகநாடுகளின் உதவி தேவையில்லை” என ரஷ்ய ராணுவ அமைச்சர் இகோர் செர்ஜியேவ் அறிவிக்கிறார். கப்பலின் விபத்துக்கான காரணம் கண்டறிய குழு ஒன்றை ரஷ்ய அரசு அமைக்கிறது.

ஆகஸ்ட் 13 அதிகாலை 4:50 மணிக்கு ப்யூட்ர் வெள்க்கி போர்க்கப்பல், கடலுக்கு அடியில் உயிரியல் முரண்பாடு இருப்பதை உறுதி செய்கிறது. 11:30 மணிக்கு SOS ஒலியை வைத்து கப்பல் இருக்கிற இடத்தைக் கண்டறிவதென முடிவெடுக்கிறார்கள். மாலை 17:30 மணிக்கு AS34 மீட்பு வாகனத்தில் கடலுக்குள் பயணிக்கிறார்கள். கடலின் அழுத்தத்தால் பாதிப்படைகிற AS34 18:30 மணிக்கு போர்கப்பலுக்கு மீண்டும் திரும்புகிறது.AS 34 பழுதானதால் மீட்புப் பணிக்கு AS32 மீட்பு வாகனம் இரவு 22:40 மணிக்கு மெக்கேல் ரூடின்ஸ்க்கீ என்பவர் தலைமையில் மீண்டும் கடலுக்குள் அனுப்பப்படுகிறது. அந்தக் குழு குர்ஸ்க்கை SOS சமிக்ஞையை வைத்துக் கண்டறிய முயல்கிறது. கடலில் உயிரியல் முரண்பாடு இருப்பதை உறுதிசெய்து ப்யூட்ர் வெள்க்கி கப்பலுக்கு அனுப்புகிறது. கப்பலைக் கண்டறிவதில் தடை ஏற்பட AS 32 திங்கள் அதிகாலை 1:00 மணிக்கு திரும்பி வருகிறது. 

அன்றைய தினம் அதிகாலை 4:50 மணிக்கு பீட்டர் தி கிரேட் என்கிற சோனார் ஆப்பரேட்டர் ஐந்து மணி நேர நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு குர்ஸ்க் கப்பல் இருக்கிற இடத்தை சோனார்  உதவியுடன் கண்டறிகிறார். தேடுதலில் ‘சல்வேஜ் டக்’ என்கிற ரஷ்ய மீட்புக் கப்பல் இணைகிறது. ஆழ்கடல் மீட்பில் இக்கப்பல்கள் பெயர் போனவை. இக்கப்பலின் ஆழ்துளை கேமராவை கடலுக்குள் செலுத்தியதில் குர்ஸ்க் கப்பலின் புகைப்படங்கள் கிடைக்கின்றன. கப்பலின் முன் பக்கம் சேதமடைந்த புகைப்படங்கள் கப்பல் விபத்தில் சிக்கியதை உறுதிசெய்கின்றன. 

குர்ஸ்க்

பழுதுபார்க்கப்பட்ட AS34 மீண்டும் காலை 5:00 மணிக்கு குழுவோடு கடலுக்குள் கிளம்பியது. 6:00 மணிக்கு குர்ஸ்க் கப்பலைக் கண்டுபிடிக்கிறது. குர்ஸ்க் நீர்மூழ்கி கப்பலின் முதல் தளம் முழுவதும் வெடித்திருப்பதை பார்க்கிறார்கள். கடல் சீற்றம், கடல் அழுத்தம் அதிகரிக்க AS 34  மீட்புப் பணியை கைவிட்டு மீண்டும் கப்பலுக்கு திருப்புகிறது. இயற்கையின் சீற்றத்தால்  அன்றைய தினம் மீட்புப் பணியை கைவிடுவதாக அரசு அறிவித்தது. 

ஆகஸ்ட் 14-ம் தேதி ரஷ்ய அரசு குர்ஸ்க் கப்பல் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறது. “குர்ஸ்க் அனுபவம் வாய்ந்த நீர்மூழ்கி கப்பல். இதில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப கோளாறால் கடலுக்குள் இருக்கிறது. கப்பல் இருக்குமிடத்தை கண்டறிந்து அரசு கப்பலுடன் தொடர்பில் இருக்கிறது” என மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எல்லோருடைய கேள்வியும் 118 பேர் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றி மட்டுமே இருக்கிறது. மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அரசு சமாளிக்கிறது. 

வலுவான அலைகள், கடற்பகுதி நீரோட்டங்கள் ஆகியவை செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மீட்புக் குழுக்களின் திறனை மேலும் பலவீனப்படுத்தியது. அதாவது கப்பல் காணாமல்போன நான்காவது மற்றும் ஐந்தாவது நாள். ஆகஸ்ட் 15 மற்றும் 16-ம் தேதி. இதற்கிடையில் ரஷ்ய பத்திரிகைகள் பலவும் குர்ஸ்க் கப்பல் தேடுவதைப் பற்றி விமர்ச்சிக்க ஆரம்பிக்கின்றன. ரஷ்ய அரசு ஏன் மற்ற நாடுகளின் உதவியை ஏற்கமறுக்கிறது என விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். விமர்சனங்களுக்கு பதிலளித்த அரசு மற்ற நாடுகளின் உதவியை நாடியது.

சம்பவம் நடந்த ஏழாவது நாள். ஆகஸ்ட் 19.  நார்வே அரசின் “நார்மன் பயனீர்” கப்பலும் பிரிட்டிஷ் அரசின் “LR 5" நீர்மூழ்கிக் கப்பலும் சம்பவ இடத்துக்கு வந்தடைகின்றன. குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் கடலின் 18 மீட்டர் அளவில் இருக்கும்பொழுது வெடித்ததை LR 5 உறுதி செய்கிறது. ரஷ்ய நார்வே பிரிட்டிஷ் நாடுகளின் கூட்டு நடவடிக்கையில் குர்ஸ்க் கப்பலின் ஒவ்வொரு பகுதியாக ஆராய்கிறார்கள். குர்ஸ்க் கப்பலின் அனைத்து வால்வுகளும் அடைத்துக் கொண்டிருப்பதால் அவற்றை உடைத்து உள்நுழைய முயற்சிக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமான வேலையாக அவர்களுக்கு இருக்கவில்லை. குர்ஸ்க் கப்பலின் எல்லாத் தளங்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் கப்பலின் பேட்டரிகள் முழுவதும் செயலிழந்துவிட்டன. நீர்மூழ்கிக் கப்பலின் ஒன்பதாவது தளத்தின் வால்வை உடைத்துப் பார்க்கும்போது  கப்பல் முழுவதும் நீர் சூழ்ந்திருக்கிறது. கப்பல் முழுதும் நீர் சூழ்ந்திருப்பதால் கூட்டுப் படைகளால் கப்பலுக்குள் செல்வது கடினமாகிறது. கம்பி வடிவ கேமராவை ஒன்பதாவது தளத்தில் செலுத்தி படம் பிடித்ததில் சில இறந்துபோன உடல்கள் கிடப்பது உறுதிசெய்யப்படுகிறது. 

அன்றைய தினம் மீட்பு பணியிலிருந்த நார்வே மற்றும் பிரிட்டிஷ் குழுக்கள் கடற்பரப்புக்குத் திரும்பி வருகிறார்கள். ராயல் நேவி தளபதி ருஸ்சில் மலர் தூவி இறந்தவர்களுக்கும் குர்ஸ்க் கப்பலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். குர்ஸ்க் கப்பலும் இறந்த உடல்களும் மீட்கப்படாமல் கடலுக்குள்  கிடக்கிறது. 

விபத்துக்கான காரணம் அறிய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கிறது. குர்ஸ்க் கப்பலில் பராமரிக்கப் படாமல் பல ஆண்டுகள் டார்பிடோ அறையில் இருந்த பெராக்ஸைட்  டார்பிடோவின் கசிவே விபத்துக்கு காரணம் என கண்டறிகிறது. முழுவதும் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் கெமிக்கள்களால் டார்பிடோ  நிரப்பப்பட்டிருக்கும். பெராக்ஸைட் டார்பிடோவுக்கு கெரோஸின் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. காப்பரின் அழுத்தம் அதிகரிக்கும்போது டார்பிடோ வெடிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.  உயர் அழுத்ததில் வெடிக்கிற டார்பிட்டோ 5000 டிகிரி வெப்பத்தை வெளிப்படுத்தும். 1939 இரண்டாம் உலகப் போரில் இவ்வகையான டார்பிடோக்களை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நாடுகள் பயன்படுத்தின. 1960-ம் ஆண்டு இவ்வகையான டார்பிடோக்களை இரண்டு நாடுகளுமே பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்தன. காரணம் பெராக்ஸைடு டார்பிடோக்கள் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தக் கூடியவை.அவற்றின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு இருக்கும். குர்ஸ்க் கப்பலில் இருந்த டார்பிடோ கசிய ஆரம்பித்து கார்பன் அழுத்தத்தில் வெடித்திருக்கிறது. வார்ஹெட் பொருத்தாமல் இருந்த மற்ற டார்பிடோக்களும் வெடிக்க கப்பல் மூழ்கியதாக அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

குர்ஸ்க் கப்பலில் யாரும் உயிரோடு இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. விபத்து நடந்த பத்தாவது நாள் (ஆகஸ்ட் 21-ம் தேதி) ரஷ்ய வடக்குக் கடற்படை ரஷ்ய மக்களுக்கு அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடுகிறது. “குர்ஸ்க் கப்பல் முழுவதும்  தண்ணீர் சூழ்ந்திருப்பதால் மீட்புப் பணிகள் தாமதமாகிறது. கப்பலில் யாரும் உயிரோடு இல்லை. உடல்கள் விரைவில் மீட்கப்படும்” என தெரிவிக்கிறது. விபத்துக்கான காரணம் அதுவரை சொல்லப்படவில்லை. ரஷ்ய கடற்படை தங்களது புகழுக்கு கேடு வரும் என நினைப்பதால் உண்மையை மறைக்கிறார்கள் என பத்திரிகைகள் எழுதுகின்றன. இறந்துபோனவர்களின் உறவினர்களை ரஷ்ய பிரதமர் புதின் சந்தித்துப் பேசுகிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. 

விபத்து நடந்து 11 மாதங்கள் கழித்து 2001 வருடம் ஜூலை மாதம் டச்சு கம்பனி வசம் குர்ஸ்க் கப்பல் மீட்கும் பொறுப்பை ரஷ்யா ஒப்படைக்கிறது. அவர்கள் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கப்பலை மீட்கப் போராடுகிறார்கள். கடைசியாக அக்டோபர்  8-ம் தேதி போலந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜெயண்ட் கப்பல் விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்படுகிறது. ஜெயண்ட் கப்பலின்  26 கடினமான கம்பிகள் கொண்டு கப்பலை மீட்க முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு கம்பியும் 900 டன் எடையைத் தாங்குபவை. குர்ஸ்க் கப்பலின் மேற்பகுதியில் துளையிட்டு 26 கம்பிகளும் குர்ஸ்க் கப்பலோடு இணைக்கப்படுகின்றன. இணைக்கப்பட்ட கம்பிகளை தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி குர்ஸ்க் கப்பலை ஆழ்கடலிருந்து ஜெயண்ட் கப்பல் மீட்கிறது. குர்ஸ்க் கப்பல் இருந்த இடத்தில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு ஒட்டு மொத்த குழுவும் திரும்புகிறது. 

பதினைந்து மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அக்டோபர் 23-ம் தேதி குர்ஸ்க் கப்பல் மீட்கப்பட்டு கடலின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்படுகிறது. கப்பலின்  கடல் நீர் முழுதும் வெளியேற்றப்படுகிறது. கப்பலிலிருந்து இறந்துபோன உடல்கள் மீட்கப்படுகின்றன. 118 பேரில் மூன்று பேருடைய உடல்களைத்தான் அடையாளம் காண முடிந்தது. 

மிகப்பெரிய துயரத்தை சுமந்தபடி கடற்பரப்புக்கு குர்ஸ்க் வந்த நாள் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close