Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விமானத்தில் பறக்கும் பயத்தை போக்கும் செயலி!

விமான பயணம் மேற்கொள்வதற்கு முன் அந்த விமானம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பிருக்கிறதா? என கேட்க முயல்வது சரியான சிந்தனையாக இருக்காது. இத்தகைய எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் அளிக்க கூடாதுதான். ஆனால், பியர் ஆப் பிளையிங் என்று பிரபலமாக குறிப்பிடப்படுவது போல விமானத்தில் பறக்க பயந்து நடுங்குபவர்களுக்கு இது போன்ற எண்ணங்கள் தவிர்க்க இயலாமல் மனதில் தோன்றலாம் அல்லவா? அதிலும் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் போது, விபத்து பற்றிய எண்ணம் அச்சமாக ஆட்டிப்படைக்கலாம் அல்லவா?

இது போன்ற நேரங்களில் விமானம் விபத்துக்குள்ளாக வாய்ப்பில்லை என்பதை புள்ளிவிரங்களுடன் யாராவது எடுத்துச்சொல்லி தைரியம் சொன்னால் எப்படி இருக்கும்?

இப்படி ஊக்கப்படுத்தி பறப்பதற்கு தைரியம் தருவதற்காக என்றே ஸ்மார்ட்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ஆம் ஐ கோயிங் டவுன் ? (Am I Going Down?') எனும் பெயரிலான அந்த செயலி, விமான பயணங்களுக்கு முன் , இந்த கேள்வியை கேட்டு பதில் பெற வழி செய்கிறது. அதாவது, இந்த விமானம் விபத்துக்குள்ளாகுமா? என கேட்க வைத்து பதில் சொல்கிறது. கேள்வி எதிர்மறையாக இருந்தாலும், பதில் என்னவோ புள்ளிவிவரங்களுடன் பயத்தை போக்கும் வகையில்தான் இருக்கும். உதாரணத்திற்கு , ஹாங்காங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கேத்தே பசுபிக்கின் போயிங் விமானத்தில் பறப்பதாக இருந்தால் அது விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு, 4,068,434 ல் ஒன்றாகும். அப்படி என்றால் பயப்பட வேண்டாம் அல்லவா?

அதே போல மும்பை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் நியூயார்க் செல்வதாக இருந்தால் விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பு 259,272 ல் ஒன்றாகும். பாதுகாப்பானது தான் இல்லையா?

இந்த செயலியில் இப்படி , பயணம் செய்யும் இடம், பயணிக்கும் விமான சேவை, புறப்புடும் விமான நிலையம் ஆகிய விவரங்களை சமர்பித்து , ஆம் ஐ கோயிங் டவுன் என்று கேட்டால்? அதற்கான பதிலை அளிக்கிறது. சும்மாயில்லை, விமான பயணங்கள் தொடர்பான விவரங்கள் , புள்ளி விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை அலசி ஆராய்ந்து இந்த பதிலை அளிக்கிறது.

விமானத்தில் பறக்கும் அச்சம் கொண்டவர்களுக்கு இந்த பதில் நிம்மதியையும் நம்பிக்கையையும் அளிக்கும் அல்லவா? அந்த எண்ணத்தில் தான் லண்டன் நகரைச்சேர்ந்த நிக் ஜான்ஸ் தனது வென்னிலா பிக்சல் நிறுவனம் சார்பில் இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.

அண்மை காலங்களில் அடுத்தடுத்து விமான விபத்துகள் நிகழ்ந்ததால் அதை சாக்கிட்டு இப்படி ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறாரோ என சந்தேகிக்கலாம். ஆனால் இதை ஜான்ஸ் மறுக்கிறார். இந்த விபத்துகள் நிகழும் முன்னரே இந்த செயலிக்கான ஆயவில் ஈடுபடத்துவங்கிவிட்டதாக அவர் சொல்கிறார்.

ஜான்ஸ், இப்படி ஒரு செயலி தேவை என்பதை தனிப்பட்ட முறையில் உணர்ந்துதான் இதை உருவாக்கி இருக்கிறார். அதாவது அவரது மனைவி ஜூலி பறப்பதற்கு பய்ந்து நடுங்குபவர். இதனாலேயே பயணங்களை திட்டமுடியாமல் ஜான்ஸ் தடுமாறியிருக்கிறார். இந்த அனுபவத்தின்படிதான் அவர், தன் மனைவி மற்றும் அவரைப்போல பயந்து நடுங்குபவர்களின் அச்சத்தை போக்க இந்த செயலியை உருவாக்கி இருக்கிறார்.

இது ஒரு கட்டண செயலி. முதலில் ஐபோனுக்காக அறிமுகமாகியுள்ளது. ஆதரவு அதிகம் இருந்தால் அடுத்ததாக ஆண்ட்ராய்டுக்கு வரலாம் என்கிறார் ஜான்ஸ்.

இதே போல ஏர்சேப்.காம் ( Airsafe.com ) தளமும் விமான பயணம் எந்த அளவுக்கு பாதுகாப்பானது எனும் விவரங்களை தருகிறது.

பறக்கும் பயத்தை போக்கும் செயலியின் இணையதளம்: http://www.vanillapixel.com/

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ