Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிக்ஸ்டார்ட்டரில் சாதனை படைக்கும் பெப்பில் ஸ்மார்ட்வாட்ச்!

ஸ்மார்ட்வாட்ச் உலகில் இப்போதைய பரபரப்பு என்ன தெரியுமா? விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆப்பிள் வாட்சோ அல்லது புதிய ஆண்ட்ராய்டு வியரோ அல்ல. அது பெப்பிலின் புதிய ஸ்மார்ட் வாட்ச்.

பெபில் டைம் எனும் இந்த ஸ்மார்ட்வாட்சிற்காக கிக்ஸ்டார்ட்டர் இணையதளத்தில் நிதியுதவி குவிந்து கொண்டிருக்கிறது. அதிலும் எப்படி தெரியுமா? கேட்ட தொகையான 5 லட்சம் டாலர்கள் ( கிட்டத்தட்ட ரூ.3 கோடி)  அரை மணி நேரத்திற்குள் குவிந்ததோடு இன்னும் நிதியை அள்ளி குவித்துக்கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் பெப்பிலின் புதிய ஸ்மார்ட்வாட்சான பெபில் டைம் இன்னும் விற்பனைக்கு கூட வரவில்லை ஆனால் அதற்குள் கிக்ஸ்டார்ட்டரில் நிதி திரட்டுவதில் புதிய சாதனை படைத்திருக்கிறது.



கிக்ஸ்டார்ட்டருக்கு பெப்பில் புதிதல்ல என்றாலும் அதற்கு நிதி குவியும் வேகத்தை பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஏதோ கிரிக்கெட் போட்டியில் ஸ்கோர் எகிறுவது போல பெபிள் டைம் வாட்சிற்கான நிதி கோரிக்கைக்கு ஆதரவு இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களை பாருங்கள். பெப்பில் டைம் வாட்சிற்காக பெபிபில் புதிய வாட்சிற்காக கோரப்பட்ட தொகை 5 லட்சம் டாலர்கள்.  கிக்ஸ்டார்ட்டர் வழக்கப்படி இந்த திட்டத்தை ஆதரிக்க விரும்புகிறவர்கள் 159 டாலருக்கு அதை முன்பதிவு செய்து கொள்ளலாம். மே மாதம் வாட்ச் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு சந்தையில் 199 டாலர் கொடுத்து வாங்க வேண்டும்.

இந்த கோரிக்கை வெளியான அடுத்த 17 நிமிடங்களில் 5 லட்சம் டாலர்கள் குவிந்துவிட்டது. கிக்ஸ்டார்ட்டரில் இது ஒரு சாதனை. கிரிக்கெட்டில் அதிவேக சதமடிப்பது போல , கிக்ஸ்டார்ட்டரில் நிதி திரட்டுவதற்கான இலக்கை இத்தனை விரைவாக வேறு எந்த புதிய நிறுவனமும் அடைந்ததில்லை. பெபில் டைம் 17 நிமிடங்களை இலக்கை அடைந்ததோடு நிற்கவில்லை ,முன்பதிவு செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நிதியும் கூடிக்கொண்டே போகிறது.

அடுத்த அரை மணி நேரத்திற்குள் பத்து லட்சம் டாலர்களை கடந்து , முதல் மூன்று நேர முடிவில் 4 மில்லியன் டாலர்களை தொட்டுவிட்டது. இந்த நிகழ்வு பற்றிய வயர்டு இணைய இதழ் கட்டுரையை எழுத துவங்கும் போது 1.9 மில்லியன் டாலர் நிதி குவித்திருந்தது, எழுதி முடிப்பதற்குள் 4.3 மில்லியனாக ஆகிவிட்டது என குறிப்பிடுகிறது.



அடுத்த சில மணிநேரங்களிலேயே நிதியின் அளவு 6. 3மில்லியன் டலாரை கடந்து, கிக்ஸ்டார்ட்டர் வரலாற்றிலேயே அதிக நிதி திரட்டப்பட்ட முன்னணி ஐந்து திட்டங்களில் ஒன்றாகி இருப்பதாக தொழில்நுட்ப இணையதளமான டெக்கிரஞ்ச் தெரிவிக்கிறது. ஆனால் மற்ற திட்டங்கள் எல்லாம் நிதி திரட்ட ஒரு மாத காலம் எடுத்துக்கொண்ட நிலையில், பெபில் டைம் வாட்ச் அரை நாளில் இந்த பட்டியலில் சேர்ந்திருப்பதாக டெக்கிரஞ்ச் வியக்கிறது.

இந்த வாட்சை முன்பதிவு செய்து ஆதரவு தெரிவிக்க இன்னும் 29 நாட்கள் உள்ள நிலையில்,  இன்னும் எந்த அளவு நிதி குவியும் என்று தெரியவில்லை. அதனால்தான் இணைய உலகில் பெபில் பற்றி பேச்சாக இருக்கிறது. பெப்பில் இப்படி கிக்ஸ்டார்ட்டரில் பரபரப்பை ஏற்படுத்துவது இது இரண்டாவது முறை. 2012 ல் அது அறிமுகமான போது இப்படிதான் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையில் பெப்பில் கிக்ஸ்டார்ட்டரில் பிறந்த நிறுவனம் என்று தான் சொல்ல வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு முன்னர் யாருமே கேள்விப்பட்டிராத நிலையில் பெப்பிலின் இளம் நிறுவனரான எரிக்  மிகிகோவ்ஸ்கி  ( Eric Migicovsky) கிக்ஸ்டார்ட்டரில் தனது நிறுவனத்தை அறிமுகம் செய்து , புதிதாக பெப்பில் எனும் பெயரில் ஸ்மார்ட்வாட்சை கொண்டு வர இருக்கிறோம், இந்த திட்டத்தை ஆதரிக்க விரும்புகிறவர்கள், வாட்சை வாங்க முன்பதிவு செய்து கொண்டு கைகொடுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

கிக்ஸ்டார்ட்டர் ஆரவலர்களுக்கு இந்த வாட்ச் பிடித்துப்போகவே அதை ஆதரிக்க முன்வந்தனர். குறிப்பிட்ட காலத்திற்குள் 10.3மில்லியன் டாலர் குவிந்து, பெப்பிலை கிக்ஸ்டாட்டர் வெற்றிக்கதையாக்கியது. கிக்ஸ்டார்ட்டர் வரலாற்றில் அதிக நிதி திரட்டிய திட்டங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்டது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், கிக்ஸ்டாட்டரில் அறிமுகம் செய்யப்பட்ட போது ,பெப்பில் நிறுவனம் வசம் அதன் முன்னோட்ட வடிவம்தான் இருந்த்தே தவிர உண்மையான தயாரிப்பு கிடையாது. ஸ்மார்ட் வாட்ச்சின் கோட்பாட்டை விவரித்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆதரித்தால் உற்பத்தியை துவக்குவோம் என்று நிதி கேட்டது. அதை ஏற்று தான் பலரும் அள்ளிக்கொடுத்தனர்.

கிக்ஸ்டார்ட்டரின் தளத்தின் நோக்கமே இது தான். அருமையான ஐடியாவை வைத்திருப்பவர்கள் அதை செயலுக்கு கொண்டு வர அங்கெ இங்கே முதலீட்டுக்கு அலையாமல் இணைய சமூகத்தில் விளக்கி நிதி திரட்டி காரியத்தில் இறங்க கைகொடுப்பதற்காகவே கிக்ஸ்டார்ட்டர் செயல்பட்டு வருகிறது.

இந்த கோட்பாடு படி இணையவாசிகளை கவர்ந்த மகத்தான புதிய முயற்சிகளில் ஒன்றாக பெப்பில் திகழ்கிறது. பெப்பில் வெற்றியில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் பெப்பில் அறிமுகமான போது ஸ்மார்ட்வாட்ச் என்பது அவ்வளவாக பிரபலமாகி இருக்கவில்லை. ஸ்மார்ட்போன் யுகத்தில் வாட்சுக்கு என்ன வேலை என்றே பலரும் கேட்டனர். ஆனால் பெப்பில் அந்த ஸ்மார்ட்போனுக்கும் கையில் கட்டியுள்ள வாட்சுக்கும் அழகாக தொடர்பு ஏற்படுத்தி கவ்னத்தை ஈர்த்தது. ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷனை மனிக்கட்டில் பார்க்கலாம், இமெயில் அறிவிப்பையும் பார்க்கலாம் போன்ற செயல்பாட்டு அம்சங்களோடு அதன் இ இங்க் டிஸ்பிலேவும் கவர்ந்தன.  இப்படி தான் பெப்பில் வெற்றி பெற்றது. அதன் புதுமையான வடிவமைப்பு, அதில் செயல்படக்கூடிய ஆப்கள் ஆகியவையும் இளசுகளை கவர பெப்பில் வாட்ச் பத்து ல்ட்சத்திற்கு மேல் விற்று தனக்கென தனி இடத்தை பெற்றது.

இந்த நிலையில் பெப்பில் அதன் புதிய வாட்சான பெப்பில் டைம் அறிமுகத்தையும் தனது தாய் வீடான கிக்ஸ்டார்ட்டரில் நிகழ்த்தி கலக்கி இருக்கிறது. இந்த புதிய வாட்சில் டைம் லைன் வசதி, வண்ண டிஸ்பிலே ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. பெப்பிலின் இரண்டாவது வெற்றி பரபரப்பை மட்டும் அல்ல விமர்சனத்தையும் உண்டாக்கியுள்ளது. அதாவது, இளம் நிறுவனங்கள் தங்க்ளை அறிமுகம் செய்து கொண்டு ஆதரவு திரட்டுவதற்கான இணைய மேடையை , பெப்பில் போல ஏற்கனவே வெற்றி பெற்ற நிறுவனம் தனது புதிய தயாரிப்புக்கு பயன்படுத்துவது சரியா என்று பலரும் கேட்கின்றனர்.
இது கிக்ஸ்டார்ட்டரின் ஆதார குணத்தையே கேள்விக்குள்ளாகி அதை ஒரு மார்க்கெட்டிங் மேடையாக்கவில்லையா என்றும் வயர்டு போன்ற இதழ்கள் விமர்சித்துள்ளன.

பெப்பில் கிக்ஸ்டார்ர்டரில் பிறந்த நிறுவனம் தான் என்றாலும் அது வளர்ந்து நிலைப்பெற்று தனக்கென் தனி இடத்தை பெற்றிருக்கும் நிலையிலும் கிக்ஸ்டாட்டரில் வந்து கையேந்துவது சரியா என்றும் கேட்கப்படுகிறது.

ஆனால் கிக்ஸ்டார்ட்டர் சமூகத்திற்கு என்னவோ பெப்பில் வாட்சை பிடித்து போய்விட்டது. இதை எழுதி முடிக்கும் போது நிதியின் அளவு 7.7 மில்லியனை கடந்துவிட்டது.

பெப்பிலின் கிக்ஸ்டார்ட்டர் பக்கம்: https://www.kickstarter.com/projects/597507018/pebble-time-awesome-smartwatch-no-compromises

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ