Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மனிதர்கள் காரோட்ட தடை விதிக்கும் காலம் வரும்!'

தானியங்கி கார்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நம்பிக்கையோடு பதில் சொல்பவர்களும் இருக்கின்றனர். இவற்றால் விபரீதம்தான் வரும் என்று சந்தேகத்துடன் விவாதிக்கும் இன்னொரு தரப்பினரும் இருக்கின்றனர்.

ஆனால் சிலிக்கான் வேலியின் புதுமை பித்தன் எலன் மஸ்க்கை பொறுத்தவரை, தானியங்கி காரின் எதிர்காலம் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. தானியங்கி கார்கள் சாலைகளில் கோலோச்சும் காலம் விரைவில் வரும் என்று கூறும் மஸ்க், இன்னும் ஒரு படி மேலே சென்று மனிதர்கள் காரோட்ட தடை விதிக்கும் காலமும் வரலாம் என்று கூறியிருக்கிறார்.

தானியங்கி கார்கள் ஆபத்தானதாக இருக்கலாம் என அதன் எதிர்ப்பாளர்கள் கருதும் நிலையில், எலன் மஸ்க்கோ, மனிதர்கள் கார் ஓட்டுவதுதான் மிகவும் ஆபத்தானது என்கிறார்.

எலன் மஸ்க்கின் கருத்து எந்த அளவுக்கு சரி என்பது இருக்கட்டும், ஆனால் தானியங்கி கார் விவாத்தின் மீது கவனத்தை ஈர்க்க நிச்சயம் இப்படி ஒரு அதிரடி பார்வை அவசியம்தான். மேலும் இதைச்சொல்ல எலன் மஸ்க்கை விட தகுதியானவரும் இருக்க முடியாது.

எலன் மஸ்க், சிலிக்கான் வேலி வியப்புடன் பார்க்கும் தொழில்முனைவோர் ஆவார். எலக்ட்ரிக் கார்களை உருவாக்கி வரும் டெஸ்லா நிறுவனம் தவிர எதிர்கால போக்குவரத்துக்கு வித்திட முயலும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் அவர் இருக்கிறார். மனிதர் தொழில்நுட்ப போக்குகளை நன்கறிந்தவர். அதில் தொலைநோக்குடன் துணிந்து முதலீடு செய்யக்கூடியவர். அதே நேரத்தில் தீர்க்கதரிசனத்தோடு பேசவும் கூடியவர். அதோடு அவரது டெஸ்லா நிறுவனம் ஆட்டோ பைலல் எனும் தானியங்கி வசதியை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

அதனால்தான் சமீபத்தில் நடைபெற்ற தொழில்நுடப் மாநாடு ஒன்றில் தானியங்கி கார் பற்றி அவர் பேச அழைக்கப்பட்டிருந்தார். தானியங்கி கார்களை மிக விரைவில் நாம் சகஜமாக எடுத்துக்கொள்ளத்துவங்கி விடுவோம் என்று துவங்கியவர் , இதை ஒரு தீர்க்கப்பட்ட பிரச்னையாகவே தான் கருதுவதாக தெரிவித்தார்.

ஆனால் தானியங்கி கார்களுக்கான பாதை நீளமானதாக இருக்கும் என்று கூறியவர், கருத்தாக்கம் முதல் செயலாக்கம் வரை பலவித சவால்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டார். மனிதர்கள் ஓட்டும் கார்களை விட தானியங்கி கார்கள் பாதுகாப்பானது என கட்டுப்பாட்டு அதிகாரிகள் நம்ப, இரண்டு அல்லது மூன்று ஆண்டு கால ஆதாரம் தேவைப்படும் என்று கூறிய எலன் மஸ்க், ஒரு கட்டத்தில் மனிதர்கள் கார் ஓட்ட அனுமதிக்காத நிலை வரலாம் என்றும் தெரிவித்தார். கொஞ்சம் தொலைவில் உள்ள எதிர்காலத்தில் , மனிதர்கள் கார் ஓட்டுவது ஆபத்தானது என்பதால் அதற்கு தடை விதிக்கப்படலாம் என்றும் கண்களில் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

தானியங்கி கார்கள் சரி பட்டு வருமா என்பதில் எல்லாம் அவருக்கு சந்தேகம் இல்லை. இப்போது லிப்ட் சகஜமாக இருப்பது போல தானியங்கி கார்களும் சகஜமாகும் என்று அவர் அடித்து சொல்கிறார். ஆனால் ஒரே ஒரு சிக்கல் என்ன என்றால், தற்போது 200 கோடி கார்கள் உள்ள நிலையில், ஆண்டுக்கு ஒரு கோடி கார்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இவற்றை எல்லாம் தானியங்கி கார்களால் பதிலீடு செய்ய கொஞ்சம் காலம் ஆகும் என்பதே அவரது கவலையாக இருக்கிறது. எப்படி?

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ