Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இணையத்தை இலவசமாக வழங்க முடியுமா...? ஜக்கர்பர்க் பதில்!

பேஸ்புக்கின் இண்டெர்நெட்.ஆர்க் திட்டம்  இணைய சமநிலைக்கு எதிரானது அல்ல என்றும் இரண்டு கருத்தாக்கங்களும் இணைந்து இருக்க முடியும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். மேலும், நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சமநிலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஜக்கர்பர்க் கூறியுள்ளார்.

இணையவாசிகள் இணையதளங்களை அணுகும் உரிமையை இணையசேவை நிறுவனங்கள் கட்டுப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும் நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சமநிலைக்கு ஆதரவான போராட்டம் இந்திய இணையவெளியில் தீவிரமாகி உள்ளது. இணைய சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பான விவாதம் தீவிரமாகி உள்ள நிலையில் குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் இலவசமாக வழங்கும் ஃபேஸ்புக்கின் இண்டெர்நெட்.ஆர்க் திட்டமும் கடுமையாக விமர்சனத்திற்கு இலக்காகி உள்ளது.

இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பு இல்லாதவர்கள் அடிப்படையான இணையசேவைகளை வழங்கும் நோக்குடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஃபேஸ்புக் தெரிவிக்கிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. அரசு மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை ஃபேஸ்புக் செயல்படுத்துகிறது.
பொது நலன் நோக்கிலான திட்டம் என்று இதுப்பற்றி ஃபேஸ்புக் கூறி வந்தாலும், இணைய சமநிலை விவாதத்தில் இந்த திட்டம் கடுமையாக விமர்சனத்திற்கு இலக்காகி உள்ளது. குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் இலவசமாக வழங்குவது என்பது இணைய சம நிலைக்கு எதிரானது என்றும், எனவே இண்டெர்நெட்.ஆர்க் திட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் பலரும் கோரி வருகின்றனர்.

இதனிடையே, இந்தியாவில் இண்டெர்நெட்.ஆர்க் திட்டத்தில் கைகோர்ந்திருந்த நிறுவனங்கள் பல இணைய சமநிலைக்கு ஆதரவாக இதில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இந்நிலையில் சர்ச்சைக்குறிய இந்த முயற்சி பற்றி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் விளக்கம அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், இணைய சமநிலைக்கு இண்டெர்நெட் ஆர்க் திட்டம் எதிரானது அல்ல என்றும், மேலும் இணைய சமநிலைக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இணையம் திறந்த அமைப்புடன் இருக்க வேண்டும் என்பதை ஆதரிப்பதாக அதில் கூறி இருக்கும் ஜக்கர்பர்க் , எல்லோருக்கும் இணையத்தை வழங்குவது மற்றும் இணைய சமநிலை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது அல்ல என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் எந்த குறிப்பிட்ட இணையதளத்தையும் முடக்கவோ அதிவேக இணையத்தை உருவாக்கவோ முயற்சிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளவர், உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இணையம் உருவாக்கித்தரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் நிலை இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜக்கர்பர்கின் இந்த பதிவு ஃபேஸ்புக்கில் நீண்ட விவாத்ததையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் ஜக்கர்பர்கின் விளக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் சிலர் அவரிடம் இண்டெர்ண்ட்.ஆர்க் திட்டம் தொடர்பாக காரசாரமான கேள்விகளை கேட்டுள்ளனர்.

ரித்தேஷ் பாண்டியா என்பவர், இணைய வசதி இல்லாதவர்களுக்கு இணையத்தை சாத்தியமாகுவது நல்ல விஷயம் தான், ஆனால் முழு இணையத்தையும் வழங்காமல் குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் வழங்குவது ஏன் என்று கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ஜக்கர்பர்க், முழு இணையத்தையும் இலவசமாக வழங்குவது கட்டுப்படியாகாது என்று கூறியுள்ளார். இணைய போக்குவரத்திற்காக தொலைதொடர்பு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் டாலர்களை கொட்டியிருப்பதால் இலவச இணைடெர்நெட் அவற்றை திவாலாக்கிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

ஜர்க்கர்பர்கின் விளக்கம் : https://www.facebook.com/zuck/posts/10102033678947881

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ