Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கூகுளின் ஆண்ட்ராய்டு எம்; 10 முக்கிய அம்சங்கள்!

கூகுள் சமீபத்தில் அதன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த கட்டமான ஆண்ட்ராய்டு எம்-ஐ அறிவித்து அதன் பல்வேறு சிறப்பம்சங்களை வெளியிட்டது. பல விதங்களில் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு மேம்பட்ட அனுபவத்தை அளிக்க கூடியதாக கருதப்படும் ஆண்ட்ராய்டு எம்.மில் இடம் பெற்றுள்ள பத்து முக்கிய அம்சன்கள் வருமாறு;

செயலி அனுமதி: ஆண்ட்ராய்டு எம்.மில் செயலிகளை பயன்பாட்டை பொறுத்தவரை பயனாளிகள் கைகளில் அதிக சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக செயலிகளுக்கு வழங்கப்படும் அனுமதி இனி பெரும்பாலும் பயனாளிகள் கைகளில் இருக்கும்.

ஸ்மார்ட்போன் பயனாளிகள் பலவித செயலிகளை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். செயலிகள் பல செயல்பாடுகளை எளிதாக்குகிறது. ஆனால், செயலிகளில் உள்ள முக்கிய பிரச்னை அவை பலநேரங்களில் அந்தரங்க மீறலில் ஈடுபடுவது தான். பெரும்பாலான இலவச செயலிகள் அவற்றை இன்ஸ்டால் செய்யும்போது பயனாளிகளின் காமிரா, இருப்பிடம் , புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கின்றன.

பயனாளிகளும் வேறு வழி இல்லாமல் இந்த அனுமதிக்கான கட்டங்களில் எல்லாம் டிக் செய்து சம்மதிக்கின்றனர். ஆனால், இந்த அனுமதியை தொடர்புடைய செயலிகள் எதற்காக பயன்படுத்திக்கொள்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அது மட்டும் அல்லாமல் இதை பயனாளிகள் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது.

ஆனால், ஆண்ட்ராய்டு எம்.மில் இதற்கான தீர்வு உருவாக்கப்பட்டு உள்ளது. இனி செயலிகளை நிறுவும்போது எந்த அனுமதி பத்திரமும் கொடுக்க வேண்டியதில்லை. தேவையான செயலியை நிறுவிய பின் அதன் குறிப்பிட்ட வசதியை பயன்படுத்திக்கொள்ளும் போது தான் அனுமதி கோரப்படும்.

ஆகவே, குறிப்பிட்ட அந்த அனுமதி எதற்காக கேட்கப்படுகிறது என பயனாளிகள் தெரிந்து கொண்டு செயல்படலாம். மேலும், செயலிகள் எந்த அனுமதியை எப்படி பயன்படுத்துகின்றன என்று தெரிந்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் அவற்றை ரத்து செய்யலாம். ஆக, ஸ்மார்ட்போன் பின்னணியில் செயலிகள் உங்களுக்கு தெரியாமல் உங்கள் இருப்பிடம் போன்ற விவரங்களை சேகரிக்கும் வேலை இனி நடக்காது.

குரோம் டேப்: ஆண்ட்ராய்டு எம்.மில் உள்ள குரோம் டேப் வசதி இதையும் ஒரு செயலி போலவே உணரச்செய்யும். இதில் செயலியில் ஒரு இணைப்பை கிளிக் செய்தால் அதற்குள்ளேயே குரோம் பிரவுசர் ஓபனாகும். பல்வேறு குரோம் பயன்பாடுகளை இந்த முறையில் பயன்படுத்தலாம்.

செயலி இணைப்புகள்: கூகுள் ஆண்ட்ராய்டு எம்.மில் செயலி வழி இணைப்பு சாத்தியம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு செயலி அளிக்கும் இணைப்பு அது அளிக்கும் இணைப்பு தானா என சரி பார்த்து வழங்கப்படும். எனவே எந்த இணைப்பையும் தயக்கம் இன்றி கிளிக் செய்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு பே: ஆப்பில் பே போலவே கைரேகை சரிபார்ப்பு மூலம் பணம் செலுத்து வசதியை அளிக்கிறது. யாருக்கும் கிரிடிட் கார்ட் எண் விவரங்களை அளிக்கமாலே பரிவர்த்தை செய்யும் வசதி இருக்கிறது.

கைரேகை வசதி: பாதுகாப்பான பயன்பாட்டிற்காக தனிப்பட்ட செயலிகளில் நுழைய கைரேகை நுழைவு அங்கீகார வசதி இடம்பெற்றுள்ளது.

பேட்டரி காலம்: பெரும்பாலான போன்களில் உள்ள பிரச்சனை பேட்டரியின் சார்ஜ் அடிக்கடி தீர்ந்து போவது தான். இதை சரி செய்யும் வகையில் டோஸ் எனும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம், ஸ்மார்ட்போனில் பேட்டரி பயன்பாட்டை கண்காணித்து எந்த செயலி எவ்வளவு சார்ஜை சாப்பிடுகிறது என காண்பிக்கிறது. போன் பயன்பாட்டில் இல்லாதபோதும் பின்னணியில் செயலிகள் செயல்பட்டுக் கொண்டிருந்தால் இது அவற்றை அமைதியாக்கி விடுகிறது. இதன் மூலம் பேட்டரி சார்ஜ் இருமடங்காகும் என்கிறது கூகுள்.

கூகுள் நவ் புதிய வசதி: குரல் வழி சேவையான கூகுள் நவ் மூலம், வாட்ஸ் அப் அல்லது ஜிமெயில் போன்றவற்றை பயன்படுத்தும்போது தொடர்புடைய தேடல் தகவல்களை எளிதாக பெறலாம். இமெயிலில் உள்ள தகவலில் அழுத்தி கிளிக் செய்தால் தொடர்புடைய தகவல் தோன்றும் என்கிறது கூகுள்.

நேரடி பகிர்வு: இந்த வசதி மூலம் சமூக ஊடக் பகிர்வுகளை நேரடியாக மேற்கொள்ளலாம். இவை தவிர மேம்பட்ட ஒலி கட்டுப்பாடு வசதி மற்றும் வார்த்தைகளை தேர்வு செய்து அடையாளம் காட்டுவதற்கான மேம்பட்ட வசதியும் உள்ளன.

இந்த அம்சங்கள் தவிர புகைப்படங்களை சேமிக்க கூடுதல் வசதி, மெய்நிகர் சேவையான கார்ட்போர்ட் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றையும் கூகுள் அறிவித்துள்ளது. மேலும் ஜீன்ஸ் பேண்ட் போன்ற்வற்றை தொடுதிரையாக்கி ஸ்மார்ட்போன்களை இயக்கும் ஸ்மார்ட் துணியையும் கூகுள் அறிவித்துள்ளது.

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ