Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அறிவியல் தொழில்நுட்பத்தின் புதிய வரவுகள்!

காலம் மாற, மாற அறிவியல் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. அந்த வரிசையில் புதியதாக வந்துள்ள சில கண்டுபிடிப்புகளை இங்கே பார்க்கலாம்...

பயோ ஸ்டாம்ப்:

மருத்துவத் துறையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக தற்போது புதிதாக வந்துள்ள ஒரு கருவி பயோ ஸ்டாம்ப். இக்கருவியை ஸ்டாம்ப் போல நமது உடலில் ஒட்டிக்கொண்டால் நம் உடல்நிலையைப் பற்றி இக்கருவி திரையில் காண்பிக்கும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், மூளை தொடர்பான நோய்களுக்கு எளிய முறையில் மருத்துவம் பார்க்க இக்கருவி உதவும்.

E-Fan வானூர்தி:

பெட்ரோலில் ஓடிக்கொண்டிருந்த கார், டூவீலர்கள் தற்போது மின்சாரத்திலும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அறிவியல் வளர்ந்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக மின்சாரத்தில் ஓடும் விமானமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம். 19 அடி நீளம் உள்ள, 2 பேர் பயணிக்க கூடிய அளவில், ஒரு குட்டி விமானத்தை தயாரித்துள்ளது.

மின்சாரத்தால் இயங்கக் கூடிய இந்த விமானத்திற்கு E-Fan விமானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்கும் விதமாக இதில், லித்தியம் தாது மற்றும் இரும்பு அடங்கிய சுமார் 120 மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஒருமுறை இந்த மின்கலங்களை முழுவதுமாக மின்னேற்றினால், ஒரு மணிநேரம் விமானம் பறக்கக்கூடிய ஆற்றலைப் பெறும். அதிநவீன தொழில்நுட்பத்தால் ஆன இந்த விமான சோதனை ஓட்டம் தென்மேற்கு பிரான்சில் உள்ள போடியாஸ் விமான நிலையம் அருகே நடந்தது. அப்போது இந்த விமானம் சுமார் ஒரு மணிநேரம் பறந்து சாதனை படைத்தது. தற்போது E-Fan வரிசையில் E-Fan 2.0 மற்றும் E-Fan 4.0 என்ற 2 வகையான விமானங்களை ஏர்பஸ் (Airbus) நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட் ஹெல்மெட்:

இனிமேல் வழி தெரியாத ஊருக்கும் ஹெல்மெட் அணிந்திருந்தால் எளிதாக செல்லலாம். ஏனெனில் தற்போது வந்துவிட்டது ஸ்மார்ட் ஹெல்மெட். ஸ்குல்லி என்ற ஹெல்மெட் நிறுவனம் ஜி.பி.எஸ். கருவி, கேமரா ஆகியவை பொருத்தப்பட்ட புதிய ஸ்மார்ட் ஹெல்மெட்டை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஹெல்மெட்டின் கண்ணாடியில் உள்ள திரையில் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்துவிட்டால் எவ்வளவு தொலைவு எது எளிமையான வழி என்பதை காட்டும்.

செல்போன் கதிர்வீச்சு:

செல்போனின் மூலம் இனி கதிர்வீச்சுத் தொல்லை நமக்கில்லை:
செல்போனில் பேசினால் கதிர்வீச்சு பாதிப்பு, ரேடியேசன் (Radiation) தொல்லை அதிகம் என்ற உண்மையை பலர் கூறியோ அல்லது எங்கேனும் படித்து கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இனிமேல் நமக்கு அந்த தொல்லை இருக்காது. அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைகழக ஆய்வாளர் 'சிஷைஷென்' என்பவர் இந்த நுட்பத்தை உருவாக்கி உள்ளார். இது செல்போன் கோபுரம், மற்ற செல்போன் அழைப்புகள், சொந்த அழைப்புகள் எல்லாவற்றிலும் இருந்தும் சுற்றுப்புரத்தில் கசியும் ரேடியோ கதிர்களை உள் இழுத்து சார்ஜ் ஆகிக் கொள்கிறது. இதனால், பேட்டரியின் ஆயுள் 30 சதவீதம் அதிகமாகிறது. ஆனால், இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

ஸ்மார்ட் வளையல்:

பாக்கெட்டிலோ, கைப்பையிலோ (Hand bag) செல்போனை சைலண்ட் மோடில் (Silent Mode) போட்டு வைத்திருக்கும் போது ஏதாவது ஒரு முக்கிய அழைப்பு வந்து, அதை நாம் எடுக்க முடியாமல் சில நேரங்களில் பல பிரச்னைகள் வரலாம். இதற்கு ஒரு தீர்வு போல தற்போது புதிதாக வந்துள்ள கண்டுபிடிப்பே ஸ்மார்ட் வளையம். உங்கள் போனிற்கு அழைப்பு வரும் போது இந்த ஸ்மார்ட் வளையம் உங்களுக்கு அதிர்வைத் தரும் அல்லது சமிக்ஞைக் காட்டும். இது தோற்றத்தில் கையில் அணியும் ஆபரணம் போலிருப்பதால் இதை எங்கும் அணிந்து கொண்டு செல்லலாம்.

நுண்ணுயிர் தொழில்நுட்ப கற்கள் மூலம் கான்கிரீட்:

நாம் வீடுகளின் சுவர்களில் விரிசல் விட்டு பார்த்திருப்போம். பல வீடுகளில் விரிசல் பெரிதாகி இடியும் நிலையில் கூட உள்ளன. இப்படி பல கட்டிடங்கள், வீடுகள் நம் கண்களில் தென்படுகின்றன. ஆனால், இனிமேல் அவை அப்படி இருக்காது. ஏனெனில் நுண்ணுயிர் தொழில்நுட்பத்தால் உருவாக்கிய கற்கள் மூலம் கான்கிரீட் போடும் முறை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கற்கள் நுண்ணுயிர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. எனவே, சுவற்றில் விரிசல் விழுந்தால், நுண்ணுயிர்களின் பெருக்கத்தால் விழுந்த விரிசல் தானாகவே மூடிக்கொள்ளும்.

-கோகுல் கவுதம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close