Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐடி துறையைத் தேர்வு செய்யலாமா?

பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களின் முதல் சாய்ஸ்... ஐ.டி. துறை தான். ஆனால், இன்று, ஐ.டி. நிறுவனங்களில் லே ஆஃப், ஐ.டி. ஃபீல்டில் பிரஷர் அதிகம், வேலை கிடைத்தாலும் நிரந்தரமில்லை என்று பல பிரச்னைகள் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், ஐ.டி. கலாச்சாரம் என்று ஒரு தனி இனம் உருவாகி இருக்கிறது. ஏ.சி. அறை வேலை, ஆடம்பர வாழ்க்கை, கார், சொந்த ஃபிளாட், மால்களில் சினிமா மற்றும் ஷாப்பிங், வாரந்தோறும் பிக்னிக், வெளிநாட்டு புராஜெக்ட் பிளஸ் டூர், நாகரீக நட்பு வட்டம் என்று பளபள மாயை காட்டுகிறது.

அப்படி என்னதான் நடக்கிறது ஐ.டி. துறையில்...? விரிவாகச் சொல்கிறார் கல்வி ஆர்வலர் கிர்த்திகாதரன்.

‘‘கூகிள், அமேஸான் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏன் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து கேம்பஸில் ‘ஃப்ரெஷர்’களை எடுக்கிறார்கள்? அனுபவம் வாய்ந்த எத்தனையோ ஆயிரக்கணக்கான ஐ.டி. மக்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் எம்.எஸ். முடித்துவிட்டு வேலைக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பிறகு ஏன் நம் பொறியியல் கல்லூரிகளில் ஆளெடுக்கின்றன நிறுவனங்கள்? அதேசமயம், திருநெல்வேலியில் இருக்கும் சாதாரண கல்லூரி கூட பெரிய நிறுவனத்துக்கு ஆள் அனுப்புகிறது. ஆனால் ‘பெரிய’ கல்லூரியில் படித்து பக்காவாக ஜி.பி.ஏ. வைத்திருந்தும், சிலருக்கு வேலை கிடைக்காமல் போகிறது.

இப்படி வெளியில் இருக்கும் நமக்கு ஆயிரம் கேள்விகள். ஏன், ஐ.டி. நிறுவனத்தில் இருக்கும் பலருக்கே கூட விடை தெரிவதில்லை. 10 வருடங்கள் கழித்து திடீரென்று லே ஆஃப் ஆகும்போது, ‘ஏன்? எதற்கு? நல்லாதானே வேலை செய்தோம்?’ என்று தோன்றும். எங்கு தவறு நடந்திருக்கிறது என்று யோசிப்பதற்குள் கார் கடன், வீட்டுக் கடன் என்று சுமைகள், ஆடம்பர வாழ்க்கை செலவுகளின் அழுத்தம், திரும்ப மீள முடியாத சுழலில்  சிக்கியிருப்போம்.

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் துறைகளில் இன்றும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் தகுதி வாய்ந்தவர்களை தேடுவதற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கின்றனர். இங்கோ, மாணவர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். எல்லா துறைகளிலும் இந்தப் பிரச்னை உண்டு. என்றாலும் ஐ.டி. துறையில் இந்த இடைவெளி அதிகமாகவே இருக்கிறது.

அப்படி என்றால் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில், கணினியில் ஆர்வம் இருக்கும்பட்சத்திலேயே அந்தக் கோர்ஸை தேர்வு செய்ய வேண்டும். இணைய ஆர்வம் என்பது வேறு, தொழில்நுட்பத்தில் ஆர்வம் என்பது வேறு என்பதைக் கவனிக்க வேண்டும். கோர்ஸில் சேர்ந்ததும், மனப்பாடம் செய்து மார்க் வாங்க நினைக்கக் கூடாது. நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களை, ‘புத்தகப் புழுவாக, வெளியுலகத்துக்குத் தகுந்தவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளாதவராக இருப்பார்களோ?’ என்று இண்டர்வியூ செய்பவர்கள் சந்தேகத்தோடு அணுகுவார்கள். அதற்காக மதிப்பெண் தேவையில்லையா என்று கேட்கக் கூடாது. மதிப்பெண் தேவை. ஆனால், அது மட்டுமே தகுதிக் காரணி இல்லை. பெங்களூரு, மும்பை, டெல்லி மாணவர்கள், சென்னை மாணவர்களை பின்னுக்குத் தள்ளுவது இந்த விஷயத்தில்தான். அவர்கள் மதிப்பெண்களுக்கு படித்தாலும், துறை சார்ந்த எல்லா விஷயங்களையும் சுயமாகக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பொறியியலில் இரண்டு வகை இருக்கிறது. டெக்னிக்கல் எனப்படும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி தொடர்புடைய துறைகள். வெளிநாட்டில் எம்.எஸ். படிப்புகள் பல ஆராய்ச்சி தொடர்புடையதாகவே இருக்கும். முக்கியமாக பயோ டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றில் ஆராய்ச்சி பக்கம் மாணவர்கள் செல்கின்றனர். பயோ டெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்புகளை விட ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் வாய்ப்புகளே அதிகம். அதே சமயம் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு டெக்னிக்கல் அறிவு தேவை. எனவே, எந்த வழியில் செல்கிறோம் என்பது மிக முக்கியமானது.

இந்தக் காலத்தில் எல்லா மாணவர்களிடமும் லேப்டாப் இருக்கிறது. ஆனால், கேம்பசில் ஐ.டி., சி.எஸ். படித்த பல மாணவர்கள் ஒரு புரோகிராம் கூட எழுதத் தெரியாமல் இருக்கிறார்கள். ஒரளவுக்கு டெக்னிக்கல் விஷயம் தெரிந்தால் போதும்... கேம்பசில்  எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். கம்யூனிக்கேஷன் ஸ்கில்ஸ், ஆங்கில அறிவு எல்லாம் மிகப்பெரிய நிறுவனத்துக்குத் தேவை. ஆனால், சிறிய ஐ.டி. நிறுவனங்கள் புரோகிராம் நன்றாக தெரிந்து, சொந்தமாக புராஜெக்ட் செய்திருந்தால், அரியர்ஸைக் கூட சில சமயங்களில் கவனிக்க மாட்டார்கள். அவர்களுக்கு தங்கள் வேலைக்குத் தகுதியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். அதேபோல, ஒரு மாணவர் ஆங்கில அறிவில் பிலோ ஆவரேஜாக இருந்தாலும், நெட்வொர்க்கிங்கில் அசத்துகிறார் என்றால், அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். எனவே விஷயங்கள் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

மாணவர்கள் மெருகேற வேண்டிய மூன்று விஷயங்கள்!

எதுவும் கற்றுகொள்ளாமல் வேலையில் சேரும் மாணவர்கள் நிறுவனங்கள் தயவில்தான் இருக்கவேண்டும். அவர்களாக கொடுப்பதுதான் சம்பளம். அதே சமயத்தில் முன்பே கற்றுக்கொண்டு நம் புரஃபைல் பலமாக இருக்கும்போது, நம் கையில் நம் வேலை இருக்கும். அதற்கு மூன்று விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

முதலாவது, புரோகிராம் நன்றாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இங்கு மட்டும் இல்லை... அமெரிக்காவில் கூட புரோகிராமிங்-க்கு நல்ல மதிப்பு இருக்கிறது. கேம்பஸ் செல்லும் தேர்வாளர்களுக்கு, பல மாணவர்கள், ‘நான்கு வருடம் இவர்கள் என்னதான் படித்தார்கள்?’ என்ற சளிப்பைத் தருகிறார்கள். அந்தளவுக்கு, 70% ஐ.டி. மாணவர்களுக்கு புரோகிராமிங்கை முழுமையாக எழுதத் தெரிவதில்லை. தவிர, தங்களை நேர்த்தியாக வெளிப்படுத்திக்கொள்ளவும் தெரியவில்லை.

மடியில் லேப்டாப், கையில் ஸ்மார்ட் ஃபோன், 3 ஜி நெட்வொர்க் வைத்துக்கொண்டு... நான்கு வருடம் படித்துவிட்டு ஒரு புரோகிராமிங் கூட செய்யத் தெரியவில்லையென்றால் என்ன செய்வது? எனவே, முதல் விஷயமாக ஒரு புரோகிராமிங் லாங்வேஜில் திறமை பெற்றிருக்க வேண்டும். அதில் எப்போதும் தேவை உண்டு. சோஷியல், மொபைல் துறைகளை விட குறிப்பாக அனலடிகள் மற்றும் ஈ-காமர்ஸ் எனப்படும் விற்பனைத் துறைகளில்  புரோகிராமருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பழைய ஜாவா அல்லது சி என்று இல்லாமல் புதிதாக உள்ள பைதான், சி, ஜாவா ஸ்க்ரிப்ட் மற்றும் ரூபி போன்றவைகளை கற்றுக்கொள்ளலாம். வெறும் மொழியாக கற்றுக்கொள்ளாமல் அதனை செம்மையாக கோட் செய்ய அல்காரிதம்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. இதனால், மெமரியை சரியான முறையில் பயன்படுத்தவும், கம்ப்யூட்டிங் சீராகச் செய்யவும் உதவும். பெரிய அளவில் பரிமாற்றம் நடக்கும்போது இதையெல்லாம் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதுபோன்று நன்றாக தேர்ச்சி பெற்று இருப்பவர்களுக்கு ஸ்டார்ட் அப் மற்றும் இ காமர்ஸ் நிறுவனங்கள் 6 முதல் 12 லட்சம் வரை சம்பளம் கொடுத்து எடுத்துக்கொள்கிறார்கள்.

இரண்டாவது, கோடிங்கில் போட்டி வைக்கும் இணையப் பக்கத்தில் பயிற்சி பெற வேண்டும். அங்கு ஃபேஸ்புக் போல ஒரு புரொஃபைல் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அங்கே கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ள முடியும். நிறைய விஷயங்கள் புரிபடும். அடுத்து ஹாகிங் (hack)  போட்டிகள், பயிற்சிகள் எல்லாம் இருக்கும். அதில் நமக்கு ரேங்கிங் கூட உண்டு. அதுவும் நமது புரொஃபைலுக்கு வலு சேர்க்கும். code chef, hake earth போன்ற இணையதளங்கள் இருக்கின்றன. தற்பொழுது பள்ளி மாணவர்கள் கூட பயிற்சி பெறுகிறார்கள்.

ஆன்லைன் டெஸ்டிங் வளர்ந்து வருவதால் மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் போன்றவை உலகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக நேரடியாக வேலைக்கு எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் உக்ரைன் மற்றும் புனேயில் இருந்து நேரடியாக மாணவர்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். சம்பளம், நூறு ஆயிரம் டாலர்கள் முதல் நூற்று ஐம்பது ஆயிரம் டாலர்கள் வரை.

மூன்றாவதாக, கணினியைப் பாடமாக படிக்கும் மாணவர்கள் சொந்தமாக ப்ளாக் வைத்துக் கொள்வது நல்லது. அதில் தீசிஸ் போல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து எழுத ஆரம்பிக்க வேண்டும். அப்போதே நிறைய கற்றுக்கொள்ளவும் ஆரம்பிப்போம். இதெல்லாம் ஒரு மாணவரின் தகுதிக்கான மதிப்பு கூட்டல்கள்.

புராஜெக்டில் சுயம் அவசியம்!

கேம்பஸில் தேர்வாளர்கள் ‘சிறப்பாக என்ன செய்தீர்கள்?’ என்று கேட்டால், பல மாணவர்களும் புராஜெக்ட்டை காட்டுவார்கள். பெரும்பாலும் அதை நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. வேறு சில விஷயங்களில் கலந்துக் கொண்டதாக மாணவர் தகவலில் இருக்கும். பார்த்தால் பத்து பேரோடு செய்து இருப்பார். பாதிக்கும் மேல் விஷயம் தெரிந்து இருக்காது. இதெல்லாம் தெரியும் என்று வெறும் லிஸ்ட் போடக் கற்றுக்கொள்ளக் கூடாது. நம் அறிவை மேம்படுத்த மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான மாணவர்கள் புராஜெக்ட் கூட சொந்தமாகச் செய்வதில்லை. பல கல்லூரிகளில் பேராசிரியர்கள், ‘புதிதாக வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு அவர்கள் லிஸ்ட்டில் இருக்கும் குறிப்பிட்ட புராஜெக்டை செய்யச் சொல்லி வலியுறுத்துவார்கள். இந்த மாதிரி நேரத்தில் மாணவர்கள் சரியாக முடிவெடுக்க வேண்டும். சொந்த ஐடியா புராஜெக்ட் மிக அவசியம்.

மாணவர்களுக்கு என்று தனியே சிந்திக்கும் திறன் அவசியம். முக்கியமாக ஐ.டி. துறையில் கண்டிப்பாக தேவை. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் உள்ள மாணவர்களே வெற்றி பயணத்தில் மேலே செல்ல முடியும்.

எல்லா தளங்களிலும் முயற்சி அவசியம்!

இ-காமர்ஸ், ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தினம், தினம் ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்கள் களத்தில் குதிப்பதால், எக்கச்சக்க வேலை வாய்ப்புகள் உள்ள துறை இது. சிலர் சில துறைகளில் உள்ளே போனால் ஐ.டி.யில் வாய்ப்பு இருக்காது என்று ஒதுக்குவார்கள். எடுத்துக்காட்டாக, பாங்கிங் பகுதி என்றால், அதில் கணினி அறிவு பற்றிய அதிக விஷயங்கள் இல்லாவிடினும் பாங்கிங் பற்றி தேர்ச்சி அடைய முடியும். எல்லா இடங்களிலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பார்க்க வேண்டும். அப்படியே ஒதுக்கக் கூடாது.

முக்கால்வாசி மாணவர்கள் நான்கு வருடங்களில் பெரிதாக எதுவும் கற்றுக்கொள்வதில்லை. எனவே 21 வயதில் ஐ.டி. துறையில் நுழையும்போது நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எந்த இடத்துக்கும் பயணப்படத் தயாராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் வேலைபார்க்கப் போகும் துறை இது. முதல் ஐந்து வருடங்களை சோதனை முயற்சிகளுக்கு விடலாம். எல்லாவற்றுக்குள்ளும் புகுந்து கற்றுக் கொள்வது நல்லது.

அதற்காக அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டு இருந்தால் மதிப்பு இருக்காது. அதேசமயத்தில் ஒரே இடத்தில் இருந்தாலும் கற்றுக்கொள்ள வாய்ய்பு இருக்காது. அப்படி ஒரே இடத்தில் இருந்தால் வேலைக்கான தரத்தில் உயர்ந்து இருக்க வேண்டும். சிறு நிறுவனமோ, பெரிய நிறுவனமோ, கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாத பட்சத்தில் வெளியே வந்து கற்றுக்கொண்டு வேலை செய்வது நல்லது. ஐந்து வருடங்கள் சோதனை முயற்சியாக எல்லாம் செய்தால் மார்கெட், துறை எல்லாம் புரிபட்டு நமக்கான இடத்தில் அமர்ந்து விடலாம்.

அப்படி பல வாசல்களில் ஒரு வாசல் உதாரணமாக, ஆப்பிள் மிளிஷி. அதில் ஆப் (App) செய்பவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே இரண்டு லட்சம் கிடைக்கும். மேலே செல்ல, செல்ல நல்ல வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதற்கு ஆப்பிள் ஃபோன் மற்றும் நூறு டாலர் முதலீடு வேண்டும். ஆனால், ஓபன் சோர்ஸ் எனப்படும் பல்வேறு தளங்களில் முதலீடு தேவைப்படாது. இப்படி நிறைய முயற்சி செய்து பார்க்கலாம். User Experience Design.UXD என்பது கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை விட இன்னும் அதிக டெக்னிக்கல் துறை. இது தொழில்நுட்ப முடிவில் உபயோகிப்பாளரை கவர வேண்டும். ஐ-ஃபோன் போல இதற்கு சாப்ட்வேர்கள் தயாரிக்க வேண்டும். இதற்கும் தேவை இருக்கிறது.

டேட்டா சயன்டிஸ்ட் வாய்ப்புகளைப் பார்ப்போம். கணக்கு மற்றும் புள்ளியியலில் அதுவும் டாக்டரேட் வரை வாங்கியவர்களுக்கு அனாலிடிக்ஸ்-ல் நிறைய சாதிக்க இயலும். ஆனால் ஸி மற்றும் பைதான் மொழி தெரிந்திருக்க வேண்டும். இதற்கு நிறையத் தேவையும் இருக்கிறது. புள்ளியியல் டேட்டா மாதிரிகள் நன்றாகத் தயாரிக்கத் தெரிந்தால், 5 முதல் 6 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். வேறு எதுவுமே தேர்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை... ஜாவா, சி யை ஒழுங்காக படித்து சொந்தமாக சில புராஜெக்டுகள் செய்து இருப்பதாக காட்டினால் கூட போதுமானது. அதற்கு இரண்டு முதல் நான்கு லட்சம் வரையே சம்பளமாக கிடைக்கும்.

அடுத்து ஓபன் சோர்ஸ். இது இலவசமாகக் கிடைப்பதால் மாணவர்கள் இணையம் மூலமாக வீட்டில் இருந்தோ, கல்லூரி லேபில் இருந்தோ தேர்ச்சி பெற முடியும். BIG DATA டெக்னாலஜி எனப்படும் ஹடூப் கூட இணையம் வழியாகக் கற்றுக் கொள்ள முடியும். எப்போதும் போல SAP BI படித்தவர்களுக்கு மிகப்பெரிய தேவை இருக்கிறது. ஆனால், இது இலவசம் இல்லை என்பதால் மாணவர்கள் உள்ளே நுழைவது கடினமாக இருக்கிறது. தவிர, விலை அதிகமும் கூட.

மொத்தத்தில், மாணவர்கள் சர்வீஸ் நிறுவனங்களை விட, தயாரிப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதைத் தவிர சிறு நிறுவனங்களில் நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. இவர்கள் மெக்கானிக்கல், சிவில் என்று இல்லாமல் பயோ படித்த மாணவர்களைக் கூட எடுக்கிறார்கள். எதற்காக?

‘எங்களுக்குத் நிறைய தேவை இருக்கிறது. அதை ஈடுகட்ட வேறு துறை மாணவர்களை எடுக்கிறோம். அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுத்து சேர்த்துக் கொள்வோம். ஆனால், எந்தத் துறையாக இருந்தாலும் கல்லூரியில் எங்களுக்குத் தேவையான விஷயங்களோடு மாணவர்கள் இருப்பதில்லை. எனவே, எந்தத் துறையாக இருந்தாலும் நாங்கள் பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கிறது. கொஞ்சம் காமன்சென்ஸ் எனப்படும் செயல்படும் அறிவு இருந்தால் போதும்... தேர்வு செய்துவிடுவோம்’ என்கிறார்கள்.

ஐ.டி. துறையிலும் கூட, தற்போது வேலைவாய்ப்பு இல்லை, டவுன் ஆகி இருக்கிறது என்பதை விட தகுதியானவர்கள் இல்லை என்பதே விஷயம். லே ஆஃப் என்பதெல்லாம் மிகச்சிறியதாக எங்கோ நடக்கும் விஷயங்கள். தகுதியையும், திறமையும் வளர்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு எங்கும் பிரச்னை இல்லை.

மாணவர்கள் டூ பட்டதாரிகள் டூ பணியாளர்கள்!

பொறியியல் பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களில் ஃப்ரெஷராகச் சேரும்பொழுது ஜாவா புரோகிராமிங் செய்ய ஆரம்பிப்பார்கள். நான்கு வருடம், சீனியர் போஸ்ட் கொடுப்பார்கள். ஆனால், அதேயே தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார்கள். வளர்ச்சி தேவை. சரியான சமயத்தில் மாறுவதும் அவசியம். அதே சமயத்தில் கம்பெனி மாறிக் கொண்டே இருப்பதும் தவறு.

சில கம்பெனிகள் பெரிய கல்லூரிகளில் கொத்து, கொத்தாக மாணவர்களை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இன்னொரு பக்கம் அதே நிறுவனத்தில் இருந்து பணியாளர்கள் வெளியேறிக்கொண்டு இருப்பார்கள். ஏன் என்று நிறுவனம் பற்றிய ரிவியூ பார்த்தால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஆனால், வேலை அழுத்தம் அதிகம் என்று சொல்லி இருப்பார்கள். பட்டதாரிகள் ஆரம்பக் கட்டத்தில் கூட உழைக்கத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஐ.டி. என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கு ஏற்றார் போல தயாராக இருந்தால் வெற்றி நிச்சயம். ஐ.டி. படித்துவிட்டு புராஜெக்ட் இல்லாமல் பெஞ்சில் அமர்வது, லே ஆஃப் ஆவது, கேம்பஸில் தேர்வாகாமல் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

எனவே, மாணவர்கள் எந்தத் துறையாக இருந்தாலும் தங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலமே சிறந்து விளங்க முடியும். கல்லூரி, ஆசிரியர்கள், துறைத்தேர்வு எல்லாம் ஓரளவுக்குத்தான். தற்போது கணினி பயன்பாடு எல்லா துறைகளிலும் நிறைந்துவிட்டதால், இன்னும் சில வருடங்களுக்கு ஐ.டி. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஜேஜே தான்!’’ - பாசிட்டிவ் செய்தி சொல்லி கை குலுக்கினார் கிர்த்திகாதரன்.

 - கே.அபிநயா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close