Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்போன் விற்பனை: ஆச்சர்யம்...ஆனால் உண்மை!

ந்தியாவில் தகவல் புரட்சியை ஏற்படுத்திய மொபைல் போன்கள் விற்பனை தற்போது மந்தமாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எண்பதுகளில் இந்தியாவில் டெலிபோன்கள் அதிக அளவில் மத்திய அரசு சார்பில் மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டது. ஆனால் டெலிபோன் சேவை மக்கள் மத்தியில் மிக விரைவாகப் பரவாமல் மெதுவாகவே சென்று சேர்ந்தது. இதனையடுத்து தகவல் தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களுக்கும் காலூன்ற அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக வேகம் எடுத்த தகவல் தொடர்பு துறை, இந்தியாவில் மிக வலுவாக வளர்ந்தது.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில்,தனியார் நிறுவனமான ரிலையன்ஸ், செல்போன் துறையில் பல்வேறு சலுகை விற்பனைகளை அறிவித்து, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை  செல்போனும் கையுமாகத் திரிய வைத்தது. அதன் பின்னர் ஏர் செல், ஏர்டெல் என்று தனியார் மொபைல் சேவை நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்ததையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செல்போன் தயாரிக்கும் சர்வதேச நிறுவனங்கள் புதியதாகத் தொழிற்சாலைகளை நிறுவின. இதனால் செல்போன் பயன்படுத்துவோருக்குப் பல்வேறு புதிய வசதிகளுடன்  நவீன மொபைல்கள் கிடைத்தன.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில்  மொபைல் வணிகம் மிக முக்கிய இடத்தைப் பிடித்தது.  

ஆண்டுக்கு ஆண்டு அதிவேகமாக அதிகரித்து வந்த மொபைல் விற்பனை, தற்போது குறைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டின் காலாண்டில் 6 கோடியே இருபது லட்சம் மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளன.  ஆனால் நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் மொத்த மொபைல் விற்பனையில் 14.5 சதவீதம் குறைந்து, 5 கோடியே 30 லட்சம்மொபைல் போன்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

அதே போல மொபைல் போனின் நவீன வரவான ஸ்மார்ட் போன் விற்பனையும் 7.14 சதவீதம் குறைந்து இருக்கிறது.மேலும் குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன் விற்பனையும்  வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால் ஆசியாவின் மிகப்பெரிய மொபைல் மார்க்கெட் இந்தியா என்றும், வரும் ஆண்டில் 204 மில்லியன் செல்போன்கள் விற்பனை ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இது தொடர்பாக பேசிய  மொபைல் பயன்பாடு குறித்த முன்னணி தனியார் நிறுவன ஆய்வாளர் பைசல் கொவூஸா கூறுகையில்,"இந்திய மொபைல் வணிகம் தொடங்கிய ஆண்டில் இருந்தே ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. ஆனால் அண்மையில் சீன போன்களின் வருகையால் சர்வதேச மொபைல் நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்தியாவில் சரிவைச் சந்தித்தன. ஆனால் மீண்டும் இந்தியாவில் மொபைல் போன் விற்பனை சூடுபிடிக்கும். தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளதால் சர்வதேச நிறுவனங்களான சாம்சங், மைக்ரோ மேக்ஸ் உள்ளிட்டவற்றின் தயாரிப்புகள் அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "முன்பைவிட மொபைல் போன்களின் மீதான வரிவிதிப்பும் அதிகரித்துள்ளதால் விலையும் கூடியுள்ளது. அதனாலும் சரிவு நிகழ்ந்துள்ளது. அதே போல ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதால் கடைகளுக்குச் சென்று வாங்கும் நபர்களின் எண்ணிக்கைக் குறைந்து நேரடி வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் செல்போன் விற்பனையும் ஒன்று. அதனால் தற்போது சீனாவின் சியோமி நிறுவனம் போல ஆன் லைன் வணிகத்தையும் பிற முக்கிய நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளன. எனவே வரும் காலங்களில் விற்பனை அதிகரிக்கும்" என்றார். 

இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்மார்ட் போன்களில்  சாம்சங் நிறுவனம் 27.9 சதவீதம் சந்தையையும்,  அதற்கு அடுத்தபடியாக மைக்ரோ மேக்ஸ் 16.2 சதவீதமும் மற்ற இந்திய நிறுவனங்கள் 9.2 சதவீதமும் சந்தை விற்பனையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

- தேவராஜன்

 

எடிட்டர் சாய்ஸ்