Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் அம்மா சாயலா... அப்பா சாயலா? கண்டுபிடிக்கலாம்!

'ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி' எனும் அடைமொழியோடு' ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி.

சும்மா ஒன்றும் இல்லை... ஐபோனில் பத்து லட்சம் முறைக்கு மேல் டவுண்லோடாகி தாறுமாறாக ஹிட்டாகி இருக்கிறது இந்த செயலி. அப்படி என்ன இருக்கிறது இந்த செயலி? உலகில் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய கேள்விக்கு பதில் அளித்து அசத்த முற்படுகிறது இந்த செயலி.

அதாவது பிள்ளைகள், பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா?

ஆம், பெற்றோரில் குழந்தை யார் சாயலில் இருக்கிறது என்பது, உலகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பிரபலமாக இருக்கும் கேள்விதான். இதற்கான பதில் அவரவர் பார்வையில் இருக்கிறது. ஆனால் இந்த பொறுப்பை ஒரு சாப்ட்வேரிடம் விட்டால் எப்படி இருக்கும்? அதைதான் 'லைக்பேரண்ட் ஆப்' செய்கிறது.

தாங்கள் யார் சாயலில் இருக்கிறோம் என அறிய விரும்பும் நபர், இந்த செயலியில் தங்கள் புகைப்படம் மற்றும் பெற்றோர் படங்களை பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு, யாருடைய சாயல் என ஆய்வு செய்யும் பகுதியை க்ளிக் செய்தால், பெற்றோர் இருவரில் யாருடைய சாயல் அதிகம் என சதவீத கணக்கில் தெரியவரும்.

பையனோ, பெண்ணோ அச்சு அசல் அம்மா சாயல் என வைத்துக்கொள்ளுங்கள் இந்த செயலி அம்மாவைப் போல 70 சதவீதம் இருப்பதாக சொல்லலாம். சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா? அதில் சந்தே கம் இல்லை. ஆனால் ஒரு விஷயம் இந்த செயலியின் கணிப்பு துல்லியமானது என்று சொல்வதற்கில்லை. துல்லியமானது என இந்த செயலியும் சொல்லவில்லை. இதன் பின்னே பெரிய சாப்ட்வேர் ஆய்வு எல்லாம் கிடையாது. முற்றிலும் பொழுதுபோக்கிலான அம்சமாக இது செயல்படுகிறது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் இதன் பின்னே உள்ள ஐடியா சுவாரஸ்யமானது என்பதால் பலரையும் கவர்ந்திருக்கிறது. அத னால்தான் ஐபோனுக்கான செயலி கடையில் பத்து லட்சம் முறைக்கு மேல் டவுன்லோடாகி டாப் டென் இடத்தில் வந்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, இப்போது அண்ட்ராய்டு போனிலும் வந்திருக்கிறது. இந்த செயலி ஏன் இந்த அளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருப்பதாக கருதப்படுகிறது.

ஆனால் அடிப்படையில் இதன் பின்னே உள்ள ஐடியா சுவாரஸ்யமாக இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த செயலியை பயன்படுத்தும்போது, இது தரும் ஒரு வித கேளிக்கை உணர்வும் காரணமாக இருக்கலாம்.

எது எப்படியோ செயலி உலகின் லேட்டஸ்ட் இதுதான்.

இந்த செயலியில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதை உருவாக்கியது தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த  மவுல்சோன் சாட்சுவான் (Mualchon Chatsuwan ) எனும் மென்பொருளாளர்தான். இவர் ஏற்கனவே பல செயலிகளுக்கு சொந்தக்காரர். சரியாக சொல்வதனால் 78 செயலிகளை உருவாக்கி இருக்கிறார்.

இவற்றில் ஒன்றான லைக் அனிமல் ( இப்போது அனிமல் கேம்) தாய்லாந்தில் சூப்பர் ஹிட்டானது. இந்த செயலியின்  சிறப்பு என்னவென்றால், பயனாளிகள் தங்கள் புகைப்படத்தை அப்லோடு செய்ததும் அவர்கள் எந்த விலங்கைப்போல இருக்கின்றனர் என்று இது கணித்து சொல்கிறது. இதை வைத்துக்கொண்டு, தாய்லாந்தில் செல்போன் பயனாளிகள் நண்பர்கள் வட்டத்தில் ரகளை செய்து கொண்டிருக்கின்றனர்.

இதே பாணியில் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய செயலியை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என யோசித்தபோது தான் சாட்சுவானுக்கும் லைக் பேரண்ட் செயலிக்கான எண்ணம் தோன்றியிருக்கிறது. அவர் எதிர்பார்த்தது போலவே இந்த செயலியை எல்லோரும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். செயலிக்குள் விளம்பரங்களும் இடம்பெற்றிருப்பதால் அவருக்கு வருமானமும் குவிகிறது.

இதன் நீதி, சுவாரஸ்யமான செயலியை உருவாக்குங்கள், நீங்களும் செயலி உலகின் புதிய நட்சத்திரமா கலாம் என்பதுதான்!.

ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.dotsconnector. likeparenteng

- சைபர்சிம்மன்


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ