Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதல் கதைகளால் கவர்ந்திழுக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்!

காதல் எப்போது மலரும்? எப்படி மலரும்?  காதல் உண்டாகும் உணர்வு எப்படி இருக்கும்?

இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? அதுவும் இந்த பதில்கள் எல்லாம் காதல் கதைகளாக இருந்தால் எப்படி இருக்கும்? புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் கவனத்தை ஈர்த்திருக்கும் புதிய பக்கம்தான் இப்படி காதல் கதைகளை முன்வைத்து சொக்க வைக்கிறது.

தி வே வி மெட் எனும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கம், நிஜ உலக காதல் கதைகளை அவற்றின் கதாநாயகர்கள் மூலம் வழங்கி வருகிறது. ஆம், காதலிப்பவர்களும், காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களும் இந்த பக்கத்தில் தாங்கள் காதலில் விழுந்த அனுபவத்தை புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். 

புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் எத்தனையோ விதமான காவிய காதல்களை படித்தும், பார்த்தும் ரசித்திருக்கிறோம். ஆனால் இந்த பக்கத்தில் பகிரப்படும் காதல் கதைகள் எல்லாமே நிஜ வாழ்க்கை அனுபவங்கள். மிகைப்பூச்சோ, அலங்காரமோ இல்லாதவை. ஆனால் அவற்றின் உள்ளார்ந்த அன்பால் வசீகரிப்பவை.

காதல் வயப்பட்டவர்கள் அந்த கதையை தங்கள் வார்த்தைகளில் விவரிப்பதை படிக்கும்போது, சுவாரஸ்ய மாக இருப்பது மட்டும் அல்ல, அன்பை பரஸ்பரம் உணர்ந்து கொள்ளும் தருணங்கள்தான் எத்தனை அருமையானவை என்றும் வியக்க வைக்கின்றன.  உதாரணத்திற்கு இளம் பெண் ஒருவர், தனது காதலன் மைக்கை, நன்கொடை நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த விதம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

நிதி திரட்டும் நிகழ்ச்சி என்பதை மறந்து எல்லோரும் ஏதோ விருந்தில் பங்கேற்பது போல கேளிக்கையாக இருக்க, அந்த கொண்டாட்டத்தில் ஐக்கியமாக முடியாமல் இவர் தனித்து ஒதுங்கியிருக்கிறார். அந்த  கூட்டத்தில் இவர் தனிமையில் இருப்பதை கண்டுபிடித்து பேச வந்த மைக்குடன், அன்று முழுவதும் பேசித் தீர்த்து நெருக்கமாகி பத்தாண்டுகளாக பிரியாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு இளம் பெண், "என் காதலனை நாடகத்தின் போது சந்தித்தேன். நான் அதில் நடித்துக்கொண்டிருந் தேன். அவர் அங்கு பணியாளராக இருந்தார். அவரை லட்சத்தில் ஒருத்தராக உணர்ந்தேன். வாழ்விலே ஒருமுறை சந்திக்க கூடியவராக இருந்தார்' என தங்கள் காதல் அனுபவம் பற்றி கவித்துவமாக குறிப்பிட் டுள்ளார்.

இன்னொருவரின் காதல் கதை ருசிகரமாக இருக்கிறது. கல்லூரி மாணவியான அவர், புளோரிடா நூலகத்தில்தான் ஆஸ்கரை முதலில் பார்த்திருக்கிறார். நூலகத்தில் உட்கார கூட இடமில்லாத அளவிற்கு சரியான கூட்டம். ஆஸ்கர் இருந்த டேபிளில்தான் இடமிருந்ததால் இவர் அங்கு சென்று அமர்ந்து பேச்சு கொடுத்திருக்கிறார். அதன் பிறகு இடத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வெளியே சென்று காபி மற்றும் பிட்சா வாங்கி வந்து சாப்பிட்டிருக்கின்றனர். எங்கள் முதல் டேட்டிங் இப்படிதான் நிகழந்தது, விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பெண்ணோ, பள்ளி பருவத்தில் மலர்ந்த காதல் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். கால்பந்து போட்டியின்போது போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதைப்பார்த்துவிட்டு அந்த பையன் கத்தியிருக்கிறார். ஆனால் அவர் கவலைப்படாமல் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் கழித்து பார்த்தால் அந்த பையன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்காக தனது குடும்பத்தாரை வர வழைத்திருந்தான்.

இந்த சம்பவம் இருவரையும் நல்ல நண்பர்களாக்கியது என்றால் சில வருடங்கள் கழித்து, அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்தபோது, அந்த பையன் வாரந்தோறும் மருத்துவமனைக்கு வந்து அவரது கையைப்பற்றி அமர்ந்திருந்தபோது, காதலனாக மாறியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

எல்லோரும் இளஞ்ஜோடிகள்தான் என்றில்லை. வயதான பெண்மணி ஒருவர் அந்த கால காதல் அனுபவத்தை வெளியிட்டு, 63 ஆண்டுகளாக சேர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இப்படி விதவிதமான காதல் அனுபவங்கள் அவை மலர்ந்த தருணத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அடடா, இந்த காதல்கள்தான் எத்தனை விதமாக இருக்கின்றன!

காதல் பற்றி பலருக்கு பலவித கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் இந்த காதலர்கள் எல்லோரும் தங்கள் மனங்கவர்ந்தவர்களை சந்தித்த விதம் பற்றியும், அவர்கள் தங்களை கவர்ந்த விதம் பற்றியும் விவரிப்பதை படிக்கும்போது அன்பின் வெவ்வேறு பரிமாணங்களை கண்டு நெகிழ முடிகிறது.

அதனால்தான் இந்த காதல் இன்ஸ்டாகிராம் பக்கம் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்துள்ளது. துவங்கி 3 வாரம் கூட ஆகாத நிலையில், இந்த பக்கத்தின் பின் தொடர்பாளர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட இருக்கிறது. தொடர்ந்து பல காதலர்கள் தங்கள் அன்பின் பாதையை இந்த பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த காதல் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைத்திருப்பவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச்சேர்ந்த புரூக்லின் ஷெர்மான் எனும் இளம் பெண்.

புருக்லினுக்கு, ஜோடிகளிடம் அவர்கள் சந்தித்து காதல் கொண்ட அனுபவத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்திருக்கிறது. முதலில் நட்பு வட்டத்தில் மட்டும் கதைகளை கேட்டு வந்தவர், பின்னர் அதை விரிவாக்கி கொள்ள ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதைப்பார்த்து பலரும் காதல் அனுபவங்களை புகைப்படங்களுடன் பகிர்ந்து கொள்ளவே அவற்றை கொண்டு இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை அமைத்திருக்கிறார்.

அதன் ஈரமான காதல் கதைகளால் அந்த பக்கம் சூப்பரான வரவேற்பை பெற்றிருக்கிறது.

காதல் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://instagram.com/thewaywemet/

- சைபர்சிம்மன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close