Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எதிர்கால செயலிகள் நம்மைத்தேடி வரும்..!' - செல்போன் பிதாமகரின் பேட்டி

ஸ்மார்ட்போன்கள் என்னவெல்லாம் செய்கின்றன என்று வியப்பாக இருக்கிறதா? விரல் நுனியில் இணையம், ஒவ்வொரு தேவைக்கும் நூற்றுக்கணக்கில் செயலிகள் என அவரவர் உள்ளங்கைகளில் உலகை கொண்டு வந்திருக்கின்றனதான். ஆனால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை, ஸ்மார்ட்போன்கள் இனி மேல்தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கின்றன என்று சொன்னால் எப்படி இருக்கும்?

மார்டின் கூப்பர் அப்படிதான் நினைக்கிறார். ஸ்மார்ட்போன்களின் முழுமையான ஆற்றலை நாம் உணர இன்னும் இரண்டு தலைமுறை ஆகும் என்றும் சொல்லி அசர வைக்கிறார் கூப்பர். என்ன நம்ப முடியாமல் இருக்கிறதா? கூப்பர் சொல்வதை பார்ப்பதற்கு முன்னர் அவர் யார் என்று தெரிந்து கொண்டு விடலாம்.

கூப்பர் வேறு யாருமில்லை, முதல் செல்போனை கண்டுபிடித்த செல்போன் பிதாமகர்தான் அவர். 1973-ம் ஆண்டில் மோட்டோரோலா நிறுவனத்தில் இருந்த போது கூப்பர் தான் முதன் முதலில் செல்போன் மூலம் பேசி, நவீன தகவல் தொடர்பை துவக்கி வைத்தார். அதன் பிறகு செல்போன்கள் எங்கோ வந்துவிட்டன.

மார்டின் கூப்பருக்கு தற்போது 86 வயதாகிறது. தான் துவங்கி வைத்த செல்போன் புரட்சி ஸ்மார்ட்போன் வடிவில் எண்ணற்ற மாயங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் கூப்பர், தொழில்நுட்ப இணையதளமான மதர்போர்டிற்கு பேட்டி அளித்துள்ளார்.

வீடியோ மூலமான அந்த பேட்டியில் அவர் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளதுடன், இவற்றின் எதிர்காலம் பற்றிய கணிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்த பேட்டியில், செல்போன்களின் ஆதார அம்சம் பற்றி கூப்பர் சொல்லும் விஷயம் கவனிக்கத்தக்கது. எங்கிருந்தும் பேசக்கூடிய ஆற்றல்தான் உண்மையான சுதந்திரம் என்கிறார் அவர்.

இதை புரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கி போக வேண்டும். செல்போன்களுக்கு முன் டெலிபோன் இருந்தது நமக்குத்தெரியும். ஆனால் இடையே கார்போன் இருந்ததை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கார்போன்கள்தான் செல்போன்களின் முன்னோடி.

தொலைதூர தகவல் தொடர்பை டெலிபோன் சாத்தியமாக்கினாலும், அவை வீட்டுக்குள்ளே ஒரே இடத்தில் நிலையாக இருந்தன. ஆனால் எங்கிருந்தாலும் பேசக்கூடிய ஆற்றலுக்கான தேவை உணரப்பட்டபோது, கார்களில் போனை பொருத்தி பேசும் வசதி அறிமுகமானது. கார் போன்களை மோட்டரோலாதான் முதலில் அறிமுகம் செய்தது என்றாலும், இந்த பிரிவில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான கடும் போட்டி தொலைபேசி சந்தையில் நிலவியது. இந்த போட்டி தான் செல்போனுக்கு வித்திட்டது. ஏடிடி நிறுவனம் செல்போன் சேவையை உருவாக்க தயாராகி கொண்டிருந்த நிலையில், மோட்டரோலா முந்திக்கொண்டு செல்போன் சேவையை அறிமுகம் செய்து அசர வைத்தது.

1973 ல் ஏப்ரலில் செல்போன் சேவையை அறிமுகம் செய்தபோது, மார்டின் கூப்பர்தான் அந்த செங்கல் சைஸ் போனை கையில் வைத்துக்கொண்டு முதலில் பேசினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பத்திரிகையாளர்கள் மத்தியில் கூப்பர் கொஞ்சம் குசும்புடன், தனது போட்டியாளரான ஏடிடி நிறுவன அதிகாரியை அழைத்து, செல்போனில் இருந்து பேசுகிறேன் என சொல்லி அவரை வாயடைத்துப்போக வைத்திருக்கிறார். மறு முனையில் பேச்சே இல்லை என இந்த அனுபவத்தை அவர் சிரித்தபடி பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.

இது வரலாறு; இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், செல்போன்களை உருவாக்க முயன்றதற்காக கூப்பர் சொல்லும் காரணம்தான். "காரில் போனை கொண்டு வந்தது என்பது வீட்டுக்குள் போனை வைத்து, மக்களை அங்கேயே பயன்படுத்த கட்டுப்படுத்தியதில் இருந்து எந்தவிதத்திலும் மாறுபட்டுவிடவில்லை, எங்கிருந்தும் பேசக்கூடிய ஆற்றலே உண்மையான சுதந்திரமாகும்" என்று அவர் சொல்கிறார். இந்த தகவல் தொடர்பு சுதந்திரத்தில் இன்னமும் முழு நம்பிக்கை இருப்பதாக கூப்பர் சொல்கிறார். அதனால்தான் செல்போன்களின் முழு ஆற்றலை இன்னமும் நாம் உணரத்துவங்கவில்லை என்கிறார் அவர்.

போன் பேச கையில் போன் எதற்கு? உடலில் பர்சனல் சர்வரை மாட்டிக்கொண்டு பேசும் காலம் வரப்போகிறது என்கிறார் அவர். அதாவது உடலோடு போன்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் என்கிறார். இந்த வகை வளர்ச்சி இன்னும் இரு தலைமுறைகளில் சாத்தியமாகும் என்கிற இவர், ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சமான செயலிகள் குறித்தும் அதிருப்தி தெரிவிக்கிறார்.

ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் செயலிகள் எதற்காக என்று கேட்பவர், செயலிகள் நமது தேவையை புரிந்து கொண்டு நம்மை தேடி வரும் நிலை உருவாகும் என்கிறார். இதை செயற்கை அறிவு சாத்தியமாக்கும் என்றும் தெம்பாக சொல்கிறார். இந்த வகை செயலி தற்போதைய செயலிகளை தேவையில்லாமல் ஆக்கும் என்றும் அடித்துச்சொல்கிறார்.

மார்டின் கூப்பர் பேட்டிக்கு: http://motherboard.vice.com/read/meet-marty-cooper-the-forefather-of-your-cell-phone

- சைபர்சிம்மன்


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ