Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் - செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாற்று திறனாளிகள் பிரிவு, விளையாட்டு பிரிவு மற்றும் ராணுவ வீரர்கள் வாரிசுகள் ஆகிய பிரிவினருக்கு ஜுன் 29, 30-ல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. இதர பிரிவினருக்கு ஜுலை 1 முதல் 28-ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 1,54,238 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது சென்ற ஆண்டை விட 10 சதவிகிதம் குறைவு.

ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் முக்கியமான கட்டம் கவுன்சிலிங். ஒரு மாதத்துக்கு திருவிழா போல நடக்கும் இதில், எந்த கல்லூரியில் என்ன கோர்ஸை தேர்ந்தெடுத்து படிப்பது என்பதில் மாணவர்களுக்கு பெரும் குழப்பம் இருக்கும். அவற்றை சமாளித்து உங்களுக்கு பிடித்த கல்லூரியை தேர்ந்தெடுக்க 5 முக்கியமான விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

No Choice :

முதலில் என்ன கோர்ஸ் படிக்கப் போகிறீர்கள் என்று முடிவெடுங்கள்.  நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையே,  அடுத்த 50 வருடங்களுக்கு உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிறது. அது நீங்கள் விரும்பும் துறையாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் சொல்கிறார்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக உங்கள் விருப்பத்தை சமரசம் செய்து கொள்ளாதீர்கள். ஏனெனில் இந்தியாவுக்கு இன்ஜினியர்கள் தேவையில்லை, தங்கள் துறையில் அதீத ஆர்வம் கொண்டு, வளர்ச்சிக்காக உழைக்கும் இன்ஜினியர்களே தேவை. கவுன்சிலிங் என்பது வினாத் தாளானால், அதில் 'கோர்ஸ் செலக்‌ஷன்' என்பது NO CHOICE Question.

Right Choice :

'எப்படியாவது ஒரு நல்ல காலேஜ்ல சேந்துடணும்' என்பது எல்லா மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆசை. ஆனால், ஒரு கல்லூரி நல்ல கல்லூரியா என்று எப்படி கண்டுபிடிப்பது என்பதில் பலரும் ஏமாந்து விடுகின்றனர். முதலில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது விளம்பரங்கள். சில கல்லூரிகள் விளம்பரங்களில் காட்டும் தரத்தை கல்லூரியில் பின்பற்றுவது இல்லை. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும், மாணவர் தேர்ச்சி விகிதத்தை அடிப்படையாக வைத்து, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் அது உங்களுக்கு உதவும்.

மேலும் மாணவர்கள் மத்தியில் சிறந்த கல்லூரிகள் என்று எப்போதுமே ஒரு லிஸ்ட் இருக்கும். தற்போது என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமும் கருத்து கேட்கலாம். இவற்றுக்கெல்லாம் மேலே சிறந்த கல்லூரி என்பது, மாணவர்கள் வெளிக்காட்டும் திறனின் அடிப்படையிலும் தேர்வு செய்யலாம். கடந்த காலங்களில் குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் மதிப்பெண்களைத் தாண்டி கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பாக செயலாற்றியிருக்கிறார்கள் என்றால், அக்கல்லூரியில் மாணவர்களின் திறன் வளர்ச்சியில் கல்லூரி ஆர்வம் காட்ட முயல்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். எல்லோருக்கும் டாப் ரேங்கிங் கல்லூரியில் இடம் கிடைத்து விடாது. ஆகையால் இதுபோன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டும், தங்கள் மதிப்பெண்களுக்கேற்ற சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுக்கலாம். அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட கல்லூரி ரேங்க் பட்டியல் இங்கே http://bit.ly/1GwrEHu.

College Visit :

ஒரு எடுத்துக்காட்டுக்கு இப்போது உங்கள் கட் ஆஃப் 170 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் விரும்பும் துறையில் இந்த கட் ஆஃபுக்கு சென்ற ஆண்டு எந்த கல்லூரிகளில் இடம் கிடைத்தது என்று அண்ணா பல்கலைக்கழக வெப்சைட்டில் பாருங்கள். ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை, கட் ஆஃப் ஆகியவற்றினால் சீட் கிடைப்பதில் மாறுதல் ஏற்படலாம். எனவே 160 முதல் 180 வரையுள்ள 20 கல்லூரிகளை தேர்ந்தெடுங்கள். அதில் நீங்கள் படிக்க விரும்பும் மாவட்டத்தில் உள்ள 10 கல்லூரிகளை தேர்ந்தெடுங்கள். அந்த கல்லூரிகளுக்கு நேரில் விசிட் செய்யுங்கள்.

கல்லூரியின் தரத்துக்கு கட்டட அமைப்பு ஒரு அளவுகோலாக கருத முடியாத போதும், சில மாணவர்களுக்கு கட்டட அமைப்பு அதிருப்தியை ஏற்படுத்தி விடும். கல்லூரியை தேர்ந்தெடுத்து விட்டு கல்லூரியை பார்த்து அதிர்ச்சியடைவதைக் காட்டிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. விசிட்டின் போது கல்லூரியின் அட்மோஸ்பியர், வசதிகள், அமைவிடம், பயண தூரம், ஹாஸ்டல் வசதி போன்றவற்றை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். ஆகையால் கல்லூரி விசிட் செய்து, அதன் அடிப்படையில் உங்களுக்கு பிடித்த கல்லூரியை முன்னுரிமை கொடுத்து பட்டியலிட்டு வைத்துக் கொள்ளுங்கள். கல்லூரிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைக் காண இங்கே http://bit.ly/1Ni8RDX

Keep Watching :

உங்களுக்கான கவுன்சிலிங் தேதி வந்த பிறகு, தொடர்ந்து கவுன்சிலிங் நடவடிக்கையை கவனித்துக் கொண்டு இருங்கள். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட டைம் ஸ்லாட்டுக்கு முந்தைய நாள், 60 சதவிகிதம் உங்களுக்கான கல்லூரி எது என்பது தெரிந்து விடும். அதன்படி 10 கல்லூரிகளில் இருந்து சீட் கிடைக்க வாய்ப்புள்ள 5 கல்லூரிகளை உங்கள் லிஸ்டில் இருந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த 5-ல் இருந்துதான் அடுத்த நாள் நீங்கள் கல்லூரியை தேர்வு செய்யப் போகிறீர்கள்.

The Final Destination :

காலை முதல் ஸ்லாட்டில் உங்களுக்கு கவுன்சிலிங் என்றால், முந்தைய நாள் கடைசி ஸ்லாட்டின் முடிவில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கிறது என்று பார்த்து 5-ல் இருந்து, நிச்சயம் கிடைக்கும் என்று தெரியவரும் இரண்டு கல்லூரியை முடிவு செய்து விடுங்கள். மற்ற ஸ்லாட்களில் வரும் மாணவர்கள், பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் சீட் வேகன்ஸி லிஸ்ட்டை பார்த்து, இரண்டு கல்லூரிகளை தெரிந்து வைத்துக் கொள்ளலாம். இந்த அறிவிப்பு கவுன்சிலிங்கிற்கான கத்திருப்பு அறை வரை ஒளிபரப்பப்படும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட டைம் ஸ்லாட்டை காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாக செல்வது அவசியம்.

கடைசியாக இடத்தேர்வுக்கு செல்வதற்கு முன்னதாக, நீங்கள் முன்னுரிமை அளித்த கல்லூரியில் சீட் கிடைக்குமா என்பது தெரிந்துவிடும். ஆம் என்றால், அந்த கல்லூரியில் உங்களுக்கு பிடித்த சீட்டை தேர்வு செய்துவிட வேண்டியதுதான். இல்லாவிட்டால் உங்கள் முன்னுரிமையில் உள்ள இரண்டாவது கல்லூரியை தேர்வு செய்யுங்கள். சில நேரங்களில் இரண்டும் கிடைக்கவில்லை என்றால், பதற்றத்துக்கு இடம் கொடுக்காமல் உங்கள் லிஸ்டில் அடுத்ததாக உள்ள கல்லூரியில் உங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.

கவுன்சிலிங்கின் எந்த கட்டத்திலும் பதற்றம் உங்களை ஆட்கொள்ள விடாதீர்கள். ஏனினெல் 'பதறிய காரியம் சிதறும்' என்ற பழமொழி நீங்கள் அறிந்ததுதான்.

-ரெ.சு.வெங்கடேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ