Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஸ்வேர்ட் வேண்டாம்... செல்ஃபி போதும்!

டெக்னாலஜியின் வளர்ச்சியை இரண்டு காலங்களாக இப்படி பிரிக்கலாம் - இருக்கின்ற டெக்னாலஜியை வைத்து ஃபன் பேக்டரை தேடிக் கொள்வது டிமு( டிஜிட்டலுக்கு முன்). அதுவே மக்கள் எதை ஃபன் ஃபேக்டராக கருதுகிறார்களோ அதை வைத்தே டெக்னாலஜியை உருவாக்குவது டிபி டிஜிட்டலுக்கு பின் ( அட டிபி- டிஸ்ப்ளே பிக்ச்சர் ). அப்படி ஒரு முயற்சியைதான் எடுத்திருக்கிறது மாஸ்டர் கார்ட் நிறுவனம்.

கிரெடிட், டெபிட் சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளருக்கு புதியதொரு அனுபவத்தையும், பண பரிவர்த்தனைகளில் பாதுகாப்பையும் அதிகரிக்க புது திட்டம் ஒன்றை கூறியுள்ளது.

பொதுவாக மாஸ்டர் கார்டின் மூலம் பொருட்கள் வாங்கும்போது, பரிவர்த்தனை நிறைவடைய வாடிக்கையாளரின் பிரத்யேக பாஸ்வேர்டை பதிய வேண்டும். ஆனால் புதிய முறைப்படி, பாஸ்வேர்டுக்கு பதிலாக செல்ஃபியே பாஸ்வேர்டாக இருக்கும். இதற்கு 'மாஸ்ட்டர் கார்ட் ஆப்' பை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பணம் கட்ட வேண்டிய நேரத்தில் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். ஒன்று விரல் ரேகை பதிவு மற்றொன்று செல்ஃபி பதிவு முறை. இதில் நீங்கள் செல்ஃபி பதிவு முறையை தேர்ந்தெடுத்தால் கேமரா தானாக இயங்கும். கண்களை சிமிட்ட , தானாக உங்கள் செல்ஃபி கேப்ச்சர் செய்யப்படும்.

அதன்பின் image recognition முறையில் உங்கள் படம் ஸ்கேன் செய்யப்படுகிறது. பின் 0 1 என்ற டிஜிட்டல் எண்களாக மாற்றி, நிறுவனத்தின் சர்வர்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கு உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பிரத்யேக கோட்(code) களுடன், செல்ஃபி கோட் பொருந்துகிறதா என்று பார்க்கப்படும்.. பொருந்தினால் உங்கள் பரிவர்தனை சக்சஸ்.

தற்போதைக்கு இந்த முறை சோதனை அளவில் உள்ளது. மேலும் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 500 வாடிக்கையாளர்களைக் கொண்டு சோதனை செய்யவுள்ளனர்.

" அன்றாடும் வாழ்வில் மக்கள் பல பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதை மாற்ற யோசித்ததன் விளைவுதான் செல்ஃபி முறை. புதிய தலைமுறையினர் இதனை நிச்சயம் விரும்புவார்கள் என்று நம்புகின்றேன் " என்கிறார் அந்நிறுவனத்தின் செயல் அதிகாரி அஜய் பால்லா.

கண்களை சிமிட்டினால்தான் படம் எடுக்கப்படும் என்பதால், ஏற்கனவே எடுத்த படங்களை வைத்து ஏமாற்ற முடியாது என்கிறது அந்நிறுவனம். மேலும் படங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, கோட்கள் 0 1 முறைப்படி சர்வர்களுக்கு அனுப்பபடுகின்றன. ஆகையால் இதில் பாதுகாப்பான பண பரிமாற்றம் செய்யலாம் என்கிறது அந்நிறுவனம்.
 


இருந்த போதிலும் இந்த தொழில் நுட்பத்தில் சில குறைபாடுகளை முன்வைக்கின்றனர் சைபர் செக்யூரிட்டி வல்லுனர்கள்.

1. இதில் இணைய வழி ரகசிய கோட் பரிமாற்றம் நடைபெறுவதாலும், சர்வர்களில் அனைத்து கோட்களும் சேமித்து வைக்கப்படுவதாலும் ஹேக்கர்கள் தாக்குதலுக்கு குறியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

2. படத்தின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பது வகுக்கப்படவில்லை. குறைந்த ரெசல்யூஷன் கேமராக்களில் படம் எடுத்தால் சரியாக ஸ்கேனாகுமா என்பது தெரியவில்லை. இரண்டு கோட்களும் மேட்ச் ஆனால்தான் பண பரிமாற்றம் முடியும். படங்கள் சரியாக ஸ்கேன் ஆகாமல் கோட் பொருந்தவில்லை என்றால், அதற்கு மாற்று என்ன என்பதும் தெளிவாக விளக்கப்படவில்லை.

3. நாக்கு தள்ளத் தள்ள ஷாப்பிங் செய்துவிட்டு வருபவர்கள் டங் அவுட் செல்ஃபி எடுக்க நேரிடும். பட்ஜெட்டுக்கு அதிகமாக செலவானால் ஆங்ரி செல்ஃபி எடுக்க நேரிடும். இப்படி அஷ்ட கோணலாக மாறும் முகத்தை இந்த தொழில்நுட்பம் புரிந்து கொள்ளுமா என்பதும் புரியாத புதிர்.

நொடிக்கு நொடி மாறிவரும் டிஜிட்டல் உலகில் நம் பணத்தை பாதுகாக்க பல தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. எத்தனை பூட்டுகள் போட்டாலும் கள்ள சாவி போட்டு திறக்க ஹாக்கர்கள் அப்கிரேட் ஆகிக் கொண்டே இருக்கின்றனர். இது போன்ற நிலையில் பல நிறுவனங்கள் இணைய பாதுகாப்புக்காக பயன்பாட்டாளர்களின் கைரேகை, கண் அசைவு போன்ற பையோ மெட்ரிக் சிஸ்டங்களை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.

கடந்த மாதம் இங்கிலாந்தை சேர்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்று, ஈமோஜிக்களை ரகசிய எண்ணாக பயன்படுத்தும் முறையை கொண்டு வந்தது. இதயத் துடிப்பு, டிஎன்ஏ, மூளையின் அலைகள் போன்றவற்றை பாஸ்வேர்டாக பயன்படுத்த, படிப்படியாக ஆராய்ச்சிகள் சூடு பிடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,  மாஸ்டர்கார்டு போன்ற நிறுவனங்களின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவையே...

ஆனால் இந்த பூட்டுக்கும் சாவி கண்டுபிடிப்பார்களே...!

- ரெ.சு.வெங்கடேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close