Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப் அட்ராசிட்டிகள் - கவனம் தேவை!

 

நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தால் நிச்சயம் உங்கள் ஆஃபீஸ் டீமுக்கு ஒரு வாட்ஸ்-அப் க்ரூப் இருக்கும். மொத்த அலுவலகத்துக்கும் சேர்த்து ஒரு க்ரூப், ஒவ்வொரு டீமுக்கும் ஒரு க்ரூப், பக்கத்து டீம் நண்பர்களுடன் உரையாட அதற்கு ஒரு க்ரூப். இந்த அத்தனை க்ரூப்பும் ‘சென்சார்’ இல்லாமல் இயங்குவதற்கு தனித்தனி க்ரூப்ஸ் என ஒரு அலுவலகத்தில் குறைந்தது 10 க்ரூப்பாகவது இருக்கும். ஒருவகையில் இது உண்மையிலேயே பெரும் வசதியாக இருக்கிறது. ஆனால்….

 

 

பல பேருக்கு வேலையே போகும் அளவுக்கு சிக்கலான இடமாகவும் இருக்கிறது இந்த ஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப். முதலில் பாசிட்டிவ்வான விஷயங்களைப் பார்ப்போம்!

 

  - ஆஃபீஸைவிட்டு வெளியில் வந்துவிட்டால், மிக அவசரமான ஒரு தகவலை மேலிடத்துக்கோ, குழுவுடனோ பகிர்ந்துகொள்ள சரியான இடம் வாட்ஸ்-அப் க்ரூப்தான்.

 

  - இப்போதெல்லாம் பல ஆஃபீஸ்களில் லீவ் லெட்டரே வாட்ஸ்-அப் க்ரூப்பில்தான் போடுகிறார்கள்.

  - இணையத்தில் நம் தொழில் குறித்த ஒரு முக்கியமான கட்டுரையைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை ஆஃபீஸ் மெயிலில் அனுப்பினால் , சம்பிரதாயத்துக்கு பல ‘உள்ளேன் ஐயா!’க்களைப் போட்டு அனுப்புவோம். ஆனால், பதிலும் இருக்காது. மெயிலைப் பார்த்தார்களா என்று கண்டுபிடிக்கவும் முடியாது. வாட்ஸ்-அப்பில் அந்த லிங்கை மட்டும் ஷேர் செய்தால் போதும். யாரெல்லாம் அந்த லிங்கைப் பார்த்தார்கள் என்றும் தெரிந்துவிடும். அதனால், ரிப்ளை செய்யவேண்டும் என்று குறைந்த அளவு ‘கமிட்மென்ட்’-டும் வரும்.

  - இணைய வேகம் குறைவாக இருக்கும் இடங்களிலும் வாட்ஸ்-அப் வரப்பிரசாதம். மெயிலில் ஒன்றை அனுப்ப வேண்டும் என்றால், மெயில் லோடு ஆகி, லாக் - இன் செய்து, கம்போஸ் செய்து, cc யாருக்கு போடவேண்டும், bcc யாருக்குபோட வேண்டும் என்று ‘ஆஃபீஸ் பாலிட்டிக்ஸ்’ செய்து அட்டாச்மென்ட்டுகள் அப்லோடு ஆகிமுடித்ததும், ஃபோன் ‘hang’ ஆகிவிடும். பின்னர், ரீஸ்டார்ட் செய்து இந்த அத்தனை வேலைகளையும் மீண்டும் செய்து மெயிலில் அனுப்புவதற்குள் 15 நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். ஆனால், வாட்ஸ்-அப்பிலோ 3 டச்கள்தான்.

  - மேலதிகாரிகளும் லீவ் எடுத்தவர் உண்மையிலேயே சொந்த ஊரில் இருக்கிறாரா இல்லை, சோனா தியேட்டரில் மீனாவுடன் இருக்கிறாரா என்று தெரிந்துகொள்ளலாம். (எப்படி என்பது சீக்ரெட்!)

 

ஆனால், ஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப்பில் நடப்பதெல்லாம் அல்ட்ரா அட்ராசிட்டிகள்!

 

  - குட்மார்னிங் ஃபார்வர்டு மெசேஜ்கள்  - ஆஃபீஸ்ல நேரில் பார்க்கும்போது கண்டுக்காமல் செல்லும் டீம் மேட்டுகள் எல்லாம், வாட்ஸ்-அப்பில் குட்மார்னிங் சொல்வதற்கு மட்டும் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள். 

 

- ‘இந்த வாட்ஸ் அப் மெசேஜை ஷேர் பண்ணாட்டி, 10 பேர் ரத்தம் கக்கி சாவான்’ என்று  அர்த்தராத்திரியில் அட்டுழியம் செய்வார்கள்.

  - ‘வாலு’ பட மீம்ஸை ஆஃபீஸ் க்ரூப்பில் ஷேர் செய்வது!

  - ஆஃபீஸே அப்ரைசல் அப்செட்டில் இருக்கும்போது, அப்ரைசல் மீம்ஸ் ஷேர் செய்து அனைவருக்கும் சேர்த்து ‘ஆப்’-ரைசல் வைப்பது!

  - ‘நல்ல பெயர் எடுக்கிறேன்’ என்று சம்பந்தமில்லாத ஐடியாக்களை அள்ளித்தெளித்துக்கொண்டே இருப்பது!

  - உயரதிகாரி கிளம்பி சரியாக ஒரு மணிநேரத்தில், ‘இன்னும் ஆஃபீஸில்தான் இருக்கிறேன். சேலஞ்சிங் ஜாப். பட் ஐ லவ் திஸ் சேலஞ்ச்’ என்று பப்ளிகுட்டி தேடுவது!

 

 

- க்ரூப்பில் இருப்பவர்கள் எல்லாம் இளசுகளாக இருக்க, பெரியவராக இருக்கும் உயரதிகாரியே சமயங்களில் யூத்தாக மாறி கூத்தடிப்பது!

 

இப்படி எத்தனையோ அட்ராசிட்டிகளை ஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப்களில் தாளித்துக் கொண்டிருப்பார்கள். இடையில், யாராவது ஒருவர் ஃபார்வர்டு செய்யும் வேகத்தில் ஏதாவது ‘பலான’ சமாசாரத்தை தெரியாமல் ஆஃபீஸ் க்ரூப்பில் போட்டுவிட்டு  ‘மன்னிப்பாயா!’ ஸ்மைலி போட்டு கூனிக்குறுகி நிற்பார்! (நம் நண்பர் ஒருவரின் ஆஃபீஸ் க்ரூப்பில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அதன்பிறகு, அந்த நபர் க்ரூப்பில் மட்டுமல்ல, ஆஃபீஸிலேயே இல்லையாம்!’)

 

இதெல்லாம் தேவையா பாஸ்?!

 

உங்களுக்குத் தெரியுமா? இந்தியர்கள் ஒரு நாளில் தங்களுடைய உபயோகமான நேரத்தில் 47 சதவிகித நேரத்தை வாட்ஸ்-அப் போன்ற சாட்டிங் அப்ளிகேஷன்களில்தான் செலவிடுகிறார்கள் என எரிக்சன் நிறுவனம் சொல்கிறது.

குறுஞ்செய்திகள்தான் வருங்காலத்தில் அதிகாரப்புர்வமான அலுவலக தகவல் பரிமாற்றமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

 

 

மேலும், தொலைநோக்குப் பார்வையுடைய நிறுவனங்கள் ஏற்கெனவே வாட்ஸ்-அப்-பை அதிகாரப்பூர்வமான தகவல் பரிமாற்றம், கஸ்டமர் சப்போர்ட், மார்கெட்டிங் போன்றவற்றுக்காக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன.

 

 

அதனால், வாட்ஸ்-அப் பயன்பாடு இனி பல்வேறு பரிமாணங்களிலும், கோணங்களிலும் இருக்கும். ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று அலுவலக ரீதியாக வாட்ஸ்-அப் அப்ளிகேஷனில் இயங்கினால் சிக்கல் நமக்குதான்.

 

 

மேலும், அலுவலக ரீதியான ரகசியங்களை வாட்ஸ்-அப்பில் பகிர்ந்துகொள்ளாதீர்கள். நான்கு சுவர்களுக்குள் நடக்கும் விஷயங்களே வாட்ஸ்-அப்பில் தீயாகப் பரவும்போது, உங்களுடைய வேலைக்கே ஆப்பு வைக்கும் விஷயங்கள் வாட்ஸ்-அப் மூலமாக சொல்லியே ஆகவேண்டுமா என்று யோசியுங்கள். பல நிறுவனங்கள் அலுவலக வளாகத்துக்குள் வாட்ஸ்-அப் தடை செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றன!

 

 

அட்மினாக இருந்தால், யாரை க்ரூப்பில் சேர்க்கிறோம்? யாரை , எதற்கு விலக்குகிறோம்? என்பதில் கவனமாக இருங்கள். ஏனெனில் ஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ருப்பில் இருந்து ஒருவரை விலக்கினாலே, அவரை நம் மனதில் இருந்து விலக்கிவிட்டதாகவே அவர் கருதிக்கொள்வார்.

 

 

உயரதிகாரியே ஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப்பில் ஜாலியாக இருந்தாலும், அதை அட்வான்ட்டேஜாக எடுத்துக்கொண்டு அவருக்கு சரிசமமாக இறங்கி விளையாடாதீர்கள். ஏனெனில் அவர் எந்நேரமும் க்ரூப்பிலேயே உயரதிகாரியாக சாட்டையை சுழற்றலாம். இல்லையெனில், தனிப்பட்ட முறையில் ‘கவனிப்பு‘ இருக்கலாம்.

 

 எனவே, அலுவலக ரீதியாக வாட்ஸ்-அப் க்ரூப்களில் கொஞ்சம் மெனக்கெடலுடன் கவனமாக, மெயிலுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்துடன் இயங்குவது நல்லது!

 

என்றோ ஒரு நாள் ஒரு நபரை ஆஃபீஸ் வாட்ஸ்- அப் க்ரூப்பில் இருந்து விலக்கினால், க்ரூப்பில் இருந்து மட்டுமல்ல… என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!  

ர. ராஜா ராமமூர்த்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close