Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுமையான ஆண்ட்ராய்டு செயலிகளுக்கான இணையதளம்!

ண்ட்ராய்டு செயலிகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. புதிதாக அறிமுகம் ஆகும் செயலிகளும் ஆயிரக்கணக்கில் இருக்கும். இந்த செயலிகளை அடையாளம் காட்டும் இணையதளங்களுக்கும் குறைவில்லை.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு செயலிகளை அறிமுகம் செய்வதற்காக என்று புதிய இணையதளத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 'ஆண்ட்ராய்டு எக்ஸ்பெரிமென்ட்ஸ்' எனும் அந்த தளத்தில் என்ன ஹைலைட் என்றால் புதுமையான மற்றும் விநோதமான ஆண்ட்ராய்டு செயலிகளை மட்டும் இது அறிமுகம் செய்கிறது!

வழக்கமான செயலிகளையோ, வணிக நோக்கிலான செயலிகளையோ இதில் பார்க்க முடியாது. ஆங்ரிபேர்டுகளின் வாரிசு கேம்களும் கிடையாது. மாறாக படைப்பாற்றல் மிக்க முறையில் உருவாக்கப்பட்ட அசத்தலான செயலிகள் மட்டுமே இதில் பட்டியலிடப்படுகிறது. இந்த செயலிகளில் சில, கூகுள் குழுவால் உருவாக்கப்பட்டவை.

இப்போதைக்கு 20க்கும் அதிகமான செயலிகளே இடம் பெற்றுள்ளன. ஆனால், அவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் தனித்து நிற்பவை. உதாரணம் வேண்டுமா? இங்க்ஸ்பேஸ் எனும் செயலி, வரைபட கருவி மூலம் நீங்கள் வரைந்த சித்திரங்களை உங்கள் சாதனத்தில் வேகமாணியை பயன்படுத்தி முப்பரிமாண தன்மையில் மாற்றித்தருகிறது.

லாண்ட் மார்கர் எனும் செயலி,  உங்கள் அருகே உள்ள நினைவுச் சின்னங்களை உலா வர உதவுகிறது. இப்படி இன்னும் பல புதுமையான செயலிகள் இருக்கின்றன. இந்த செயலிகள் எல்லாமே சோதனை முறையில் உருவாக்கப்பட்டவை. அவற்றை பரவலாக இணையவாசிகள் பார்வைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், கூகுள் இந்த தளத்தை அமைத்துள்ளது.

செயலி பற்றிய அறிமுகம் மட்டும் அல்ல; அவை உருவாக்கப்பட்ட விதம் பற்றிய விவரங்கள் மற்றும் அவற்றின் பின்னே உள்ள நிரல்களும் கூட கொடுக்கப்பட்டுள்ளன. புரோகிராமில் வல்லவர் என்றால் நீங்களே கூட இவற்றை மேம்படுத்தலாம். எல்லாமே ஓபன் சோர்ஸ் கோட்பாட்டில் வெளியிடப்பட்டுள்ளன.

அதே போல், புதிய செயலிகளை உருவாக்கிய சாப்ட்வேர் பிரம்மாக்கள் இதில் தங்கள் செயலிகளை சமர்பிக்கலாம். கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை பார்த்து அலுத்துப்போயிருந்தால், இந்த தளத்திற்குள் எட்டிப்பாருங்கள்! ஸ்மார்ட்போன் செயலிகள் தவிர ஸ்மார்ட்வாட்ச்களுக்கான செயலிகளையும் இதில் காணலாம்.

இணையதள முகவரி: https://www.androidexperiments.com/

- சைபர்சிம்மன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ