Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூகுளைவிட துல்லியமான தேடல் பொறி! - சவால் விடும் 16 வயது மாணவன்

நாம் தினம் ஒரு முறையாவது பயன்படுத்திவிடும் கூகுளில், எதைத் தேடினாலும் நொடி நேரத்தில் ஐந்தாறு இலக்கங்களில் தேடல் முடிவுகளை கொட்டிவிடும்.

இருந்தாலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் போகவே மாட்டோம். ஏனெனில் அந்த அளவுக்கு துல்லியமாக நமக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் தர வல்லது கூகுள் தேடல் பொறி. ஆனால் இந்த பதின்ம வயது சிறுவன், கூகுளுக்கே சவால் விடுகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகனான அன்மோல் டக்ரெல் என்பவர், தான் கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார்.

இந்த தேடல் பொறி, கூகுள் நடத்திய ’Google Science fair’ எனும் ஆன்லைன் போட்டிக்காக அன்மோல் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அன்மோல் பயன்படுத்தியது ஒரு 1ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஒரு கணினி, பைத்தான்-மொழி மேம்பாட்டுத் தொழில்நுட்பம், விரிவுத்தாள் செய்நிரல் (spreadsheet program) போன்ற சொற்பமான கருவிகளே!

"இப்போதைய தேடல் பொறிகள் ஒருவருடைய இருப்பிடம், இணைய உலாவல் வரலாறு, மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள ஆப்ஸ் போன்றவற்றை கருத்தில் கொண்டே இயங்குகின்றன. ஆனால் இது சமன்பாட்டின் ஒரு பக்கம்தான். என் தேடல் பொறி இதன் இன்னொரு பக்கத்தையும் பயன்படுத்தி தேடல் முடிவுகளை வழங்குகிறது. ஒருவர் தேடும் வாக்கியத்தில் உள்ள உள்ளர்த்த்ததை ஆராய்ந்து, அவர் என்ன மாதிரியான முடிவுகளை விரும்புவார் என்று என் தேடல் பொறி கணித்து, பிறகே முடிவுகளை வெளியிடும்" என்கிறார் அன்மோல்.

இதை வடிவமைப்பதற்கு 60 நாட்களும், கோடிங் (coding) செய்வதற்கு 60 மணி நேரமும் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார் பதினோராம் வகுப்பில் அடியெடுத்து வைக்கப்போகும் இந்த இளம் ஜீனியஸ்.

பெங்களூரிலுள்ள ஐஸ்க்ரீம் லேப்ஸ் எனும் நிறுவனத்தில் இரண்டு வார பயிற்சி வகுப்பிற்காக வந்திருந்தார் அன்மோல்.

அதன் இணை நிறுவனரும் ’மிந்த்ரா’ நிறுவனத்தின் முன்னாள் மார்க்கெட்டிங் மேலாளருமான சஞ்சய் ராமகிருஷ்ணன், “ஏற்கனவே பெரும் வெற்றிகண்ட கூகுள் தயாரிப்போடு போட்டி போட்டு அதை விட ஒரு நிலை மேம்படுத்தி செயல்படுத்துவதென்பது அசாத்தியமானது” என்று வியக்கிறார்.

தன் மூன்றாம் வகுப்பிலேயே ப்ரோக்ராமிங் படிக்கத் தொடங்கிவிட்ட அன்மோல், ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பது தன் கனவென்கிறார். ஆனால் இவரைச் சுற்றியுள்ளவர்களோ, சில உலக ஜாம்பவான்களைப் போல தன் யோசனைகளை செயல்படுத்த இவரும் கல்லூரி செல்வதை புறக்கணித்துவிடுவாரா? என கேள்வி எழுப்ப, “கல்லூரிப் படிப்பை புறக்கணிப்பது உண்மையில் முட்டாள்தனம். நம் யோசனைகள்தான் சிறந்தது, இதற்கு மேல் எதுவும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்ற கர்வம் கொள்ளக் கூடாது” என அட்டகாசமாக பதிலளிக்கிறார்.

இது மட்டுமல்ல, இப்போதே பெற்றோர் அனுமதியோடு டகோகேட் கம்யூட்டர்ஸ் (Tacocat Computers) என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சுந்தர் பிச்சை vs அன்மோல் டக்ரெல்! சபாஷ், சரியான போட்டி!

-அ.நிவேதா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close