Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீட்பு பணிக்கு வருகிறது பாம்பு ரோபோக்கள்!

ஒரு கட்டட இடிபாடோ, இயற்கைப் பேரழிவோ ஏற்பட்டால் உடனடியாக நாம் மீட்புக்குழுக்களை நாடுகிறோம். தீவிர அர்ப்பணிப்போடும், முழுத் திறமையோடும் அவர்கள் செயல்பட்டு, சிக்குண்டவர்களை துரிதமாக மீட்கின்றனர், இருந்த போதிலும் சில சமயங்களில், தவிக்க முடியாத சூழல்களால் சில உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

மேலும் மனிதர்களால் நுழைந்தறிய முடியாத நிலையில் மக்கள் சிக்கிக் கொள்ளும்போது, மீட்புக் குழுக்களின் இரும்புக் கரங்கள் கூட கட்டப்பட்டு விடுகின்றன. ஒரு ’சூப்பர்மேனையோ’, ‘எந்திரனையோ’ எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அந்தத் தருணங்கள், இனிவரும் நாட்களில் உயிர்பெறப் போகின்றன என்பது வியப்பையும், மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தும் செய்தியாகும். அதிலும் நம் இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பில் அந்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

ஹைதராபாத் ஐ.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வளர்கள்தான் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் நாயகர்கள். ‘சர்ப்’ எனப்படும் இத்திட்டம், பாம்பு வடிவ ரோபோக்களைத் தயாரித்து, மீட்புப்பணி, கண்காணிப்பு போன்ற பணிகளுக்குப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் தொடக்கத்திலேயே, இரண்டு மூலவுருக்களைத் தயாரித்து மின்னல் வேகம் காட்டி வருகின்றனர் நம் விஞ்ஞானிகள்.

இது குறித்துப் பேசுகையில் “ஒரு தீப்பிடித்த கட்டடத்திலோ, விபத்து ஏற்பட்டக் களத்திலோ, மனிதர்களால் இறங்கிச் சென்று தகவல் அறியவோ , மீட்புப் பணியில் ஈடுபடவோ முடியாத சூழல் இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளில் இந்தப் பாம்பு வடிவ இயந்திரங்கள் புகுந்து சென்று தகவலும், உதவியும் அளிக்கும்” என்கிறார், முனைவர் ப்ரஷாந்த் குமார்.

தீயில் உருகாத ஏ.பி.எஸ் வகை நெகிழியால் உருவாக்கப்படும் இந்த எந்திரங்கள், பாம்பின் அசைவு மற்றும் உடலியல் அமைப்பப் போலவே இயங்குவதற்கு, நிரல் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி தன்னைப் போன்ற மற்ற எந்திரங்களுடனும் தொடர்பு கொள்ளும் ஆற்றல் இவற்றிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே சம்பவ இடத்தில் பல்வேறு பாம்பு எந்திரங்களை ஆட்படுத்தி, அவற்றினூடே ஒரு தகவல் தொடர்பு இணைப்பை உருவாக்க முடியும். அப்படி ஒரு இணைப்பு உருவாகும் பட்சத்தில் ஒரே வடிகாலில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் சேர்த்தமைக்கும் வழிகோலிட முடியுமென்கின்றனர் குழுவினர்.

மேலும், தொடுபுலனால் இயங்கும் கணினித் தொழில்நுட்பமான ‘ஹேப்டிக்’ திறனை, இந்த எந்திரங்களுக்குப் புகுத்தும் முயற்சி நடைபெற்றுவருகிறது. உதாரணமாக, நம் தானியங்கிப் பணம் வழங்கும் எந்திரங்கள் (ஏ.டி.எம்) போன்றவை இந்த ஹேப்டிக் தொழில்முறையிலேயே இயங்கி வருகின்றன.

இத்தகைய ஆற்றலை, அளிப்பதன் மூலம், இந்த எந்திரங்கள், தன் செயற்கை அறிவை அதிகரித்து, விரைவில் செயல்படுமென்றும், தோல் பரப்பைத் தொடுதலின் மூலமாகவே சிக்குண்டிருப்பவர்களை அறிந்து கொள்ளும் என்றும் மார்த்தட்டுகிறார், குமார்.

மத்திய அரசின், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மின்னணு மற்றும் தகவியல் தொழில்நுட்பத் துறையின் ஆய்விற்காக இச்சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிரதென்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய ஆய்வுகள் சரியான முடிவுகளைத் தரும் பட்சத்தில், விரைவில் இந்த எந்திரங்கள் சந்தையை எட்டுமென்றும், ஒரு பாம்பு எந்திரம் சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ளதாக இருக்குமென்றும் குமார் தெரிவித்தார்.

‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. இதை மாற்றி, மீட்புப் படையாகவே பாம்புகளின் வடிவத்தை வார்த்தெடுக்கும் நம் இந்திய விஞ்ஞானிகளின் அறிவை மெச்ச வேண்டும்.

- ச. அருண்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close