Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்வையாளர்களை கவர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகள்!

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 14 ஆம் ஆண்டு அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இக்கண்காட்சியைக் கண்டு பயனடைந்தனர்.

பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த 5 கண்டுபிடிப்புகள் இங்கே...

காற்றில் இயங்கும் இயந்திரம்!

"புதுப்பிக்க இயலாத எரிபொருள்களான பெட்ரோல்,டீசல் போன்றவை இன்னும் கொஞ்ச நாளில் அழிந்துவிடும். அதன் பின் புதுப்பிக்கக்கூடிய மாற்று எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களை கண்டுபிடித்தே ஆக வேண்டும். அதற்கான சிறிய முயற்சிதான் இந்த காற்றில் இயங்கும் இயந்திரம்.

நிமாட்டிக் சிலிண்டர்களின் மூலம் இயங்கும்படியாக இந்த வாகனத்தை உருவாக்கி இருக்கிறோம்.இப்போது நாங்கள் செய்திருக்கும் இந்த மாதிரி வாகனமானது, ஒரு முறை காற்றை நிரப்பினால் 5 கி.மீ வரை ஓடக்கூடியது. குறைந்த எடையுள்ள மெட்டீரியல்களை பயன்படுத்தி வடிவமைக்கும்போது 25 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். வாங்களேன் ஒரு ரவுண்ட் போலாம்...!" என்று அழைத்தனர் ராம்குமார் குழுவினர்.


தேங்காய் உடைக்கும் இயந்திரம்!

"பெரிய ஹோட்டல்கள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகமான தேங்காய்களை உடைக்க வேண்டி இருக்கும். இதற்கென தனியாக ஆட்களை நியமித்து இருப்பார்கள். அவர்களால் ஒரு நாளைக்கு 400 முதல் 800 தேங்காய்களையே உடைக்க முடியும். அதுவும் ஒரே மாதிரியாக உடைக்க முடியாது. ஆனால் எங்களுடைய இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்கு 21 தேங்காய்களை உடைக்க முடியும். இதனால் நான்கு நாட்கள் ஒருவர் செய்யும் வேலையை ஒரே நாளில் செய்துவிட முடியும். ஒரு நாளைக்கு மின்சார செலவும் 60 ரூபாய்க்கு அதிகமாகாது. அதுமட்டுமில்லாமல் தேங்காய்களை சரியான அளவில் உடைக்கும்போது அவற்றை லேம்ப் செட்டப், கட்டடங்களின் கூரைகள், அழகு சாதன பொருள்கள் போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும். வெளிநாடுகளில் அதிக அளவில் இது போன்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.  எங்க கரஸ்பாண்டென்ட் இந்த மெஷின பார்த்துட்டு 4 ஹாஸ்டலுக்கும் ஒவ்வொரு மெஷின் ஆர்டர் கொடுத்துட்டார்னா பாத்துக்கங்களேன்...!" என்றனர் நவீன் குமார் மற்றும் ஜெய்விக்னேஷ் குழுவினர்.

அக்ரோபேக் மெசின்

பார்வையாளர்களை அதிகம் கவர்ந்த இன்னொரு கண்டுபிடிப்புதான் இந்த அக்ரோ பேக்கிங் மெஷின். இது நிலக்கடலை, மஞ்சள் போன்ற விவசாய பொருட்களை, மூட்டைகளாக பேக் செய்வதற்காகவே பிரத்யேகமாக செய்யப்பட்ட இயந்திரம். இது குறித்து இதை வடிவமைத்த மாணவர் அகதீஸ் கூறும் போது,  ‘’எங்க மாமா விவசாயம்தான் பார்க்கிறார். அவர் இதுபோன்ற ஒரு இயந்திரம் இருந்தால் நல்லா இருக்கும் என்று அடிக்கடி சொல்லுவார். நான் அதையே என் ப்ராஜெக்ட்டாக செய்து அவருக்கு காட்ட விரும்பினேன். இந்த ஐடியாவை என் நண்பர்கள் லட்சுமண் மற்றும் அசோக்கிடம் சென்னேன். அவர்களுக்கும் இது பிடித்திருந்தது. பொருட்களை வெற்றிடம் உருவாக்குவதின் மூலமாக மேல உள்ள தொட்டியில் சேமித்துக் கொள்ளலாம். பின் எவ்வளவு கிலோவில் மூட்டை வேண்டும் என்று செட் செய்துவிட்டு சாக்கை மாட்டினால் அத்தனை கிலோ எடை வரை தானாகவே நிரம்பிவிடும்" என்று நிலக்கடலைகளை மூட்டை கட்டிக் காண்பித்தனர்.

கனரக வாகனங்களுக்கான எமர்ஜென்சி பிரேக்கிங்"கனரக வாகனங்களான லாரிகள், டிரக்குகள் போன்றவை மலைகளில் ஏறும்போதோ இறங்கும்போதோ, அதிகமான சுமையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, விபத்துகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கனரக வாகனங்களில் ஹேண்ட் பிரேக் இருக்காது. கிளட்சை கன்ட்ரோல் செய்து வாகனங்களை நிறுத்த வேண்டும் என்பதுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம். இது போன்ற விபத்துகளை எங்களது எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டத்தை பயன்படுத்தி முற்றிலுமாக தவிர்க்க முடியும்.

வண்டி பார்வர்ட் கியரில் இருக்கும்போது சக்கரங்கள் முன்னோக்கி நகரவேண்டும் என்றும், ரிவர்ஸ் கியரில் இருக்கும்போது சக்கரங்கள் பின்னோக்கி நகரவேண்டும் என்றும் புரோகிராம் செய்திருக்கிறோம். ரோட்டரி என்கோடரைக் கொண்டு வீல் டைரக்சனை அறிந்துகொள்ள முடியும். எப்போது எங்கள் புரோகிராம்படி இயங்கவில்லையோ அப்போது எமர்ஜென்சி பிரேக் அப்ளை ஆகி விடும். மீண்டும் டிரைவர் கண்டுபிடித்து பிரேக் பெடலில் கால்வைக்கும் போது,  அவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும்படியாக வடிவமைத்துள்ளோம். இதன் மூலம் டிரைவரின் கட்டுப்பாட்டைத் தாண்டி நிகழும் 35% விபத்துகளை தவிர்க்க முடியும்" என்றனர் சக்திவேல் மற்றும் வருண் குழுவினர்.

பல்வகை நிலம் சீரமைப்பான் மற்றும் கிழங்கு விளைவிப்பான் இயந்திரம்


"இந்த இயந்திரம்தான் இந்த எக்ஸ்போலயே காஸ்ட்லியஸ்ட். பயிரிடுவதற்கு முன் நிலத்தை சீரமைக்கவும், கிழங்கு வகைகளை அறுவடை செய்யவும் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம். டிராக்டருடன் இணைக்கும் விதமாக இதை வடிவமைத்துள்ளோம். நிலத்தில் உள்ள கற்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை எடுத்து, கன்வேயர் மூலமாக பின் உள்ள கம்பார்ட்மென்டிற்கு போய்விடும். இது போலவே அறுவடையின் போது கிழங்குச் செடிகளை வேரோடு புடுங்கி, பின் உள்ள கம்பார்ட்மென்டில் சேமித்துவிடும். இப்போது இருக்கிற சூழ்நிலையில் விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதனை ஈடு செய்ய, மேலை நாடுகளைப்போல் நாமும் மெஷின்களை வைத்து விவசாயம் செய்ய வேண்டும். அதற்கான முதல்படிதான் இந்த இயந்திரம். எங்க காட்டுலயே ஓட்டி டெஸ்ட் பண்ணிட்டோம். ப்ராஜெக்ட் சக்சஸ் !" என்று சிரித்தனர் சங்கர் மற்றும் சார்மி குழுவினர்.

  - பா.குமரேசன்
படங்கள்: கோ.கி.சரண்பிரசாத் (மாணவப்பத்திரிக்கையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ