Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேஸ்புக் சி.ஓ.ஓ. பாராட்டிய இந்திய இளைஞனின் ஆப்!

ஃபேஸ்புக் என்றாலே நமக்கெல்லாம் மார்க் சுக்கெர் பெர்க் தான் பரிட்சியம். அதே சமயம் ஃபேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்கை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில்  அவர் தனது பக்கத்தில் ஹர்ஷ் சோங்க்ரா எனப்படும் 19 வயது இந்திய மாணவனின் ஆப் ( App) பை பாராட்டியுள்ளார். அப்படி என்ன தான் ஆப்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். மேலும், இது நேரத்தை வீணடிக்கும் கேண்டி க்ரஷ், டெம்பில் ரன் போன்ற ஆப்ஸா என்ற  எண்ணமும் எழலாம்.

ஆனால், இது நேரத்தை விரயமாக்கும் ஆப் அல்ல. இது இளம் பெற்றோர்கள் அனைவரும் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று. அது தான் 'மை சைல்ட்' ஆப்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தற்போது குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். கற்றல் திறன் குறைவாக இருக்கும் இந்த பிள்ளைகளை, சிறு வயதிலேயே கண்டுபிடித்து அதற்கான  சிகிச்சையை அளிப்பது அத்தியாவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் இதனை கவனிக்காமல் விட்டு விடுவார்கள்.

அப்படி மூளை வளர்ச்சி குறைபாடான டிஸ்பராக்சியா நோயால் பாதிக்கப்பட்டவர்தான் இந்த ஆப்பை உருவாக்கிய ஹர்ஷ் சோங்க்ரா. தான் வளர்ந்த ஊரில் சரியான சிகிச்சையோ, விழிப்புணர்வோ இல்லாததால் தனது 9வது வயது வரை இப்படி ஒரு குறைபாடு இருப்பதையே கண்டுபிடிக்கவில்லை. தனக்கு ஏற்பட்டது மற்ற குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணமே ஹர்ஷை இப்படி ஒரு ஆப்பை உருவாக்க தூண்டியது.

இந்த ஆப்பை உருவாக்கியதற்காகத்தான் ஃபேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க், ஹர்ஷ் சோங்க்ராவுக்கு பாராட்டு தெரிவித்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பயன்படுத்தும் முறை

இந்த ஆப்பை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்துவிட்டு உங்கள் குழந்தையை பற்றி, சில அடிப்படை தகவல்களை மட்டும் செலுத்தினால், உங்கள் குழந்தையிடம் ஏதேனும் குறைபாடு இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கணித்து சொல்லும்.

உதாரணமாக, உங்கள் குழந்தை ஒரெழுத்து வார்த்தைகளை 6 முதல் 9 மாதத்திற்குள் பேசியதா? போன்ற பல்வேறு  கேள்விகள் இதில் அமைந்துள்ளன. இதற்கு ஆம், இல்லை என நாம் பதிலளிக்க வேண்டும். இறுதியாக குழந்தையின் எடை, உயரத்தையும் குறிப்பிட வேண்டும்.

இதையடுத்து, உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை அந்த ஆப் தெரிவிக்கும். அவ்வாறு குறைபாடுகள் இருந்தால் அதற்கு உகந்த சிகிச்சை அல்லது தெரப்பி முறையையும், மருத்துவ நிபுணர்களையும் அந்த ஆப் பரிந்துரைக்கும்.


ஐ.மா.கிருத்திகா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ