Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேடல் முடிவுகளை மாற்றியளிக்கிறதா கூகுள்?

ன்று மனிதர்களின் தேடுதல் திறனானது இந்தப் பெயரிலேயே அறியப்படுகிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது. அதுதான் ‘கூகுள்’. எதைக்கேட்டாலும், ’கூகுளிடம் கேள்’ என்று கைமாற்றிவிடும் அளவிற்கு நம் அன்றாட வாழ்வியலில் கலந்திருக்கிறது இந்தத் தேடுதளம்.

நாள் ஒன்றிற்கு, சுமார் 117 கோடி பேர் பயன்படுத்தும் இந்த தேடுதளத்தில், நொடிக்கு, 40,000 தேடல்களுக்கு மேல் இடம்பெறுகிறது. அதாவது ஆண்டொன்றுக்கு, 1,20,000 கோடி தேடல் முடிவுகளுக்கு மேல் இந்த தளத்தின் மூலம் மக்களைச் சென்றடைகிறது.


இது இப்படியிருக்க, தேடல் முடிவுகளை வெளியிடுவதில் நடுநிலைமையை ‘கூகுள்’ மேற்கொள்கிறதா என்பது கூகுள் பயனாளர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவலாகும். இத்தகவலை வெளியிடுவதற்காகவே மூன்று ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது, இந்திய சந்தைப் போட்டி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வணிக சந்தையில் ஓங்கிய நிலையில் இருக்கும் ஒரு பெருநிறுவனம், தன் சக்தியின் மூலமாக மற்ற சிறு நிறுவனங்களை முடக்கி, சந்தையில் ஏகபோக உரிமையை பெறக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டதுதான்  இந்திய சந்தைப் போட்டிச் சட்டம்.

வாடிக்கையாளர்களுக்குத் தன் சேவையைக் கொடுக்கும் ஒரு நிறுவனம், நுகர்வோரிடமிருந்து பெற்றுள்ள அந்த நன்னம்பிக்கையை, தன் நிறுவனத்தின் சுய லாபத்திற்காகப் பயன்படுத்தி, சேவை விவரங்களை மாற்றியமைக் கூடாது என்கிறது, இந்தியச் சந்தைப்போட்டி சட்டத்தின் பகுதி 4.

இந்நிலையில், தன் தேடல் முடிவுகளில், தனது பொருட்கள் மற்றும் சேவைகளையே ஒரு தேடுதளம் முன்னிறுத்துவது, சந்தைப்போட்டிக்கு முற்றிலும் எதிரானது. இத்தகைய நடவடிக்கையில் கூகுள் ஈடுபடுகிறது பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரிலேயே, இந்த விசாரணை தொடங்கியது. சட்டத்திற்குப் புறம்பான சுய-விளம்பரம் அல்லது சுய சந்தைப்படுத்துதல் அமெரிக்கா உள்ளிட்டப் பல நாடுகளில் குற்றமாகும்.

இது குறித்து, இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அழைப்பாணையின்படி, செப்டம்பர் பத்தாம் தேதிக்குள் கூகுள் நிறுவனம் தன்னை ஆவணப்படுத்த வேண்டும். ஏற்கனவே, சந்தையில் இதரப் போட்டியாளர்களின் தரவரிசையைப் பின்னிலைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐரோப்பாவில் கூகுளின் மீதான விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 6 பில்லியன் டாலர்கள் வரை, கூகுள் இழப்பீடு செலுத்த வேண்டிய நிலை வரலாம்.

இத்தனை விசாரணைகள் நடக்கும் போதும் தன் துணிச்சலும், மன உறுதியும் தளராமல் பேட்டி அளிக்கிறது கூகுள். இந்தியாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி எந்தக் குற்றத்தையும் நிரூபிக்க முடியாது என்பதில் கூகுள் அசையா நிலைப்பாடு கொண்டுள்ளது.

இணையக் கண்காணிப்பு குறித்த சிக்கல்கள் உலகமெங்கும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கூகுளின் தகவிற்கு, இது ஒரு முக்கியப் பிரச்னையாக மாறலாம் என்கின்றனர், கருத்தியலாளர்கள்.

- ச.அருண்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ