Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்வையற்றோருக்கான உலகின் முதல் ஸ்மார்ட் கடிகாரம்!

லகில் பார்வையற்றோரின் எண்ணிக்கை 285 மில்லியன். ஐம்புலன்களில் ஒன்றான பார்க்கும் திறனை இழந்த இவர்கள் சுவை, தொடுதல்,நுகர்தல் மற்றும் ஒளியின் மூலமே புற உலகோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இவற்றில் தொடு திறனின் அடிப்படையில் 1842ல், லூயிஸ் பிரெயில் என்பவர் கண்டுபிடித்ததே 'பிரெயில்' எனப்படும் குறியீட்டு முறை. இதில், ஒரு காகிதத்தில் குறியீடுகளாக எழுதப்பட்டிருக்கும் செய்திகளை பார்வையற்றோர் தங்களின் விரல்களின் மூலம் அறிவார்கள்.

மனித குலம் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், நொடிக்கு நொடி செய்தி மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.இவற்றில் பார்வையற்றோர் மட்டும் பின்தங்கி இருப்பதை விரும்பாத ஒரு தென் கொரிய  நிறுவனம், அவர்களுக்காக பிரெயில் ஸ்மார்ட் கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. டாட் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது தான் உலகில் பார்வையற்றோருக்காக முதல் ஸ்மார்ட் கடிகாரம். இது ஹாப்டிக் தொழில் நுட்பத்தின்(haptic technology) அடிப்படையில் அமைந்துள்ளது.



இதில் நேரம் அறிதல்,வழி காட்டுதல்,அறிவிப்புகளை பதிவு செய்தல், குறுஞ் செய்தி அனுப்புதல் ஆகிய வசதிகளுடன் ப்ளூடுத் வசதியும் அமைத்துள்ளனர்.

டாட் கடிகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு செல்களின் மேல் இருக்கும் 24 மழுங்கிய ஊசிகளின் மூலமே அனைத்து செயல்பாடுகளும் நடக்கிறது.வார்த்தைகளுக்கு ஏற்ப, இந்த ஊசிகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் மூலம் செய்தி தெரிவிக்கப்படுகிறது.பயன்படுத்துவோர் தமக்கு ஏற்ற வேகத்தில் இதன் கட்டுப்பாட்டை, கடிகாரத்தில் அமைந்திருக்கும் முகப்புகள் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

இந்த கடிகாரத்தை புளூடூத் மூலம், தம் கைபேசியுடன் இணைத்துக்கொண்டால் அவற்றில் வரும் குறுஞ்செய்திகளை கூட இவற்றில் படிக்கலாம்.இக் கடிகாரத்தை புத்தகங்கள் படிக்கவும் பயன்படுத்தலாம். ஆனால் இவை சின்னதாக இருப்பதால்,  படிப்பதற்கான நேர விரயத்தை தவிர்ப்பதற்காக ,புத்தகங்கள் படிக்கும்  'பிரெயில் திண்டு' ஒன்றை உருவாக்க முனைந்துள்ளனர். இது மட்டுமின்றி இதே தொழில் நுட்பத்தை ஏ.டி.எம், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களுக்கும் ஏற்ப வடிவமைக்கும் திட்டத்தில் உள்ளார்கள். 

”பார்வையற்றோரும் இந்த சமூகத்தில் எந்தவித ஏற்றத்தாழ்வுமின்றி முழுச்சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்பதே இந்த கண்டுபிடிப்பின் தலையாய நோக்கம்” என்கிறார் டேனியல் கோக் (Head of Media Relations at Fingerson).

இவை டிசம்பர் மாதத்தில் முதல் கட்டமாக அமெரிக்காவில் வெளியிடப்படும் எனவும், அதன் பின் மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கப்படும் எனவும் மேலும் கூறுகிறார் டேனியல் கோக்.
 
ஒளி இழந்தோர் வாழ்வில் ஒளி ஏற்ற உருவாக்கப்பட்டிருக்கும் இது, சபாஷ் போட வைக்கும் கண்டுபிடிப்பு!

கு.அனுஷ்யா

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ