Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சைபர்-புல்லியிங்' கட்டுப்படுத்தும் ‘ஆப்’: சாதனை படைத்த 15 வயதுச் சிறுமி!

ணையத்தின் மூலம் மனதைப் புண்படுத்தும் செய்திகளையோ, இணைப்புகளையோ தொடர்ந்து அனுப்பி, ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கித் துன்புறுத்தும் குற்றமே ’சைபர் புல்லியிங்’ (Cyber Bullying).

தற்போதைய காலக்கட்டத்தில், சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தில் இல்லாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. இப்படிச் சகலரும் புழங்கும் பொதுவெளியான இணையத்தில் எத்தகைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று.

குறிப்பாக, மன முதிர்ச்சி முழுமை பெறாத வயதிலிருக்கும் போதே, சிறு பிள்ளைகளை இணையத்திற்கு, அறிமுகப்படுத்துவது பெற்றோரால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்ட இந்த காலக் கட்டத்தில், சிறார்களைக் குறிவைத்துத் தாக்கும் ‘சைபர்-புல்லியிங்’களைப் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.

நான்கில் ஒரு குழந்தை இந்த இணையவழி வன்கொடுமைக்கு ஆளகிறது என்கின்றன புள்ளிவிவரங்கள். 43 விழுக்காட்டிற்கு மேல் இணையவாசிகளைக் கொடுமை செய்யும் இந்த முயற்சி, பெரும்பாலும் திட்டமிடப்படாத விளையாட்டாகவேத் தொடங்குகிறது. உணர்ச்சிப் பெருக்கில் ஏவப்படும் இணைய ஏவுகணைகளால் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டு, மீள முடியாத துயரத்திற்குப் ஆளாகி விடுகின்றனர்.

இத்தகைய கொடுமைகளைத் தவிர்க்கும் வண்ணம் ஒரு சாதனை முயற்சி செய்திருக்கிறார், இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க வாழ் சிறுமி த்ரிஷா ப்ரபு. பதினைந்து வயதே நிரம்பிய த்ரிஷா, ஒரு பள்ளி மாணவி.

சுருக்கமாகச் சொன்னால், ’யாகாவாராயினும் நாகாக்க’ என்பதே இவர் சாதனையின் தாரக மந்திரம்.

’ரீதின்க்’ என்னும் இவரது ’செயலி’, ஒரு ஆண்ட்ராய்டு கருவியில் நிறுவப்பட்ட உடனேயே, அக்கருவியின் எல்லா பரிவர்த்தனைகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. ஒரு தகவல் அந்தக் கருவியிலிருந்து பிறருக்கு அனுப்பப்படும் முன்னால், அதில் ஏதேனும் புண்படுத்தும் சொற்களோ, நிழற்படங்களோ இருப்பின், அதைத் தடை செய்வதோடு, பயனரிடம் அதன் தாக்கம் குறித்த செய்தியை எடுத்துரைக்கிறது.

இந்த ‘ஆப்’, உணர்ச்சி வேகத்தில் அல்லது அறியாமல் தொடப்படுகின்ற ‘ஸ்பேம்’ என்பது போன்ற அத்தனை வகையான ‘சைபர்-புல்லியிங்’களையும் வெகுவாகக் கட்டுப்படுத்துகிறது.

இந்த ஆப் தயாரிக்க தூண்டியது, தனக்குள் ஏற்பட்ட சோகமே என்கிறார் த்ரிஷா. “ஒருநாள் வழக்கம்போல் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 14 வயது. ’ரிபெக்கா’ என்னும் ஒரு 11 வயதுச் சிறுமி ’சைபர்-புல்லியிங்’ இன் மூலமாக நேர்ந்த மன உளைச்சல் தாளாமல் தற்கொலை செய்துகொண்டாள் என்று அந்த பத்திரிகையில் போடப்பட்டிருந்தது. அதை படித்தவுடன் பதறிப் போனேன்.

என்னைவிட வயது குறைந்த ஒரு சிறுமி, தன் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளுமளவு கொடுமை வாய்ந்ததா இந்த ‘சைபர்-புல்லியிங்’ என்று ஒரு நொடி கலங்கிப் போனேன். அதுமுதல், இதைத் தடுக்க ஏதாவது வழிமுறை செய்ய வேண்டும் என்று தீவிரமாகச் சிந்தித்தேன். அதன் விளைவுதான் இந்த ’ரீத்ன்க்’ என்னும் செயலி'' என்றார்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட கருவிகளில் இந்த செயலியை நிறுவிப்பார்த்தப் பயனர்களில் 93 விழுக்காடு பயனர்கள் இந்தச் செயலியின் திறத்தால், நெறிமீறும் தகவல் (Abusive messages) அனுப்புவதிலிருந்து காக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து கூகிள் அறிவியல் கண்காட்சி, வாஷிங்டன் அறிவியல் கண்காட்சி எனப் பல்வேறு நிகழ்வுகளில் கவுரவிக்கப்பட்ட த்ரிஷா, மேலும் பல விருதுகளையும் வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கிறார். அமெரிக்காவின் அறிவியல் தொலைக்காட்சி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர், 'பில் நை, த ஸைன்ஸ் கை’ எனப்படும் பேராசிரியர் வில்லியம் நை. அவருடன் சென்ற மாதம் வெள்ளை மாளிகையின் விருந்திற்கு, அழைக்கப்பெறும் பெருமை அடைந்திருக்கிறார், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இந்த 15 வயதுச் சிறுமி.

தற்போது ஆண்ட்ராய்டு இயங்குபொறியில் மட்டும் தரவிற்குக் கிடைக்கும் இந்த செயலி, விரைவில் ஆப்பிள் இயங்குபொறியான, ஐ.ஓ.எஸ்.ஸிலும் தரவேற்றப்படப் போகிறது என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

இந்நிலையில், தொடர்ந்து அறிவியல்சார் சமூகப் பயனிகளை உருவாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவிக்கும் த்ரிஷா, லண்டன், இல்லினோய், சிகாகோ என பல்வேறு இடங்களில் ’டெட் டாக்ஸ்’ எனப்படும் உரை நிகழ்த்தி வருகிறார். இவரை தொடர்பு கொள்வதற்காக, www.trishaprabhu.com என்னும் வலைதளம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

அறிவியலும், சமூகமும் இரு கண்களெனக் கருதிப் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற, மீசைக்கவிஞனின் கனவு முற்றிலும் பொய்த்துப் போகவில்லை என்பதற்கு த்ரிஷா போன்றோர் ஓர் எடுத்துக்காட்டு.


 -ச.அருண்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close