Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வந்துவிட்டது I-OS 9...ஆப்பிளின் அடுத்த அடி...!

ன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவும் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்பதுதான். அதை வாங்கிய பெரும்பாலோரின் கனவு ஐ-போன் வாங்க வேண்டும் என்பதுதான்.

எலக்ட்ரானிக் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவணத்தின் இந்த ஐ-போன்தான், இளைய தலைமுறையின் கனவு போன். மற்ற கம்பெனி போன்கள் எல்லாம் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய இயக்கு தளங்களில்(ஆப்பரேட்ட்ங் சிஸ்டம்) இயங்க, தனக்கென்று ஓர் இயங்கு தளம் அமைத்துக் கொண்டது ஆப்பிள். ஐ-ஓ.எஸ்(i-os) எனப்படும் இந்த இயங்கு தளம் ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆப்பிளின் அசாத்திய வளர்சிக்கு இதுவே பெரும் பங்காற்றியது. 2007, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ-ஓ.எஸ் போன்களில் மட்டுமின்றி ஐ-பேட்,  ஐ-பாட்களிலும் பயன்படுகிறது.

உலகிலுள்ள அனைத்து செல்போன் பயனீட்டாளர்களையும் கவர்ந்த i-os இதுவரை எட்டு வெர்ஷன்கள் தாண்டி, நாளை முதல் தனது ஒன்பதாவது வெர்ஷனில் காலடி எடுத்து வைக்கப் போகிறது. கடந்த 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த மென்பொருள், நாளை முதல் மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுகிறது. அப்படி இதில் என்ன சிறப்புகள்தான் உள்ளது?  ஐ-போன் மீதான மக்களின் காதலை இது மேலும் அதிகரிக்குமா? பார்ப்போமே....

எளிதான பதிவிறக்கம்

பொதுவாக ஒரு ஓ.எஸ்-ல் இருந்து அடுத்த ஓஎஸ்-க்கு மாறும்போது, அது போனில் 'மெமரி ஸ்பேஸ்' எனப்படும் பயன்பாட்டு இடத்தை அதிகப்படியாக ஆக்கிரமித்துக் கொள்ளும். உதாரணமாக ஆப்பிளின் தற்போதைய வெர்ஷனான 'i-os 8' போனில் 4.58 GB இடத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் தற்போதைய வெளியீடான 'i-os 9' மிகவும்

குறைவாக வெறும் 1.3 GB இடமே எடுத்துக் கொள்கிறது. இதனால் மற்ற அப்ளிகேஷன்கள் பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். ஆப்ஸ்கள் அனைத்தும் வேகமாய் செயல்படும். ஹேங்கிங் பிரச்னைகள் இருக்காது.
 
நீண்ட பேட்டரி பயன்பாடு

i-os 9 ல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 'லோ-பேட்டரி மோட்' மூலம் பேட்டரியின் பயன்பாட்டு நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். சாதாரண மோடிலயே, i-os 8 யை விடவும் இது 40 நிமிடம் பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது. லோ-பேட்டரி மோடில் வைத்து பயன்படுத்தினால் சுமார் 11 மணி நேரம் 38 நிமிடங்கள் வரை போனின் பேட்டரி வேலை செய்யும். இது i-os 8 யை விடவும் சுமார் மூன்றரை மணி நேரம் அதிகமாகும். i-os 8 பயன்படுத்தும் போனின் பேட்டரி 8 மணி நேரங்களே தாங்கும். இது i-os 9 ன் மிகப்பெரிய ஆதாயம். எந்த பழைய ஆப்பிள் போனாக இருந்தாலும் இந்த ஆபரேடிங் சிஸ்டம் அதனுடைய பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட சிரி

நாம் சொல்லும் கட்டளைக்கு இணங்கி செயல்பாடுகள் செய்யும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட மென்பொருள்தான் இந்த சிரி. 2010 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மென்பொருள் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. நம்மோடு பேசி நம் தேவைகளை அறிந்து செயல்படும் இம்மென்பொருள், பல மொழிகளையும் புரிந்து செயல்படக் கூடியது. இதுநாள் வரை ஒரு ரோபோ போல பேசிவந்ததற்கு இம்முறை மனிதக் குரல் கொடுத்துள்ளனர். இதனால் இது கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

உயிர்ப்பான திறன்(PROACTIVENESS)

    I-0S 9 ன் மிகச்சிறந்த சிறப்புகளுள் இதுவும் ஒன்று. நாம் தினசரி செய்யும் வேலைகளையும், அந்த நேரத்தையும் குறித்துக்கொள்ளும் இந்த மென்பொருள் நாம் அதை மறக்கும்போது நமக்கு நிணைவூட்டும். உதாரணமாக தினமும் மாலை நாம் 6 மணிக்கு பாடல்கள் கேட்கிறோம். ஒருநாள் நாம் மறந்து விடுகிறோம் என்றால், சரியாக 6 மணிக்கு 'இது பாடல் கேட்கும் நேரம்' என நமக்கு ஞாபகப்படுத்தும்.

பிற சிறப்புகள்

நாம் வீடியோ எடுக்கும் போது ஜூம் செய்யும் வசதியும், வீடியோவின் தரத்தை அப்போதே மாற்றிக்கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மிகப்பெரிய ஃபைல்களை சேமித்துக்கொள்ளும் கூகுள் டிரைவ் போல ஐ-க்ளௌட் டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நமக்கு தேவையான செய்திகளை மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் நியூஸ் அப்ளிகேஷனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ-பாடை வைத்து நமது ஐ போனிற்கு வரும் தொலைபேசி அழைப்பை எடுக்கும் வகையில் மல்டிடாஸ்கிங் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தற்போது ஐ-பாடிற்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு பயன்பாடுகள் இந்த புதிய மென்பொருளில் பொதிந்துள்ளன. இத்தனை நாட்களாக இருந்த ஆப்பிள் மேப் இம்முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கூகுள் மேப் அளவிற்கு இது இன்னும் சிறப்பாய் செயல்படுவதில்லை. இது சற்று பின்னடைவாக இருந்தாலும், மற்ற மாற்றங்கள் அதை சரிகட்டிவிடும். நாளை வெளியாகும் இந்த I-OS 9 எப்படியும் ஒரே நாளில் கோடிக்கணக்கில் பதிவிறக்கம் செய்யப்படும். இதற்காக அமெரிக்கர்களும், இங்கிலாந்துகாரர்களும் மட்டுமல்ல, இந்தியர்கள் உட்பட உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த மென்பொருள், அமெரிக்க நேரப்படி நாளை இரவு 9.30 முதல் 10.30 மணிக்குள் தலைநகர் டில்லியில் வெளியாகிறது.

இதனால் பயன்படப்போவது ஐ போன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல. ஆன்ட்ராய்டு, விண்டோஸ் பயனாளர்களும்தான். காரணம், இன்று செல்போன் உலகின் பல மாற்றங்களும் ஆப்பிள் நிறுவனத்தால் ஏற்பட்டதே. ஆப்பிளைப் பார்த்துதான் பலரும் தங்கள் மென்பொருள்களை உருவாக்குகிறார்கள், மேம்படுத்துகிறார்கள். எனவே I-OS 9 ல் உள்ள அனைத்தும் மற்ற போன்களிலும் வந்துவிடும். என்ன, சற்று தாமதம் ஆகும். காத்திருப்போமே... நல்லதற்காக காத்திருப்பதில் தவறில்லையே!

மு.பிரதீப் கிருஷ்ணா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ