Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எந்திரன்' பாலாஜி: விதை விதைக்கும் ரோபோ

இன்றைய காலத்து இளைஞர்களை  கைப்பேசியில் அழைக்கும்போது பாடல்கள் 'CALLER TUNE' ஆக கேட்கும் . ஆனால், 25 வயதே ஆகியுள்ள பாலாஜியை அழைத்தால், 'சிட்டி, தி ரோபாட், ஸ்பீடுஒன் டெர்ராஹெர்ட்ஸ், மெமரி ஒன் ஜெகாபைட்' என எந்திரன் பட வசனம் கேட்கிறது.

விழுப்புரத்தில் உள்ள மைலம் கல்லூரியில் ஓய்வுப்பெற்ற டிஎன்பிஎஸ்சி-யின் முன்னாள் தலைவர் டி.ஜி.பி. நடராஜ், கல்லூரியின் முதல்வர் செந்தில், டீன் ராஜப்பன் மற்றும் மாணவர்கள் முன்னணியில் விதை விதைக்கும் ரோபோவை விவசாயத்திற்கு அறிமுகப்படுத்திய பாலாஜியை பேட்டி காணுகையில்...

உங்களை பற்றி?

''நான் பிறந்தது, படித்தது எல்லாமே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் என்ற கிராமத்தில். அப்பா திருநாவுக்கரசு, அம்மா முருகவேணி. என் அப்பாவிற்கு அறிவியல் ஈடுபாடு அதிகம். கிராமத்தில் உள்ளவர்களுக்கு, விவசாயத்திற்கு தேவைப்படும் ஏர் மற்றும் களப்பைகளை மரத்தில் செய்து தருவார். அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கும் அறிவியலில் ஈடுபாடு அதிகம் வந்துவிட்டது. சிறு வயதிலிருந்தே எந்த பொருளை பார்த்தாலும் அதே மாதிரியே செய்து விடுவேன். பள்ளியில் படிக்கும் போதே, மாவட்ட அளவில் அறிவியலில் பரிசுகளை வாங்கியுள்ளேன். மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பிறிவில் 2007 ஆம் ஆண்டு சேர்ந்தேன். பின் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் 2012 முதல் 2014 ஆம் அண்டு வரை ரோபோடிக்ஸ் பிரிவில், எம்.டெக் படித்தேன்.''


முதல் ப்ராஜெக்ட் என்ன?

''கல்லூரியில் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கையில், ஆள்லில்லா பறக்கும் விமானம் செய்யலாம் என தொடங்கினேன். ஆனால், விமானத்தை பறக்க வைக்க முடியவில்லை. மீண்டும் முயற்சித்தேன். விடாமுயற்சி பலனலித்தது.

பின் 2011 ஆம் ஆண்டு, எனது நான்காம் வருடத்தில், அதே பிராஜக்டை சூரிய கதிரின் சக்தியில், ஆளில்லா விமானமாக (UNMANNED AIRCRAFT AERIAL VEHICLE) செய்து, அரசு விருதும் வாங்கினேன். இந்த இரண்டு பெரிய விருதுகளும் கல்லூரியில் படிக்கையில் வாங்கினேன்.''

விவசாயத்திற்கு ரோபோவை கொண்டு சேர்த்ததைப் பற்றி..

''விவசாயமும், ரோபோவும் பிடித்த துறைகள் என்பதால், விவசாயத்தில் (AUTOMATION) தானியங்கி முறையில் செய்ய வேண்டுமென சிறு வயது முதல் ஆசை இருந்தது. ஏர் களப்பை முறையை, இப்போதுள்ள தொழில் நுட்பத்துடன் தொடர்புகொள்ள (INTERFACE) செய்ய நினைத்ததன் விளைவு தான் இந்த விவசாயத்திற்கான ரோபோ. ஒரு டிராக்டர் வாங்க வேண்டும் என்றால், சுமார் 5 லட்சம் ரூபாய் செலவாகும். அதை மனிதர்களை கொண்டு இயக்க வேண்டும். டீசல் தேவைப்படும். ஆனால், நான் செய்துள்ள இந்த ரோபோவிற்கு எதுவும் தேவையில்லை. மருந்தடிப்பது, விதை விதைப்பது, களையெடுப்பது, நிலத்தின் தண்ணீர் அளவை கணித்து, தண்ணீரை தெளிப்பது போன்ற ஐந்து வேலைகளை இந்த ரோபோ செய்யும். ஜப்பான் நாட்டில் கூட விவசாயத்திற்கு ரோபோக்களை இப்போது தான் அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால், நாம் அதற்குள் ஒரளவிற்கு இந்த விஷயத்தில் முன்னேறி விட்டோம்.''

ரோபோவின் சிறப்பு அம்சங்கள்

விதை விதைக்கும் ரோபோ இது. ரோபோ  டிராக்டர்  வடிவம், unmanned technolgy, இந்த ரோபோவை தன்னிச்சையாகவும், மனிதனின் கன்ட்ரோல் மூலமும் இயக்கலாம். இத ஓபன் source app மூலமாக கன்ட்ரோல் செய்ய முடியும். இந்த ரோபோ hybird மாடல், அதனால பகல்ல சோலார் மூலமாகவும் நைட்ல பேட்டரி வழியாகவும் இதை இயக்கலாம். இந்த ரோபோ வேர்க்கடலை, கம்பு, மக்காசோளம் போன்றவற்றை விதைக்க மட்டுமல்லாமல், மண்ணின் ஈரப்பதத்தை உணர்ந்து நீர் இறைக்கவும் பயன்படும்.

இந்த ரோபோவிற்காக எங்கெங்கு அங்கீகாரம் கிடைத்தது?

''ஜப்பான் டோக்கியோ பல்கலைகழகத்தின் பெரிய அமைப்பான 'ARTIFICIAL LIFE & ROBOTICS' இல், எனது ரோபோ டிசைனை காண்பிக்க விண்ணபித்து இருந்தேன். ஒரு நான்கு மாதம் கழித்து அருமையான பாராட்டு கருத்துக்களுடன் பதில் வந்தது. ஜப்பானிற்கு வந்து எனது டிசைனைப் பற்றி விளக்கம் தரவும் அழைப்பு வந்தது. நண்பர்களின் உதவியால் ஜப்பான் சென்றேன். ரோபோடிக்ஸ் துறையில் ஜப்பான் பெரிய இடத்தில் உள்ளது. அப்படி இருக்கையில், என்னிடம் ஜப்பானியர்கள் ஆட்டோகிராஃப் வாங்கியது, பயோடேட்டா வாங்கியது போன்ற விஷயங்களை மறக்கவே முடியாது. அவர்களது அங்கீகாரம் மிகுந்த ஊக்கமளித்தது. பிறகு அமெரிக்காவின் ஆராய்ச்சி டாக்டர்கள் கமிட்டி, மலேசியாவில் ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது. ஜப்பானுக்கு அனுப்பியது போன்ற மற்றொரு ஆராய்ச்சி அறிக்கையை (MULTI PURPOSE AGRICULTURE RIDE என்ற தலைப்பில்) ஒரே மாதத்தில் தயார் செய்து அனுப்பினேன். அதுவும் தேர்வு செய்யப்படவே, என்னை மலேசியாவிற்கு அழைத்தனர். அதிலும் சிறந்த ஆராய்ச்சி அறிக்கை என்ற விருதை வாங்கினேன்.

பின்னர், சென்ற ஜூன் மாதம் உலகளவிலான ஒரு போட்டி 'TECHNOLOGY UNIVERSITY OF MALAYSIA'வில் நடந்தது. மலேசியா இரண்டாவது முறை சென்று, அங்கு சமர்பித்ததில், மிகுந்த வரவேற்பு கிடைத்தது. உடனே எனது டிசைனை அவர்கள் வெளியீடும் செய்தார்கள். அந்த போட்டியில் இரண்டாம் பரிசும், 25,000 பணமும் கிடைத்தது. பெரிய பதக்கமும், பதிப்புரிமையும் (COPYRIGHT) கொடுத்தார்கள். அங்கேயே சில நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் கொடுத்தனர். ஆனால், இந்தியாவில் தான் வேலை செய்ய வேண்டுமென மறுத்து விட்டேன்.

அடுத்த இலக்கு, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் 'INTERNATIONAL YOUNG SCIENTIST AWARD' என்ற நிகழ்ச்சி ஒரு வாரமாக நடக்க இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி. பல பேராசிரியர்களின் வழிகாட்டலும், ஆலோசனைகளும் இதற்கு தேவை. ஒரு குழுவாக சேர்ந்து உழைக்க வேண்டும். அந்த விருதும் வாங்கிவிட்டால் உலகமே நம்மை திரும்பி பார்க்கும்.

உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?

மற்றைய நாடுகளை விட நாம் விவசாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். விவசாயத்திற்காக தேவையான பொருட்களை மலிவான விலையில் தயாரிக்க படித்தவர்கள் முயல வேண்டும். சீனா ஏற்கனவே மலிவாக செய்வதால், அதை விட மலிவாக செய்ய நமக்கு சிறந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதிகம் தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும்.

எனக்கு ரோபோடிக்ஸ் துறை பிடிக்கும் என்பதால் அதை கையில் எடுத்துள்ளேன். அது ஒரு மிகப்பெரிய துறை. ஆனால், இத்துறையில் என்னால் ஒரு 2 சதவீதமாவது மாற்றம் வரவேண்டும் என நினைக்கிறேன். ரோபோடிக்ஸை விவசாயத்தில் முடிந்தளவிற்கு கொடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறேன். ஒரே சமயத்தில் 100 ரோபோக்களை ஆன்லைனில் இயக்க வைக்க வேண்டும் என்பது எனது அடுத்த இலக்கு, 'university of californiya'வில் அடுத்த ரோபோவுக்கான ஆராய்ச்சி நடத்த முடிவு செய்திருக்கிறேன்.

பல லட்சம் பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கும் காரணம் இது தான். நாம் புதிதாக எதுவும் கண்டுபிடிப்பது இல்லை. வெளிநாட்டினரின் காப்புரிமை உள்ள பொருள்களை லைசன்ஸுடன் விலைக் கொடுத்து வாங்குகிறோம். மொத்தமாக, கும்பலாக பயன்படுத்துகிறோம். வெளிநாட்டினரும் நம்மை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றனர்.

IIT போன்ற பெரிய கல்லூரிகளில் இருந்து சிறந்த தேர்ச்சி பெறும் பல மாணவர்கள் வெளிநாடு சென்று விடுகின்றனர். வெளிநாடுகளில் பணம் அதிகம் தருவதற்கு காரணம் என்ன? நம் மூளை தான் அவர்களுக்கு வேண்டுமே தவிர, நாம் அல்ல. பணம் தான் பெரியது என்று சில இளைஞர்களும் கிளம்பி விடுகின்றனர். பணம் சிறிது குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை, என் திறமையை வளர்த்துவிட்ட என் நாட்டிற்குதான் என் அறிவு பயன்பட வேண்டுமென நாம் சேவை செய்ய வேண்டும். அதை நம் சமுதாயம் புரிந்துக்கொள்ள வேண்டும்.விவசாயத்தில் இன்னும் பல மாற்றங்களை கொண்டு வர  வேண்டும். காசு கொடுத்து ப்ராஜெக்ட் ரெடி செய்து சமர்ப்பிக்கும் முறை வேண்டாம்'' என்ற பாலாஜிக்கு ஆல் த பெஸ்ட் கூறி விடைபெற்றோம்.

க.லட்சுமி, சௌமியா
படங்கள்: தே.சிலம்பரசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close