Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக்கின் விலையில்லா ஃபார்முலா சரியா?

சமீபத்தில் மோடி அமெரிக்கா சென்ற போதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஆதரவு கேட்டபோதும், ஃபேஸ்புக் டிபியை கேள்வி கேட்பாரின்றி மாற்றினார்கள் பலர். அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்தவுடன், ’ஓ.கே நான் செய்தது சரிதான்’ என்று ஆதரவு தெரிவித்தார்கள் பலர். இவை அனைத்துமே தனிமனித உரிமை தொடர்பான விஷயம். அதனை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் பின்னணி என்னவென்றே தெரியாமல் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகும் விஷயத்தில் தானும் இடம்பெற வேண்டும் என நினைத்து அதன் அனைத்து கோரிக்கைகளுக்கும் ‘ஓ.கே’ சொல்பவர்கள்... இதை ஒரு நிமிடம் படிக்கவும்.
 
 
இன்று ஃபேஸ்புக்கை திறந்தவுடன் உங்கள் அனைவருக்குமே ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும். அதில், ’உங்கள் நண்பர் ஃபேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் சேவையை ஆதரிக்கிறார். நீங்களும் ஆதரவை தெரிவிக்கலாமே!’ என்றொரு செய்தி வந்திருக்கும். க்ளிக் செய்து உள்ளே சென்றால், அனைத்து உணவுகளும் பரிமாறப்பட்ட இலை போல, நமது பெயர், செய்திக்கான தலைப்பு வரி, நாம் ஆதரவு தெரிவிக்கிறோம் என்பதற்கான செய்தி அனைத்துமே எழுதப்பட்டு, நீங்கள் க்ளிக் செய்தால் மட்டும் போதும் என்ற அளவுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறது ஃபேஸ்புக்.
 
 
அதில் கூறப்பட்டிருப்பதை நம்மால் எடிட் செய்யவும் முடியும், வேண்டுமென்றால் உங்களால் எதிர்ப்பு தெரிவிப்பதையும் பதிவு செய்ய முடியும். ஆனால் இந்திய மக்களில் பெரும்பாலானோர் இணையத்தில் பாலிசி விஷயங்களை எடிட் செய்யாமல் சம்மதிக்கும் மனநிலை கொண்டவர்கள் என்கிறது ஒரு ஆய்வு முடிவு. அதை உணர்ந்திருக்கிறது ஃபேஸ்புக்.
 
என்ன கேட்டாலும் இந்தியர்கள் சரி சொல்லிவிடுவார்கள் என்று கணித்தே, தேன் தடவிய வார்த்தைகளில் அதன் அறிவிப்புகள் வெளியாகும். ஃப்ரீ பேசிக்ஸ் தொடர்பான அறிவிப்பில் கூட, ’ட்ராயிடம் உங்கள் அனுமதியுடன் உங்கள் பெயர், இ-மெயில் முகவரியை தெரிவித்துக் கொள்ள சம்மதம்’ என்று போகிற போக்கில் நம் அனுமதியையும் பதிந்து கொள்கிறது. தனிநபர் விவரங்களை பகிர விருப்பமில்லாதவர்கள் இதன் மூலம் தனது தகவலை அரசுக்கு பகிர முன்வருவார்களா? என்ற கேள்விகளை எழுப்புகிறது.
 
ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களை இணைப்பில் வைத்திருக்க இது போன்ற செயல்களை செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அதனால் ஃபேஸ்புக்கின் அனைத்து செயல்களையும் நாம் விழிப்புணர்வோடு படித்து பார்த்துதான் பதிவிடுகிறோமா? என நெட்டிசன்களிடம் கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் இங்கே...!
  
 
ஃப்ரீ பேசிக்ஸ் என்றால் என்ன?
 
ஃப்ரீ பேசிக்ஸ் என்பது ஒரு சில அடிப்படை இணைய  சேவைகளை,  இன்டெர்நட்.ஆர்க் அமைப்பு மூலம் இலவசமாக வழங்க ஃபேஸ்புக் ஏற்படுத்தியிருக்கும் சேவை. இது குறித்த சில பதிவுகளையும் அதனால் எப்படி மக்கள் பயனடைந்துள்ளார்கள் என்பதையும், மார்க் சக்கர் பெர்க் அவ்வப்போது தனது பதிவில் தெரிவித்து வருகிறார்.
 
சர்ச்சை:
 
அடிப்படை இணைய சேவையை மட்டும் ஃபேஸ்புக் இலவசமாக ஃப்ரீ பேசிக்ஸ் மூலம் வழங்கும் என்றால், எவையெல்லாம் அடிப்படை சேவை, அடிப்படை சேவை அல்லாதவை எவ்வளவு கட்டணத்தில் வழங்கும், இன்று நாம் பயன்படுத்தும் சேவைகளில் அத்தியாவசியமான தளங்கள் கட்டணமாக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இன்னும் ஃபேஸ்புக் தரப்பு சரியான விளக்கத்தை அளிக்கவில்லை. அதனால் ஃபேஸ்புக் சொல்லும் விஷயத்துக்கு எல்லாம் அப்படியே சரி என்று கூறிவிட வேண்டும் என்ற அவசியமில்லை.
 
ஆக, அலர்ட் மக்களே...!
 
- ச.ஸ்ரீராம்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ